திடீர் வெள்ளப்பெருக்கு: லிந்துலை நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

 

இன்று (01) பிற்பகல் 2 மணியளவில் திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், லிந்துலை நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலய வளாகத்துக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக நாளை (02) வெள்ளிக்கிழமை பாடசாலையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நு/ மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கிருஷ்ணராஜா கருத்துத் தெரிவிக்கையில்:

“நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1-இன் கீழ் இயங்கும் எமது பாடசாலைப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பாடசாலை வளாகம், வகுப்பறைகள், கணினி அறை மற்றும் பிரதான மண்டபம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்து, சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது.

இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாளை பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வளாகத்தை முழுமையாகச் சுகாதார நடைமுறைகளின்படி சுத்திகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாடசாலை மீண்டும் வழக்கம் போல் இயங்கும். நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையின் போது எமது பாடசாலை வளாகத்திற்குள் மழை வெள்ளத்துடன் சேறும் சகதியும் புகுந்து விடுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வாகப் பாடசாலைப் பகுதியில் கால்வாய்களை முறையாக அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles