சிறைச்சாலை நரகம்: நாமல் ராஜபக்ச கவலை!

செம்மணி அறிக்கை சந்தேகத்துக்குரியது: சர்வதேச விசாரணை வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

செம்மணி மனித எச்சங்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னமும் முழுமைபெறாத சூழலில், அது குறித்து அரசு எவ்வித நேர்மையான அக்கறையுமின்றிப் பணிகளைக் காலதாமதம் செய்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:-

“2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் 110 நாள்களாக செம்மணி – சித்துப்பாத்தியில் பல மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இந்த அகழ்வுப் பணி இன்னமும் முழுமைபெறவில்லை. இலங்கையில் இதுவரை பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், செம்மணிப் புதைகுழியே மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிருஷாந்தி படுகொலை விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணிப் பகுதியில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த இடங்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அன்றே கூறியிருந்தார்.

ஆனால், அப்போதிருந்த சந்திரிகா அரசோ அல்லது அதன் பின்னர் வந்த அரசுகளோ அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சித்துப்பாத்திப் பகுதியில் கட்டடக் குழி தோண்டியபோதே இந்த மாபெரும் மனிதப் புதைகுழி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த அறிக்கையில், இயற்கை இடர்பாட்டினால் அல்லது தொற்றுநோயினால் நிகழ்ந்த இறப்புகள் காரணமாக இப்புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் நிபுணரான அவருக்கு யாழ். மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னரோ அல்லது விடுதலைப்புலிகளின் காலத்துக்குப் பின்னரோ பாரிய பெருந்தொற்றுகளோ ஏற்படவில்லை என்பது தெரியும்.

சுனாமியால் இறந்தவர்கள் கடற்கரைப் பகுதிகளிலேயே புதைக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. தமிழ் மக்கள் இயற்கை மரணங்களையோ அல்லது தொற்றுநோய் மரணங்களையோ தழுவினால் இறுதிச் சடங்குகளின் பின் தகனம் செய்வார்களே தவிர, செம்மணியில் கொண்டுவந்து புதைக்க மாட்டார்கள். மேலும் செம்மணிப் பகுதி கிறிஸ்தவ மயானமும் அல்ல.

அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் வெட்டுக் காயங்களும் சித்திரவதைகளுக்கான தடயங்களும் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. போர்க் காலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசும், படையினரையும் முந்தைய ஆட்சியாளர்களையும் காப்பாற்றுவதிலேயே மும்முரமாக உள்ளது.

எனவே, சர்வதேச விசாரணையின் மூலமாகவே செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதி சாத்தியமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” – என்று அந்த அறிக்கையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

………

பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமிழ், முஸ்லிம், மலையகப் பிரதிநிதிகளுடன் சஜித் கலந்தாய்வு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலைமையால் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விவரங்கள் கேட்டறியப்பட்டன.

குறிப்பாக, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களினது குடும்பப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் போலவே, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் இம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டன.

தரமான சுகாதார சேவைகளுக்கான பிரவேசம், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமாலெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான், கவீந்திரன் கோடீஸ்வரன், காதர் மஸ்தான் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் இன்றைய இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

………….

நாட்டில் மீண்டும் பலத்த மழை

நாட்டில் மழையுடனான வானிலை இன்று(22) முதல் மீண்டும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை அண்மித்து நிலவிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்களால் எற்படும் பாதிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

………

டிப்பர் மோதி வயோதிபர் பலி! யாழில் சோகம்

யாழ்ப்பாணம் – இணுவில், காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை, இணுவில் பகுதியிலுள்ள ஆலய வாசலுக்கு அருகில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வயோதிபர் மீது அதிவேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மேற்படி வயோதிபர், சிகிச்சை பலனின்றிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

………….

நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அபாய இடங்கள்

பலத்த மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி-அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த மாதம் 3 ஆம் திகதி முதல் இதுவரையில் 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேபோல், முன்னர் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தின் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சில இடங்களில் பாறைகளும் மண் அடுக்குகளும் தற்போதைய மழையுடன் அவை அடித்துச் செல்லப்படும் கடும் அபாயம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

ஒரு பகுதிக்குக் குறைந்தளவு மழைவீழ்ச்சி பதிவான போதிலும், கடந்த சில நாட்களில் பெய்த மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

…………

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் 02 ஆம் அலகு அதன் முழு உற்பத்தித் திறனான 270 மெகாவாட் (MW) திறனை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, இன்று (22) முதல் தினசரி மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என NSO அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், குறித்த மின் உற்பத்தி அலகு பிற்பகல் 1:31 மணிக்கு மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டியதை உறுதிப்படுத்திய NSO, இதன்காரணமாக அக்டோபர் 19 முதல் 21 வரை நடைமுறைப்படுத்தப்பட்ட மின் தேவை மேலாண்மை நடவடிக்கைகளை இடைநிறுத்த முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக அக்டோபர் 19 ஆம் திகதி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அக்டோபர் 21 வரை மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் திட்டமிடப்பட்ட மின்தடைக்கு அனுமதி அளித்திருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின் கீழ், நாடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையான காலப்பகுதிக்குள் தினமும் ஒரு மணி நேர மின்தடை அமல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

………..

ரியாத், தம்மாமுக்கான விமான சேவைகள் நவம்பர் 01 வரை ரத்து 

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு மற்றும் தம்மாம், கொழும்பு மற்றும் ரியாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளுமான இடைநிறுத்தம் 2026 நவம்பர் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினரின் பாதுகாப்பே தங்களது முதன்மை முன்னுரிமை எனத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், வணிக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஏதுவான சூழல் நிலவுவது மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பயணிகள், இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலோ அல்லது சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்திலோ தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், +94 74 444 1979 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் வழியாகவோ, தங்களது பயண முகவர்கள் (Travel agents) மூலமாகவோ அல்லது www.srilankan.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டோ தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

………..

உலக சந்தையில் எகிறியது கச்சா எண்ணெய் விலை: இலங்கையில் என்ன நடக்கும்?

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் மற்றும் சவூதி அரேபியா மீதான புதிய தாக்குதல்கள் காரணமாக, சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் மேலதிக தடங்கல்கள் ஏற்படும் என்ற அச்சத்திற்கு மத்தியில், வியாழக்கிழமை (22) உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடந்த மே மாதத்திற்குப் பின்னரான மிகவுயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளன.

ராய்ட்டர்ஸ் (Reuters) செய்திகளின்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 3.08 சதவீதத்தால் உயர்ந்து பேரல் ஒன்று 112.17 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 99.83 டொலராக உயர்ந்துள்ளது.

யேமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல் மற்றும் சிவிலியன் விமான நிலையம் உள்ளிட்ட இலக்குகள் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்தே இந்தத் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதுடன், அப்பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இது மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மோதல்கள் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்திற்கு மத்தியில், சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள ஏனைய தூதரகங்களில் பணியாற்றும் சில தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திரும்பப் பெற அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

தெற்கு ஈரானில் வெடிப்புகள் இடம்பெற்றதாக வெளிவந்த செய்திகளும், ஹோமுஸ் நீரிணையை சுற்றியுள்ள வர்த்தகக் கப்பல்களுக்குத் தொடரும் அச்சுறுத்தல்களும் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளன.

ஹோமுஸ் நீரிணையானது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடல் வழியாகும். அங்கு ஏற்படும் எந்தவொரு மேலதிகத் தடங்கலும் சர்வதேச எண்ணெய் விலைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்தத் திடீர் விலை உயர்வு, இலங்கை உள்ளிட்ட கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பரந்த பணவீக்க அழுத்தங்கள் குறித்த கவலைகளை மீண்டும் புதுப்பித்துள்ளது.

இருப்பினும், உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்படும் தாக்கம் என்பது சர்வதேச சந்தைப் போக்குகள், கொள்முதல் செலவுகள் மற்றும் உள்ளூர் விலை தீர்மானங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

……….

சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க நீதி அமைச்சச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கைகள்

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்காக, அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய அமைச்சர், திணைக்களத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் 1,506 அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய சட்டத் திருத்தங்களின் கீழ், பரிசோதனைக்கான பொருள் கிடைத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கையை வழங்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம், ஜூலை 1 ஆம் திகதி 41,993 ஆக இருந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் 36,925 ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம் கைதிகளின் எண்ணிக்கையில் 5,068 குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், வழக்குகளில் சான்றுகளாகக் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை வைத்திருக்காமல், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பதிவு செய்து, நீதவானின் அனுமதி பெற்று அவற்றை விரைவாக அழிப்பதற்கு ஏதுவான சட்டத் திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

…………

அரசுக்கான மக்கள் ஆணையை சீர்குலைக்க அனுமதிக்கமாட்டோம்! – தங்காலையில் பௌத்த தேரர்கள் தலைமையில் மாபெரும் பேரணி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் தங்காலையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற நான்காவது பாரிய அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எவ்வித தயக்கமுமின்றித் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைச் சீர்குலைக்கக முற்படும் தரப்புகளுக்கு எதிராகத் தங்களது பலத்தைக் காட்டும் வகையில் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

………..

அடக்குமுறைகளுக்கு மேலும் புதிய ஆயுதமா? – அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுக் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சமூகத்துக்குள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதற்கான பாரிய அபாயம் தோன்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-

“கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஆரம்ப வடிவத்துடன் ஒப்பிடும்போது சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும், நீண்டகாலமாக அடக்குமுறையாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டமூலமும் தொடர்ந்தும் மிக விரிவான மற்றும் தெளிவற்ற பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணங்களைக் கொண்டிருக்கின்றது.

அரசை விமர்சிப்பவர்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் அவ்வப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாறான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து தீவிர கவனமும் பரிசீலனையும் செலுத்தப்பட வேண்டும்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக நடைபெற வேண்டியது கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலிருந்து விலகுவதுதானேயன்றி, அதிகாரிகளுக்கு அடக்குமுறைக்காக மேலும் புதிய கருவிகளை வழங்குவதல்ல.” – என்று குறிப்பிட்டுள்ளது.

தடுப்புக் காவல் அதிகாரம் குறித்து மேலும் விவரித்துள்ள அந்த அமைப்பு,

“பயங்கரவாதம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கும், வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதி வழங்குகின்றது.

இதற்கமைய, வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர்கூட ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பதோடு, இது மனித உரிமைகளையும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையையும் கடுமையாக மீறும் செயலாகும்.” – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

……………

20 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 300 பேர் அடைப்பு: நரக வேதனை: சிறைவாசம் குறித்து நாமல் கவலை

“சிறைச்சாலை பூமியில் உள்ள நரகம்போல் உள்ளது. 20 பேர் இருக்ககூடிய இடத்தில் 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். மலசலக்கூட வசதி இல்லை. இது பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles