76 வருடகால சாபம் யாரென்பது தெரிந்துவிட்டது: அடுத்த தேர்தலில் ஜே.வி.பி. காணாமல்போகும்

“இந்நாட்டின் 76 வருடகால சாபக்கேடு யார் என்பது மக்களுக்குத் தற்போது புரிய ஆரம்பித்துள்ளது. அடுத்த தேர்தலுக்குப் பிறகு இந்நாட்டில் ஜே.வி.பி. இருக்காது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“தனக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது எனக் கூறும் அரசாங்கம், முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். அதற்காக ஜனநாயக வழியில் அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளோம்.

எனினும், தேர்தலைக் கோரி தொழிற்சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் எனப் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம்.

இந்த அரசாங்கம் நாளாந்தம் மக்கள் செல்வாக்கை இழந்து தோல்வியடைந்து வருகின்றது. இந்நிலையில், எமது தரப்பில் ஏதேனும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றால், எங்களால்தான் ஆட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது என இந்த அரசாங்கம் காரணம் கூறும்.

76 வருடகால சாபம் எது என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர். அடுத்த தேர்தலுக்குப் பிறகு இந்நாட்டில் ஜே.வி.பி. என்ற ஒன்று இருக்காது” என்றார்.
…………

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 25 சிறப்புத் தீர்மான மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்று ஆரம்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்கள் ஆச்சல வெங்கப்புலி, சம்பத் அபயக்கோன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பல மனுதாரர்களுக்காக முன்னிலையான சட்டவாளர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், சந்தேக நபர்களைச் சோதனையிடவும் கைது செய்யவும் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் அதிகாரங்களை கணிசமாக விரிவுபடுத்துகிறது என்று வாதிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி, உதவி ஆய்வாளர் பதவிக்கு மேலான ஒரு காவல் அதிகாரியால் மட்டுமே கைது செய்ய முடியும் என்ற நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் 19-வது பிரிவானது, எந்தவொரு காவல் அதிகாரி, ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினர் சோதனையிடவும் கைது செய்யவும் அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

37-வது பிரிவு குறித்து கவலை எழுப்பிய சட்டவாளர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சட்டமா அதிபரின் ஒப்புதல் இல்லாமல், வழக்கை முன்னெடுத்துச் செல்லப் போதுமான ஆதாரம் இல்லாத நேர்வுகளில் சந்தேக நபர்களை விடுவிக்கும் அதிகாரத்தை இந்தப் பிரிவு நீதித்துறை நடுவர்களிடமிருந்து பறித்துவிடும் என்றும் வாதிட்டார்.

இத்தகைய விதிகள், நீதிபதிகளை வெறும் “இறப்பர் முத்திரையாக” மாற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் குற்றம் செய்யத் தயாராகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மீது கட்டுப்பாட்டு உத்தரவுகளை விதிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 60 குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், மற்றொரு மனுதாரருக்காக முன்னிலையான சட்டவாளர் அலி சப்ரி, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவின் சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டமூலத்தின் பயங்கரவாத வரையறையின் பொருத்தத்திற்கு சவால் விடுத்தார்.

சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாட்டின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய வரையறையை இலங்கைச் சட்டத்தில் புகுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சப்ரி எச்சரித்தார்.

“மற்ற நாடுகளைப் போல சட்டம் இயற்றப்பட்ட பின்னரான மறுஆய்வு எங்களிடம் இல்லை. சட்டங்கள் இயற்றப்பட்டவுடன், அவை சட்டமாகி விடுகின்றன.

இந்த விதிகளை கவனமாக ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு, நீதியரசர்கள், நீதிமன்றத்திற்கு இப்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
……….

கோதுமை மா விலை அதிகரிப்பு: அடுத்து பாண்?

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கோதுமை மா இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த புதிய விலை அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை (20) நள்ளிரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் நிலவரங்கள் மற்றும் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டே இந்த விலை உயர்வை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விரைவில் கூடி ஆலோசித்து தீர்மானிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
…………

கொஸ்லந்தையில் கஞ்சா சேனை முற்றுகை: 8,500 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது!

கொஸ்லந்த, அலுத்வெல உஸ்ஸெல்ல பகுதியில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த 8,500 கஞ்சா செடிகளுடன் 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி பிற்பகல் முன்னெடுக்கப்பட்டதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஊவா குடாஓயா, பலஹருவ, உஸ்வெல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உஸ்வெல்ல விகாரைக்கு அருகில் ஓடும் நீரோடையை எல்லையாகக் கொண்டு, சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு சுமார் ஆறு அடி உயரம் வரை செழிப்பாக வளர்ந்திருந்த 8,500 கஞ்சா செடிகளைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பண்டாரவளை பிரிவுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் பெர்னாண்டோ மற்றும் பண்டாரவளை பிரிவு 2-க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், கொஸ்லந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஓசத சிந்தக சுபசிங்கவின் வழிகாட்டலில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் உப பொலிஸ் பரிசோதகர் பிரபாஷ், பொலிஸ் சார்ஜன்ட் ரத்நாயக்க (66608), பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியலால் (24543), பொலிஸ் சார்ஜன்ட் சிரிமல் (11332) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் காவிந்த (26645) ஆகியோர் பங்கேற்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(த.டிமேஷன்)
…………….

பசறை படால்கும்புர வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்

பசறை – படால்கும்புர பிரதான வீதியில், தொலம்புவத்தை இரண்டாம் கட்டைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மணல் ஏற்ற சென்ற லொறியுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து இன்று (21) காலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்த விபத்தில், படால்கும்புர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

படால்கும்புர பகுதியில் இருந்து பதுளை பகுதிக்கு வேலைக்குச் சென்ற நபர் பசறை பக்கம் இருந்து படால்கும்புர பக்கம் சென்றுகொண்டிருந்த லோரியும் நேருக்கு நேர் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முதலில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
…………..

100 ரூபா இலஞ்சம் பெற்ற நேரக் கண்காணிப்பு அதிகாரி கைது

100 ரூபாய் இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய அலுவலகத்தைச் சேர்ந்த நேரக் கண்காணிப்பு அதிகாரி (Time Keeper) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (20) நண்பகல் 12.25 மணியளவில் ரத்தோலுகம பேருந்து நிலையத்தில் உள்ள நேரக் கண்காணிப்பாளரின் அறையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

188 எண்ணுடைய வீதி வழியில் ரத்தோலுகமவிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் பேருந்து ஒன்றின் பயண நேரத்தை குறித்த நேரத்தில் தொடங்காமல் தாமதித்துத் தொடங்குவதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்கும், சாதகமான முறையில் பயண நேரத்தைத் தொடங்குவதற்கு அனுமதிப்பதற்கும் சந்தேகநபர் குறித்த பேருந்தின் ஊழியர் ஒருவரிடமிருந்து 100 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
…………….

காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு

நாட்டின் தேசிய இயற்கை பாரம்பரியமான காவந்திஸ்ஸ யானையின் துயரமான மரணம் குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரின் பொறுப்புகளும் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், அந்த யானைக்காக நீதியை நிலைநாட்டுவதற்கும் பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி சபாநாயகரிடம் பிரேரணையொன்றை கையளிப்பதற்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதன் பிரகாரம், குறித்த இந்த பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று (21) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினது பங்கேற்புடன் இடம்பெற்றது.
………….

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

…………

சுகீஷ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டார, எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
…………

6 ஆவது நாளாக தொடரும் பிக்குகளின் போராட்டம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று(21) ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் விஹாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles