மேல் மாகாணத்தில் 112 மெட்ரோ பஸ்கள் சேவையில் இணைப்பு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 112 மெட்ரோ பஸ்களை மேல் மாகாணத்தில் உள்ள 7 வீதிகளின் ஊடாக சேவையில் இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (29) முற்பகல் தலங்கம மெட்ரோ பஸ் டிப்போ வளாகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நவீன மெட்ரோ பஸ் சேவையை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து துறைக்கு நவீன பஸ் சேவையை அறிமுகப்படுத்துவதற்காக வசதியான தாழ்தள 100 பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கமைய, நாட்டை வந்தடைந்த 104 பஸ்களும், ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 08 பஸ்களும் இன்று முதல் இவ்வாறு சேவையில் இணைக்கப்பட்டன.

இந்தப் புதிய பஸ்கள் கொழும்பை மையமாகக் கொண்ட 7 வீதிகளின் ஊடாக இயக்கப்படுவதுடன், பயணிகள் குறிப்பிட்ட வீதிகள் மற்றும் நேர அட்டவணைகளின்படி தங்களது செல்லிடங்களை சென்றடையும் வகையில் சேவைகள் செயற்படுத்தப்படும்.

கொழும்புக்குள் பிரவேசிக்கும் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் குறிப்பாக ஒருவர் மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் இந்தப் புதிய பஸ் சேவையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.

குறித்த பரிந்துரையை யதார்த்தமாக்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ டிரான்சிட் (தனியார்) நிறுவனம் (LANKA METRO TRANSIT PVT), தற்போது திட்டமிடல், கொள்முதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பரிசோதனை செயற்பாட்டு கட்டங்கள் ஊடாக முன்னேற்றங்களை எட்டியுள்ளது.

அதற்கமைய, ஆரம்பகட்ட மெட்ரோ பஸ் வீதி வலையமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதோடு , அது 7 பிரதான வீதிகளை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட உள்ளதோடு முழு வீதி அணுகளின் நீளம் சுமார் 188.7 கி.மீ. ஆகும்.

மேலும், மெட்ரோ பஸ் பயணங்களுக்குத் தேவையான முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் கட்டமைப்புத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கொள்முதல் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டமைப்பின் ஊடாக நவீன பஸ் முகாமைத்துவம் , பயணிகளின் தகவல், கட்டண அறவீடு மற்றும் செயற்பாட்டுக் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு ஒத்துழைப்புப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இணையாக, மெட்ரோ பஸ் டிப்போக்களுக்கான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் ஊடாக பஸ் நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் இத்திட்டம் இலங்கையின் பல முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இங்கு உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

இன்று முதல் நகர்ப்புற போக்குவரத்திற்காக 112 பஸ்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், இந்நாடு பயணிக்கும் திசையைக் காட்டும் ஒரு குறியீடாக இந்த நிகழ்வை அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

இந்நாட்டின் இலவச சுகாதார சேவை மற்றும் கல்விச் சேவை ஆகியவற்றிற்கு சமமான மட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவையையும் உயர்த்த வேண்டும் என்று கடந்த நாட்களில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார். அவரின் அந்த ஊக்குவிப்பு இன்று இந்த நடவடிக்கைக்கான பாரிய சக்தியாக அமைந்துள்ளது.

மெட்ரோ சேவையை நிறுவுவதற்காக அரசாங்கம் சுமார் 7.5 பில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஒரு புறம் இது நாட்டின் பொருளாதார பலத்தின் அடையாளம் என்றும் கூற வேண்டும். இந்த அரசாங்கத்தின் 2 ஆண்டுப் பயணத்தின் லிட்மஸ் பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

இந்த வேலைதிட்டத்திற்காக நாம் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தையே எடுத்துக்கொண்டோம். 356 நாட்கள் போன்ற காலப்பகுதிக்குள் அனைத்து சுற்றறிக்கைகளையும் பின்பற்றி நாம் ஒரு பெரிய சவாலை வென்றுள்ளோம்.

சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 50 பஸ்களைக் தருவித்து யாழ்ப்பாணம், கண்டி மற்றும் காலி நகரங்களில் சேவையில் ஈடுபடுத்தவும் எதிர்பார்க்கிறோம். நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தை அடைவதற்காக மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும்போது, நகர்ப்புற போக்குவரத்து அனுமதிப் பத்திர முறையைப் பயன்படுத்த வேண்டும்.

அதன் பிறகு இதில் தனியார் துறையையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கிறோம். அத்துடன் Park & Ride முறையை மேம்படுத்துவதற்காக, தொடர்புடைய பஸ் தரிப்பிடங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதற்குப் பொருத்தமான இடங்களை அமைத்துத் தருமாறு நகராதிபதிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், இந்த பஸ் திட்டத்தைத் தொடங்குவதற்காக 8 பஸ்களை வழங்கி ஜப்பான் அரசாங்கம் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

அதேபோல் ஜனாதிபதி சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக, மெட்ரோ நிறுவனத்திற்கு 100 பஸ்களை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் உட்பட, இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles