இஸ்ரேல் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான நேஷன்ஸ் லீக் (Nations League) கால்பந்து போட்டிக்கு முன்னதாக செர்பியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலிய செய்தியாளர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு, செய்தியாளர் சந்திப்பு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
காசா மோதல் காரணமாக அயர்லாந்தில் இப்போட்டியைப் புறக்கணிக்கக் கோரிப் போராட்டங்கள் வெடித்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போட்டி செர்பியாவில் உள்ள பாக்கா தோப்போலா நகரில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்ரேலிய செய்தியாளர் ஒருவர் அயர்லாந்து பயிற்றுநர் ஹெய்கிர் ஹால்கிரிம்சனிடம் (Heimir Hallgrimsson) சமீபத்தில் நடைபெற்ற பிளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
“கொலைவெறி சித்தாந்தத்தைக் கொண்டவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” எனக் காட்டமாக வினவினார்.
உடனடியாகத் தலையிட்ட அயர்லாந்து கால்பந்து சங்கத்தின் (FAI) ஊடக அதிகாரி கீரன் க்ரௌலி, விளையாட்டு தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும், மற்றொரு இஸ்ரேலிய செய்தியாளர், “அயர்லாந்து வீரர்கள் இஸ்ரேலிய வீரர்களை ‘குரங்குகள்’ எனக் கூறி இனவெறி ரீதியாகத் தூற்றினர்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த அயர்லாந்து ஊடக அதிகாரி, “இது முற்றிலும் பொய்யான தகவல்” எனத் திட்டவட்டமாகக் கூறிச் செய்தியாளர் சந்திப்பை உடனடியாக முடித்துக்கொண்டார்.
செய்தியாளரிடமிருந்து ஒலிவாங்கியைக் கைப்பற்ற முயன்றபோது அங்கு வாக்குவாதம் முற்றியது. பின்னர், தன் மீதான இந்த ‘வார்த்தைத் தாக்குதல்’ குறித்துக் கருத்து தெரிவித்த அயர்லாந்து பயிற்றுநர் ஹால்கிரிம்சன், இந்தச் சவாலான சூழலிலும் அணி வீரர்கள் களத்தில் கவனம் செலுத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்தும், தேசிய கீதத்தின் போது தலைகுனிந்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில், முதல் போட்டியின் போது அயர்லாந்து வீரர் ஆடம் இடா (Adam Idah) மீது இஸ்ரேலிய ஆதரவாளர்கள் இனவெறி கருத்துகளைக் கூறியதாக எழுந்த புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஒக்டோபர் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
