சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,
இந்தியப் பிரதமர் மோடி சவூதி முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார் என்றும், இலங்கையின் உயரிய குடிமகன் விருதான ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதைப் பெற்ற அவர், இலங்கையின் நீண்டகால நண்பராக விளங்குகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையின் ‘ஸ்ரீலங்கா ரத்னா’ விருதைப் பெற்ற உங்கள் நண்பரான பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் மிகவும் ஆபத்தான நிலையைக் அவசரமாகக் கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.










