மீதும்பிட்டியிலிருந்து பசறை நோக்கி முச்சக்கர வண்டியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற பசறை பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பசறை – டெமேரியா பி பிரிவு, மீதும்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் குறித்த நபர் போதைப்பொருட்களுடன் பசறை நோக்கி வருவதாகப் பசறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அவர் பயணித்த முச்சக்கர வண்டியை இடைமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியையும் சந்தேக நபரையும் சோதனைக்கு உட்படுத்திய போது, சந்தேகநபரிடமிருந்து 63 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 30 மில்லிகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண மற்றும் பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னசிறி பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், உப பொலிஸ் பரிசோதகர் சித்திக் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஹேரத் (90057) ஆகியோர் இணைந்து சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
த.டிமேஷன்
