ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவேன்: முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

மலையக குருவியின் செய்திகளின் தொகுப்பு – பிரதான செய்திகள் ஒரே பார்வையில்

அமெரிக்கா பசுபிக் விண்வெளிப் படைகளின் குழு இலங்கை பயணம்

ஹவாயைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் பசுபிக் விண்வெளிப் படைகளின் (Space Forces Pacific) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளது.

லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா (Shumpei Fujimura) தலைமையிலான, அமெரிக்க விண்வெளிப் படைத் தூதுக்குழுவை வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், வளர்ந்து வரும் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு புதிய எல்லையைத் திறக்கிறது என்றும், அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க பசுபிக் விண்வெளிப் படை கட்டளையகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பிரிவுத் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா தலைமையிலான குழுவினர், கடந்த 19 ஆம் நாள் இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில், விமானப்படைத் தளபதி, எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தத் குழுவில் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் மத்யூ ஏ. ஹவுஸ், மேஜர் ஜோஷ் மக்அனலி, ஜேசன் ஹால் மற்றும் சாட் போலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த சுமுகமான சந்திப்பின் போது, இலங்கை விமானப்படைக்கும் அமெரிக்க பசுபிக் விண்வெளிப் படை கட்டளையகத்திற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொழில்முறை ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த குழுவினரின் பயணம் இலங்கை விமானப்படைக்கும் அமெரிக்க விண்வெளிப் படை பசுபிக் கட்டளைக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ச்சியான தொழில்முறைப் பரிமாற்றங்கள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் அறிவுப் பகிர்வு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியிருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க விண்வெளிப் படை பசுபிக் (SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புத் தலைவர் லெப். கேணல் ஷும்பேய் புஜிமுரா தலைமையிலான குழுவினர் 21ஆம் நாள் தெற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்திற்கு சென்று, தெற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பகுதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

……….

காவந்திஸ்ஸ யானையின் மரணம்: தெரிவுக்குழு கோரும் யோசனை கையளிப்பு

‘காவந்திஸ்ஸ’ யானையின் இறப்பு குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிர்க்கட்சியினால் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்று கோரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் முன்மொழிவு இன்று (23) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து ஆராய்வது போன்று, தற்போது வாழும் யானைகளின் தலைமுறையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் என்றும் இங்கு தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக பாராளுமன்றக் குழுவானது கட்சி பேதமின்றி இணைத் தலைமையின் கீழ் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதால், காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து ஆராயும் இந்தக் குழுவையும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையின் கீழ் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதன்போது சபாநாயகரிடம் முன்மொழிந்தார்.

………….

மலையக வீதிகளில் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பு வேலிகள்!

அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ், மலையகத்தின் ஆபத்தான வீதிப் பகுதிகளில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துகளால் பலர் காயமடைவதுடன், பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

சாரதிகளின் கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விபத்துகள் இடம்பெறுகின்ற போதிலும், மலையகப் பகுதிகளில் ஆபத்தான வளைவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளைக் கொண்ட வீதிகளில் முறையான பாதுகாப்பு வேலிகள் இல்லாமையும் விபத்துகளுக்கான முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.

மலையகத்தின் பல வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ள போதிலும், ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால், எதிரெதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் சந்தர்ப்பங்களில் சில வாகனங்கள் வீதியை விட்டு விலகிப் பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், வீதி விபத்துகளைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மலையகத்தின் ஆபத்தான வீதிப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தலவாக்கலை – டயகம பிரதான வீதியிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையின் மூலம் ஆபத்தான வீதிப் பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையக வீதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்த மக்கள், தற்போது முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

வீதிப் பாதுகாப்பு என்பது வெறுமனே கட்டுமானப் பணியல்ல; அது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். எனவே, மலையகத்தின் ஏனைய ஆபத்தான வீதிப் பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

…………

பஸ் விபத்தில் இருவர் உயிரிழப்பு – 14 பேர் காயம்

புத்தளம், சாலியவெவ 19ஆம் மைல்கல் அருகே நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ், மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து, மின்கம்பத்திலும் மோதிய பஸ் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் 17ஆம் மைல்கல் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

…………..

பாரா ஒலிம்பிக் இலங்கைக்கு இரு பதக்கங்கள்

ஜப்பான் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்றுவரும் 2026 ஆசிய பாரா ஒலிம்பிக் ஒலிம்பிக் (Asian Para Games) விளையாட்டு விழாவில், இலங்கை இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜானனி தனஞ்சன விக்ரமசிங்க மற்றும் பிரதீப் சோமசிரி ஆகியோர் தங்களது பந்தயங்களில் முதலிடம் பிடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

மகளிருக்கான T47 நீளம் தாண்டுதலில் போட்டியிட்ட ஜானனி தனஞ்சன விக்ரமசிங்க, புதிய ஆசிய பாரா ஒலிம்பிக் ஒலிம்பிக் சாதனையுடன் (Games Record) 5.52 மீட்டர் தூரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்.

இதனிடையே, ஆண்களுக்கான T46 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் களமிறங்கிய பிரதீப் சோமசிரி, ஆசியாவின் பலத்த போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலாவதாக வந்தடைந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இப்போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்தையும், பிலிப்பைன்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.

…………

3 நாட்களில் 350,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க திட்டம்

 

நாட்டில் அடுத்த மூன்று நாட்களில் 350,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3,900 மெற்றிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயுவை ஏற்றி வந்த ‘கொரின்தியன்’ என்ற கப்பல் நேற்று வியாழக்கிழமை (22) நாட்டை வந்தடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நேற்றையதினம் மாலை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, சந்தைக்கு 350,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த எரிவாயுக் சரக்கின் வருகையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும், நுகர்வோர் வழக்கம் போல் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்ய முடியும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் தேவையற்ற முறையில் அச்சமடைந்து எரிவாயு சிலிண்டர்களை மேலதிகமாகக் கொள்முதல் செய்வதையோ அல்லது சேமித்து வைப்பதையோ தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

………

08 ஆவது நாளாக தொடரும் பிக்குகளின் போராட்டம்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (23) 08 ஆவது நாளாக தொடர்கின்றது.

கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.பயண வழிகாட்டி

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நேற்று (22) வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

………….

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும்
உலோகங்களும்  சவப்பெட்டிகளுக்குரியவை….!

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் அவர் முன்வைத்துள்ள தடயவியல் பகுப்பாய்வு அறிக்கையின் ஒரு பகுதியில் உள்ள விடயங்களின் சாரம்சமாவது:-

“செம்மணிப் புதைகுழி அகழாய்வின்போது உடற்கூறியல் தொடர்பிழந்த பல என்புக் குவியல்கள் இருந்தன. அந்த என்புக் குவியல்களுடன் ஆணிகள், உலோகத் துண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன. இவை முன்னர் சவப்பெட்டிகளைக் கொண்டிருந்த புதைகட்டமைப்புகளுடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.

இந்தக் கண்டுபிடிப்புகள், உடற்கூறியல் தொடர்பு இழந்த சில எலும்புத் தொகுப்புகள், பின்னர் மேற்கொள்ளப்பட்ட புதைகுழி தோண்டும் நடவடிக்கைகளால் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாக உருவாகியிருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே இருந்த புதைகுழிகளைச் சீர்குலைத்து, எலும்புக்கூட்டு எச்சங்கள் இடம்பெயர்வதற்கும் வேறு இடங்களில் இரண்டாம் நிலையாகக் குவிவதற்கும் காரணமாகியிருக்கலாம்.” – என்றுள்ளது.

………….

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால்
நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்! 

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.”

– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அனோஜன் விவகாரத்தில் நாடு என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளோம். ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அனோஜன் விவகாரத்தில் வேதனையடைந்த நிலையில், அனைவரின் மனங்களுக்கும் சவூதி அரசு ஆறுதலளித்துள்ளது. சவூதி இராச்சியத்துக்கும் அந்த நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கும் அரசு சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனோஜனைப் பாதுகாப்பதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். சவூதிக்குச் சென்ற இலங்கையின் சட்டப் பிரதிநிதிகள் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தற்போது பேசப்படுகின்றது. இந்த விடயம் உணர்வுபூர்வமானது மற்றும் கொடுமையானது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படவில்லை. அகழ்வுப் பணிகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே போதுமான நிதி ஒதுக்கப்பட்டதுடன், முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம்.

மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த அறிக்கை தனிநபர் ஒருவரால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை. நீதிபதிகளின் கண்காணிப்பில்தான் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசியப் பொறிமுறைக் கட்டமைப்பு பலவீனமடையும் சந்தர்ப்பத்தில்தான் சர்வதேச பொறிமுறையை நாட வேண்டும். ஆகவே, இந்த விடயத்தில் தேசியக் கட்டமைப்பு வலுவானதாகவே காணப்படுகின்றது. ஆகவே, தனிப்பட்ட நபரின் பெயர்களைக் குறிப்பிட்டுச் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அது எதிர்காலச் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமையும்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.

ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.” – என்றார்.

………..

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவேன்: முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

“லக்ஸ்மன் கிரியல்ல வெளியிட்ட கருத்து தவறு. அந்த கூற்றுடன் கட்சி உடன்படவில்லை. கட்சி உயர்மட்ட கூட்டத்தின்போது இது பற்றி பேசப்படும். எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது. இனவாதத்தை ஒழிக்க வேண்டும் , அனைத்து இன மக்களும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளோம்.

இந்த கொள்கையில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி விலகினால், நாமும் அக்கட்சியில் இருக்கமாட்டோம். அரசியல் கட்சியென்பது மதம் கிடையாது. கட்சியை விட்டு வருவது பெரிய விடயமாக அமையாது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

 

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles