பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அங்கிருந்து, இவ்விவகாரம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வாசித்து காட்டினார்.
“பௌத்த துறவிகளின் துறவற ஆடையை அவர் சார்ந்த பௌத்த பீடமே அகற்ற முடியும்.
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரியே மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பி இருந்தனர். மாறாக அவரை சிறையில் அடைக்கவோ அல்லது துறவற ஆடையை அகற்றுமாறோ தேரர்கள் கோரவில்லை.
நீதிமன்ற தீர்ப்புக்கமைய ஞானசார தேரர் மீண்டும் சிறைக்கு அனுப்பட்ட பிறகு, நீதி அமைச்சு, மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். அதற்பிறகே முடிவுகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் ஞானசார தேரர் குறித்து எடுக்கப்பட்ட முடிவால் பௌத்த மதத்துக்குரிய சுதந்திரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.” என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு திரும்பிய பிறகு இவ்விவகாரம் பற்றி ரணில் விக்கிரமசிங்க மேலதிக தகவல்களை வெளியிடுவார் எனவும் அவர் கூறினார்.










