06 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்வரும் 06 ஆம் திகதி பாரிய போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கப் பிரமுகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறைச் சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
………….
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது பாராளுமன்றம்

வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றம் நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி வரை சபை அமர்வுகள் நடைபெறவுள்ளன.
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இவ்வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இவ்வாரம் குறித்த பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடர் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளதுடன், டிசம்பர் மாதம் முதல் ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த ஆண்டுக்குள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரியவருகிறது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாளைய நாடாளுமன்ற அமர்வில் கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
அத்துடன், பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்வதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
………….
“அரசைப் பாதுகாக்க அல்ல; ஆட்சியாளர்களைக் காப்பாற்றவே புதிய சட்டங்கள் – சஜித்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, உண்மையில் ஆட்சியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சட்டங்கள் மூலம் நீதித்துறையின் அதிகாரங்கள் நிறைவேற்று அதிகாரத்துக்கு மாற்றப்படுவதுடன், கருத்துச் சுதந்திரம், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் போராட்ட உரிமைகளும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் நேற்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க நிகழ்வில் உரையாற்றிய அவர், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் தற்போது அதனை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும் விமர்சித்தார்.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும், நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காததால் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்த தேசிய விவசாயத் திட்டமொன்றை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
……….
ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உப தலைவராக ஷெவான் டெனியல் தெரிவு

உலகின் விசாலமான ஊடக அமைப்பான ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உப தலைவராக கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் 63 வருட கால வரலாற்றில் இலங்கையர் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தில் 66 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
அந்த நாடுகளை சேர்ந்த 225 முன்னணி ஒளிபரப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் இந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் ஊடகத்துறைகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல இதில் அடங்குகின்றன.
சங்கத்தின் புதிய தலைவராக ஜப்பானின் NHK-இன் யமனா ஹிரோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி ஒலிபரப்பு நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான ABC Australia, சங்கத்தின் உப தலைவர் பதவிக்கு ஷெவான் டெனியலின் பெயரை முன்மொழிந்தது.
ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான NHK நிறுவனம் அந்தப் பரிந்துரையை உறுதிப்படுத்தியது.
………….
பசறை நகரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு; வியாபாரிகள் விசனம்!

பசறை நகரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நகரின் பிரதான வீதிகள், வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும், மக்கள் நடமாடும் பகுதிகளிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக மாடுகள் நிற்பதுடன், சில சந்தர்ப்பங்களில் கடைகளுக்கு அருகிலுள்ள பொருட்களையும் சேதப்படுத்துவதால் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வீதிகளில் மாடுகள் திடீரெனக் குறுக்கிடுவதால் வாகன சாரதிகளும் பாதசாரிகளும் விபத்து அபாயத்தை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பையும் நகரின் ஒழுங்கையும் கருத்திற்கொண்டு, கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
— த. டிமேஷன்
………….
வீதியை விட்டு விலகி வீட்டுக்குள் புகுந்த பேருந்து! ஹாலிஎலையில் விபத்து

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல, போகஹமடித்த பகுதியில் இன்று (02) அதிகாலை பேருந்தொன்று வீதியை விட்டு விலகி, வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளை நகரிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வந்து மாணவர்களை இறக்கிவிட்ட பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
— த. டிமேஷன்
…………
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக எல்லையில் புதிய விடுமுறை விடுதி திறப்பு!

எல்லை பொலிஸ் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயன்பாட்டுக்காகப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘எல்ல ரொக் வியூ’ விடுமுறை விடுதி, கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பண்டாரவளை பொலிஸ் பிரிவில் புதிதாகப் பூர்த்தி செய்யப்பட்ட மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனைய இரண்டு திட்டங்களாக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஹல்துமுல்ல பொலிஸ் நிலையத்துக்கான விரிவுரை மண்டபம் ஆகியன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கான வாடகை வீடுகளுக்காக அரசாங்கம் நீண்டகாலமாகச் செலவிட்டு வரும் நிதியைக் குறைக்கும் நோக்கிலும், பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திறப்பு விழாவில், ஊவா மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பொலிஸ் உதவிச் சேவைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த மற்றும் மொனராகலை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
………….
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. தீர்மானங்கள் தமிழிலும் சிங்களத்திலும் வெளியீடு!

பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325 இன் 26ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இம்மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மொழிபெயர்க்கப்பட்ட தீர்மானங்களின் அச்சுப் பிரதிகளும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
கனடா அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘பாத்வேஸ் டு பீஸ்’ அமைப்பு இந்த மொழிபெயர்ப்புகளைத் தயாரித்துள்ளது.
பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மோதல்களைத் தடுத்தல், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களில் பெண்களின் சமமான பங்களிப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை இந்தத் தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன.
சர்வதேசக் கொள்கைகள் தாய்மொழிகளில் கிடைப்பது, பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் பங்கேற்பையும் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
………..
