வெலிமடையில் 170 பெருந்தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 850 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மற்றும் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் பெருந்தோட்டத் துறை குடும்பங்களுக்காக வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் 170 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (06.11.2026) வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபரகல தோட்டத்தில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் தலா 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதற்கமைய, 170 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக மொத்தம் 850 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி மூன்று கட்டங்களாகப் பிரித்து வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாகத் தலா 15 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.
குறித்த 170 வீடுகளும் ஒரே நிலப்பரப்பில் திட்டமிட்ட அடிப்படையில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 5 ஹெக்டேயர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 பேர்ச் காணி உரிமமும் வழங்கப்படவுள்ளது.
வெறுமனே வீடுகளை மாத்திரம் நிர்மாணிக்காமல், மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாதிரி கிராமமாக இத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இதற்கமைய, புதிய கிராமத்தில் சமூக மண்டபம், விளையாட்டு மைதானம், முறையான வீதி வலையமைப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்விட வசதிகளை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
…………….
11.7 இலட்சம் ரூபா எரிபொருள் முறைகேடு – பணத்தைத் திருப்பிச் செலுத்திய முன்னாள் ஆளுநர்

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத், முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 11,320 லீற்றர் எரிபொருளுக்கான 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவைச் செலுத்தியுள்ளார்.
குறித்த முன்னாள் ஆளுநர் பயன்படுத்திய 11,320 லீற்றர் எரிபொருள், சுற்றறிக்கை அறிவுறுத்தல்களுக்கு முரணானது எனக் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.
இதனையடுத்து, குறித்த எரிபொருளுக்கான 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை மீள அறவிடுமாறு வடமத்திய மாகாண சபைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் ஆளுநர் குறித்த தொகையை ரொக்கமாகச் செலுத்தியுள்ளதாக வடமத்திய மாகாண சபையின் பிரதம பிரதிச் செயலாளர் அருண ரவி நேற்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த அதிகாரிகள் ஏற்கனவே அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக பிரதம பிரதிச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
……………
மின்சாரக் கட்டண அதிகரிப்புக் கோரிக்கையை மீளப்பெற்றது NSO!

2026ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான இறுதி காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முன்வைத்த கோரிக்கையை தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் (NSO) நிறுவனம் மீளப்பெற்றுள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை மற்றும் எதிர்வரும் காலங்களில் சாதகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை ஆகிய காரணங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், குறித்த காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை 2.88 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என NSO நிறுவனம் முன்மொழிந்திருந்தது.
அந்தக் காலப்பகுதியில் 4.4 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டண அதிகரிப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஆரம்பகட்ட ஆய்வை மேற்கொண்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), முன்மொழியப்பட்ட கட்டண அதிகரிப்பை 1.46 சதவீதமாகக் குறைத்திருந்தது.
இதுதொடர்பான பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (05) நடைபெற்றது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையிலேயே, 2026ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கக் கோரும் தனது முன்மொழிவை மீளப்பெறுவதாக NSO நிறுவனம் அறிவித்துள்ளது.
…………….
2027 இல் மேலும் 50மெட்ரோ பஸ்கள் சேவையில் இணைப்பு!

2027ஆம் ஆண்டில் மெட்ரோ பஸ் சேவையில் மேலும் 50 பேருந்துகளை இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் மாகாணத்திற்கு அப்பால் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கும் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு வழித்தடங்களில் 10 பேருந்துகளுடன் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை, தற்போது குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், ஏழு வழித்தடங்களில் 122 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மெட்ரோ பஸ் சேவையின் விரிவாக்கம், LMT Go கையடக்கத் தொலைபேசி செயலியை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கான சேவையின் தரத்தை உயர்த்துதல் தொடர்பாக நவம்பர் 4ஆம் திகதி பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
……………
வடக்க, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலவரத்துக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, அப்பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன.
குறிப்பாக, எரிபொருள் விலை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களும், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் உழைக்கும் மக்களின் குடும்பப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உழைக்கும் மக்களுக்கு நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது. தரமான சுகாதாரச் சேவைகளைப் பெறுவதற்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பிள்ளைகளின் போசாக்கு நிலை தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
……………
இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தாகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெலிசறை மார்பு வைத்தியசாலையின் தரவுகள் மற்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்ததில், இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆண்களிடையே அதிகம் பதிவாகும் முக்கிய புற்றுநோய்களில் ஒன்றாகவும், பெண்களிடையே முதல் 10 புற்றுநோய்களுக்குள் ஒன்றாகவும் நுரையீரல் புற்றுநோய் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, புகைப்பிடிக்காதவர்கள் மத்தியிலும், பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ, நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதமானவை புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பிறர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையைச் சுவாசித்தல், வெளிப்புற மற்றும் வீட்டுக்குள் காணப்படும் காற்று மாசுபாடு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை வெளிப்புற காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைகின்றது.
அதேபோன்று, வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது போதிய காற்றோட்டம் இல்லாதிருப்பதால், புகை வீட்டுக்குள் தேங்கி நிற்பதும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்டகால சுவாச நோய்கள், மண் மற்றும் கட்டிடப் பொருட்களில் காணப்படும் ரேடான் கதிர்வீச்சு வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் சிலிக்கா போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுக்கு உள்ளாவதும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
……………
தேசிய வறுமைக்கோட்டு எல்லை 17,742 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையின் அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு, செப்ரெம்பர் மாதத்தில், ஒரு நபருக்கு மாதத்திற்கு 17,742 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வறுமைக் கோடு என்பது, ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச மாதாந்த செலவைக் குறிக்கிறது.
ஒரு நபரின் மாதாந்த செலவு இந்த அளவை விடக் குறைவாக இருந்தால், அவர் வறுமையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது.
மாவட்ட வாரியான புள்ளிவிபரங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செலவில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக் காட்டுகின்றன.
செப்ரெம்பர் மாதத்தில், கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோடு மிக அதிகமாக, ஒரு நபருக்கு மாதத்திற்கு 19,136 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் 19,037 ரூபாவாகவும், களுத்துறை மாவட்டத்தில் 18,624 ரூபாயாகவும் உள்ளது.
அதேவேளையில், மொனராகலை மாவட்டத்தில் வறுமைக் கோடு மிகக் குறைவாக, 16,965 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் 17,238 ரூபாவாகவும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 17,315 ரூபாவாகவும் உள்ளது.
அண்மைய இந்தப் புள்ளிவிவரங்கள், கடந்த காலங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செலவில் ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வையும் சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய வறுமைக் கோடு 2012/13 ஆம் ஆண்டில் 5,223 ரூபாவாகவும், 2016 ஆம் ஆண்டில் 6,117 ரூபாவாகவும், 2019 ஆம் ஆண்டில் 6,966 ரூபாவாகவும் இருந்தது.
2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இதில் பெரும் உயர்வு பதிவாகியுள்ளது.
2025 செப்ரெம்பர் மாதத்தில் தேசிய வறுமைக் கோடு 16,413 ரூபாவாக இருந்த நிலையில், 2026 செப்ரெம்பர் மாதத்தில் அது மேலும் அதிகரித்து 17,742 ரூபாவை எட்டியுள்ளது.
தொகை மதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, இது 2025 செப்ரெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 8.1 சதவீத அதிகரிப்பையும், 2019 ஆம் ஆண்டின் அளவை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான உயர்வையும் குறிக்கிறது.
……………
மாடு மேய்க்கச் சென்றவர் யானை தாக்கியதில் பலி
வவுனியா, நெடுங்கேணி – பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சி.கரன் (வயது 45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் நேற்று செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ஏனைய பண்ணையாளர்களுடன் இணைந்து அந்தப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றபோதே, எதிர்பாராதவிதமாக உலா வந்த ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவருடன் சென்ற ஏனையவர்களால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெரியமடு மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் குறிப்பிட்ட ஒரு ஒற்றை யானையினாலேயே இவ்வாறான கொடூர மனித உயிரிழப்புகள் தொடர்கின்றன என்று பிரதேச மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தக் காட்டு யானையைக் கட்டுப்படுத்தவும், கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடியாகத் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
……………
பசறைக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற இருவர் கைது!

புத்தலையிலிருந்து பசறை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற இருவர், ஹிங்குருகடுவ – ரணுகல்ல பகுதியில் நேற்று முன்தினம் (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 28 வயதுடைய பசறை 10ஆம் கட்டை மற்றும் மாவுஸ்ஸாகொல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9.10 மணியளவில் குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து மொத்தமாக 160 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரிடமும் தலா 80 மில்லிகிராம் வீதம் ஹெரோயின் போதைப்பொருள் தனித்தனியாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான செனரத் பண்டாரவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் சார்ஜன்ட் திலகரத்ன (4300), பொலிஸ் கான்ஸ்டபிள்களான மது (92337), மதுசங்க (92853) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ரி. திஸாநாயக்க (89930) ஆகியோர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
த.டிமேஷன்










