மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து, கஞ்சா கலந்த மதன மோதகத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று (04.11.2026) மஸ்கெலியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரின் ஆயுர்வேத மருந்தகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, கஞ்சா கலந்ததாகக் கூறப்படும் 386 மதன மோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து, சந்தேக நபர் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.

அவரது அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் சார்ஜன்ட் சமீரா (35630) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கீதன் (100772), விக்கிரமசிங்க (107613) ஆகியோர் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles