போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குச் சமூகத்தில் தேவையான கருத்தாடலை மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதில் மதத் தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் பிரதான பங்கு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசத்தின் முன் இன்றிருக்கும் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்றான இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு முன்நின்று செயல்படுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற ” விலகிச்செல்” செயற்பாட்டின் ஓராண்டு மதிப்பீட்டை குறிக்கும் சர்வ மத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இனம், மதம் மற்றும் வயது பேதமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சமூகத்தில் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய மதஸ்தளங்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்புகளுக்கும் போதைப்பொருள் ஆபத்து பரவியுள்ள விதத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த பேரழிவைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள பரந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.1818.gov.lk இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
பெரும் பேரழிவை முறியடிக்கும் நோக்கத்துடனே எமது தேரர்கள் உட்பட அனைத்து மதத் தலைவர்களும் இன்று இங்கு ஒன்றுகூடியிருக்கிறார்கள். முதலாவதாக, எமது அழைப்பை ஏற்று நீங்கள் இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ளமைக்கு எமது கௌரவமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு வருகை தந்துள்ள ஆயிரக்கணக்கான மகா சங்கத்தினரையும் மதத் தலைவர்களையும் பார்க்கும்போது, எமக்கு முன்பாக உள்ள சவால், மிகப் பாரியதாக இருந்தாலும் அதனை வெற்றிகொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நாம் இந்தப் பேரழிவை முறியடிப்பதற்காக ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினோம். எப்போதும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தன, அதேபோல் இந்த அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
எனினும், புள்ளிவிவரங்களை நாம் பார்க்கும்போது போதைப்பொருள் மீண்டும் மீண்டும் அதிகரித்துள்ளமையை கண்டுகொள்ளலாம். எனவே, இந்தப் பேரழிவை முறியடிக்க வேண்டுமானால் ஒரு கூட்டுத் திட்டம் அவசியமாகும் என்று நாம் கருதினோம். அதற்காக அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டுக் குழுவை நாம் நியமித்துள்ளோம்.
இந்த ஆண்டில் நாங்கள் பலமுறை கூடி பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம். தேசிய சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது மகா சங்கத்தினரும், மதத் தலைவர்களும் அந்த சந்தர்ப்பத்திற்கு வருகை தந்திருந்தனர். அதனால் எப்போதும் எமது தேரர்களின் மற்றும் மததலைவர்களின் ஆதரவு எங்களுக்கு தைரியமாக அமைந்தது. இத்தகைய கூட்டு வேலைத்திட்டத்தின் மூலமாக மட்டுமே எங்களால் இந்த பேரழிவைத் தோற்கடிக்க முடியும்.

இந்தப் பேரழிவை நமது நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்போம் என்று நாம் இந்த நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதேபோல் நாம் படிப்படியாக இந்த அழிவின் கதவைத் திறந்தோம். நாங்கள் வெளியில் இருந்து பார்ப்பதை விட மிக ஆழமானதொரு நிலை இதில் இருந்தது. அதனால் பாரிய அழிவுகள் நிறைந்த குகை ஒன்றின் கதவுகளையே நாம் திறந்திருக்கிறோம். அந்தக் கதவுகளைத் திறந்ததன் மூலம் பதற்றமடைந்துள்ள ஒரு தரப்பினர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். இப்போது நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய இரண்டு பாதைகள் உள்ளன.
இதற்கு எதிராக நிற்பவர்களுக்கு அடிபணிந்து இந்தப் பயணத்தைக் கைவிடுவது முதலாவது பாதை . எத்தகைய தடைகள் மத்தியிலும் இந்தப் பேரழிவைத் தோற்கடிப்பதற்காக நாம் எடுத்த முடிவை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பது இரண்டாவது பாதையாகும். இந்த இரண்டாவது பாதையையே நாங்கள் அரசாங்கமென்ற வகையில் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நாம் வெற்றிகரமாக இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க வேண்டும்.
இன்று நமது சமூகம் ஒரு தேசமாக எதிர்கொள்ளும் பிரதான பேரழிவு இது. ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்கும் அவற்றுக்கே உரிய தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். எனினும், எந்தவொரு சமூகப் பாகுபாடுகளோ, கலாசார மற்றும் மொழி ரீதியான வேறுபாடுகளோ இன்றி, நம் அனைவரின் முன்பும் உள்ள தேசிய பேரழிவு இந்த, போதைப்பொருள் அச்சுறுத்தலாகும். இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது தேசத்தை நாம் காப்பாற்ற வேண்டும். எனவே நாம் அந்தப் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டில் நாங்கள் கைப்பற்றிய மொத்த போதைப்பொருட்களின் அளவு 438,330 கிலோ கிராம்கள் ஆகும்.
ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட ஒரேயொரு இளைஞர் மட்டும்தான் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், 2025ஆம் ஆண்டாகும்போது நாங்கள் 1,874 பேரைக் கைது செய்துள்ளோம். அத்துடன், 21 வயதுக்கு மேற்பட்ட 11,737 இளைஞர்களையும் கைது செய்துள்ளோம். இவர்களுக்குள் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 இளைஞர்கள் உள்ளனர். மேலும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பிள்ளைகளும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 பிள்ளைகளும் உள்ளனர். இதன் அர்த்தம், சிறுவர்கள் கூட இதற்குக் இரையாகியுள்ளனர் என்பதாகும். அதுமட்டுமின்றி, இருநூறுக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பேராபத்து எமது முழு இளைய தலைமுறையினரையும், எமது எதிர்காலத்தையுமே பேரழிவிற்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் மீது பற்றும் அக்கறையும், இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் உள்ள எமக்கு, இதற்கு எதிராக மௌனமாக இருக்க முடியாது. எமக்கு முன்னால் உள்ள ஒரே வழி இதனைத் தோற்கடிப்பது மாத்திரமே.
இந்த அச்சுறுத்தலின் பாரதூரத்தை இந்தத் தரவுகள் அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி, நாங்கள் இந்த ஆண்டில் 15,282 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளோம். அதன்படி, 6,528 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், 4,000 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்றுகூட அதிகாலையில் 150 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 2,598 கிலோகிராம் ஏனைய போதைப்பொருட்கள், 1,841 கிலோகிராம் ஹஷிஷ், 314 கிலோகிராம் கொக்கெய்ன் மற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாம் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 218 பில்லியன் ரூபாய் ஆகும். கஞ்சாவையும் சேர்த்தால் அது 224 பில்லியன் ரூபாவாகிறது. அதாவது 21,800 கோடி ரூபாவாகும். இது ஒரு வருடத்திற்கான போதைப்பொருள் சந்தையாகும். கைப்பற்றப்படாத அளவையும் சேர்த்துப் பார்த்தால், எவ்வளவு அதிக அளவிலான அழிவு ஏற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இந்த 22,000 கோடி ரூபா போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஒரு பெரிய, பலத்த வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலையமைப்பை உடைக்காமல் போதைப்பொருள் பேராபத்தை நமது நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது. இந்த மிகப்பெரிய செல்வம் காரணமாக, அரச அதிகாரிகள், சுங்கத் திணைக்களத்தின் சில நபர்கள்,போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், பொலிஸாரில் சில அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்களால் விலைக்கு வாங்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முக்கிய போதைப்பொருள் (ஹெரோயின்) வர்த்தகர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் பதவிகளைப் பெறும் திறனைப் பெற்றுக்கொண்டனர். இந்த போதைப்பொருட்கள் மூலம் ஈட்டப்படும் பெரும் செல்வத்தைக் கொண்டு அரசியல் செயற்பாடுகளை உருவாக்கத் தொடங்கினர்.
இன்று இந்தப் பேரழிவு முழு சமூகத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் மரியாதைக்குரிய எந்த இடமும் மிஞ்சப் போவதில்லை. வழிபாட்டிற்கும் மதிப்பிற்கும் உரிய மத தலங்களுக்குள்ளும் இந்தப் பேரழிவு பரவி வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சமூகத்தை உருவாக்குவதற்காகத் தமது கால்கள் தேயும் வரை கிராமங்கள் தோறும் பயணம் செய்த நமது மகா சங்கத்தினரும் பிக்குமார்களும் கூட ஓரளவு இதில் சிக்கியுள்ளனர். மற்ற மத தலங்களுக்கும் இது பரவியுள்ளது. பொலிஸார், முப்படையினர், அரச நிறுவனங்கள் என அனைத்தும் இதற்கு இரையாகியுள்ளன.

வெளிப்படையாக நமக்குத் தெரியும் அரச பொறிமுறைக்குப் பதிலாக, அதற்குக் கீழ் இயங்கும் ‘நிழல் அரச பொறிமுறை’ ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் வளர்ச்சியடைந்தால், நாம் மதிக்கின்ற, எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் இந்த அனைத்து வழிமுறைகளும் மேலும் செல்லுபடியற்ற பொறிமுறைகளாக மாறிவிடும். அவர்கள் ஈட்டும் மாபெரும் கறுப்புப் பணத்தின் மூலம் இவை அனைத்தையும் தங்கள் கவசத்திற்குள் கொண்டு செல்ல அவர்களுக்கு இயலுமாகிறது. ஆகையால் நான் மீண்டும் சொல்கிறேன், நமக்கு முன்னால் இரண்டு வழிகள் உள்ளன.
அவர்கள் அவர்களின் கறுப்பு அரசில் இருக்கிறார்கள், நாமும் நமக்குச் சமூகம் அல்லது அரசால் வழங்கப்பட்ட கடமைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம். பெரும்பாலோர் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால் நாங்கள் அரசாங்கமாக ஒரு முடிவை எடுத்துள்ளோம்.இந்தக் கறுப்பு அரசை நாங்கள் தோற்கடிப்போம், இதை வீழ்த்துவோம். போதைப்பொருளுடன் பிணைந்த இந்தக் கறுப்பு அரசை வீழ்த்தாமல் நமது குழந்தைகளுக்கு நம்பிக்கையான எதிர்காலம் இல்லை. நம் பெற்றோர் எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறார்கள்! நமது பெற்றோர் தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைத் தங்கள் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறார்கள் – குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்திற்காக, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகத்திற்காக. பெற்றோர் எவ்வளவு பாடுபடுகிறார்கள்! உலகின் எந்தவொரு தாயும், தந்தையும் தங்கள் குழந்தைகளுக்காக இவ்வளவு உழைப்பதில்லை என்று நான் நினைக்கிறேன்.
தமது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைக்கும் பெற்றோர்களைக் கொண்ட நாட்டில், “எமது பிள்ளைகளுக்கு நம்பகமான ஒரு எதிர்காலம் உள்ளதா?” என்பதே தற்பொழுது பெற்றோர்களின் முன்பாக உள்ள கேள்வி. இந்த பேரழிவின் முன்னால் பெருமளவிலான பெற்றோர்கள் பரிதவிப்புக்குள்ளாகியிருப்பதை நான் அறிவேன். முழுச் சமூகத்திலும் இப் பேரழிவு ஒரு பெரும் அரக்கனைப் போலப் பரவிக்கொண்டிருக்கிறது.
அதனுடன் பிணைந்திருக்கும் போதைப்பொருள் வலையமைப்பும், அதனுடன் தொடர்புடைய குற்றச் செயற்பாட்டு பொறிமுறையும் தகர்க்கப்பட வேண்டும். ‘முழு நாடமே ஒன்றாக’ வேலைத்திட்டத்தின் ஊடாக அந்தக் குற்ற இராஜ்ஜியத்தைத் தகர்ப்பதற்கான திட்டங்களை நாங்கள் தயாரித்தோம். அதற்கமைய, இந்தப் போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடைய திட்டமிடப்பட்ட குற்றவாளிகளை இலங்கைக்குள் கைது செய்யவும், இலங்கையிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் அழைத்து வரவும் எங்களால் முடிந்தது.
இந்த ஆண்டிற்குள் பல்வேறு பெயர்களில், பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் அச்சுறுத்தி வந்தவர்கள் எம்மால் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்த 67 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், உலகின் எங்கு மறைந்திருந்தாலும், எமது நாட்டின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடுகிறார்களானாலும்,அவர்கள் உலகின் எங்கிருந்தாலும் ‘நீங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பற்றவர்கள்’ என்பதை கூற விரும்புகிறோம் . அதுமாத்திரமன்றி, 112 பேருக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் 4500 மில்லியன் சொத்துக்களையும் முடக்கியுள்ளோம்.
போதைப்பொருட்கள் மூலம் ஈட்டப்பட்ட 4.5 பில்லியன் (4500 மில்லியன்) பெறுமதியான சொத்துக்களை நாங்கள் முடக்கியுள்ளோம். இந்த ஆண்டுக்குள் 97 T56 தானியங்கித் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிலவேளைகளில் இந்தத் துப்பாக்கிகளில் சில நமது பாதுகாப்பு படைகளில் இருந்து வெளியே சென்றுள்ளன. அவை கணக்காய்வு அறிக்கைகள் மூலம் நமக்கு தெரியவந்துள்ளன. ஒரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கியை விற்றுவிட்டுத் தப்பிச் செல்வதாக சில தகவல்கள் கிடைத்தன 143 கைத்துப்பாக்கிகள் ஒரு ஏகே 47 வகை துப்பாக்கி, 105 ரிவோல்வர் வகை துப்பாக்கிகள் வெளியில் சென்றுள்ளன. இதுதான் குற்றவியல் சக்திகள் வசம் உள்ள துப்பாக்கிகளின் அளவாகும். இன்னும் இருக்கின்றன என்று நாங்கள் நினைக்கின்றோம்.
இந்த அளவிலான துப்பாக்கிகள் குற்றவாளிகளின் கைகளில் இருக்கும்போது இந்தச் சமூகம் பாதுகாப்பானதா? நமது குழந்தைகள் பாதுகாப்பானவர்களா? நமது குழந்தைகள் இந்தச் சமூகத்தில் பாதுகாப்பாக இல்லை. இந்த அளவுக்குத் துப்பாக்கிகள் சுதந்திரமாக கையாளப்படுகின்றன. இன்னும் கைப்பற்றப்பட வேண்டும். அது தொடர்பில் நாங்கள் திட்டங்களைத் தயாரித்துள்ளோம். எனவே, இந்த போதைப்பொருள் வலையமைப்பைக் கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட இலங்கை பொலிஸாரும், அதேபோன்று கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, எமது இராணுவத் தளபதி உள்ளிட்ட முழுமையான பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையில், இந்த மீட்பில், இந்தப் பேரழிவைத் தோற்கடிப்பதில் பெரும் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றன.
அவை இந்த நாட்டை மீட்பதற்காக, நமது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக ஒரு பாரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அந்த நடவடிக்கைகள் குறித்த பாராட்டு இல்லாமல், ஒரு அதிகாரியினால் சிறு தவறு நிகழ்ந்தால் அது பத்திரிகையில் தலைப்புச் செய்தியாகிவிடுகிறது, அது சில ஊடக நிறுவனங்களின் பிரதான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகிவிடுகிறது.
இவ்வாறாக 22,000 கோடி பெறுமதியான போதைப்பொருட்களையும் பெருந் தொகையான துப்பாக்கிகளையும் கைப்பற்ற பொலிஸாரும், முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். எனவே, இந்த நடவடிக்கையின்போது அவர்களால் ஆற்றப்பட்ட பணிக்கு எமது அரசாங்கம் உரிய கௌரவத்தை வழங்கும். அதேபோன்று, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல அதிகாரிகளுக்கு நாங்கள் போனஸ் கொடுப்பனவுகளையும், ஊக்கக் கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இது தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொலிஸாரதும் முப்படையினரதும் ஒத்துழைப்பு மிக அவசியமானது. எனினும், கைது செய்வது மாத்திரமல்ல, எங்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. நாங்கள் புனர்வாழ்வு நிலையங்களை மட்டக்களப்பு, அகுரஸ்ஸ, நிட்டம்புவ, கண்டி போன்ற பிரதேசங்களில் புதிதாக தாபித்துள்ளோம். தற்போதுள்ள கந்தக்காடு, சேனபுர, வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள புனர்வாழ்வு நிலையப் பணிகளை மேம்படுத்தியுள்ளோம். அதுமட்டுமன்றி, முழுமையாக அரசாங்கத்தின் அனுசரணையினைப் பெறும் புனர்வாழ்வு நிலையங்கள் மாத்திரமின்றி, விகாரைகள், எமது மதகுருமார்கள், சிவில் அமைப்புகளினால் பல புனர்வாழ்வு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்தப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம். நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளோம்.
அத்துடன், எமது சுகாதாரத் திணைக்களமும் தொடர்புடைய நிறுவனங்கள் பலவும் தலையிட்டு, நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்புக்கான 259,000 சமூக விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஒழுங்கு செய்துள்ளன. அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் பெருமளவில் மேற்கொண்டுள்ளோம், மக்களையும் பிள்ளைகளையும் விழிப்புணர்வூட்டுவதற்காக வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

தற்பொழுதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் தான் எமக்கு இதனை அடக்க வேண்டியுள்ளது. நாங்கள் எக்காரணம் கொண்டும் இந்த பாரிய அச்சுறுத்தலை முறியடிக்கும் செயற்பாட்டின்போது சட்டக் கட்டமைப்பிற்கு வெளியே செல்வதற்கு எதிர்பார்க்கவில்லை. இந்தச் சட்டத்தின் கீழ்தான் நாங்கள் செயற்படுகிறோம். எங்களுக்குச் சட்டம் போதாது என்றால் புதிய சட்டத்தை உருவாக்குவோம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பில் பாரிய பிரச்சினை இருந்தது. கைப்பற்றப்படும் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீண்டும் சந்தைக்கு வருகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் பெரும்பான்மையானவர்களிடையே காணப்பட்டது.
எங்கிருந்த சட்டக் கட்டமைப்பிற்குள் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்கு முடிவடைந்து, அவ்வழக்குடன் தொடர்புடைய பொருட்களை அழிக்குமாறு நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வரும் வரை அவற்றை அழிப்பதற்கான அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. எனினும், தற்போது நாங்கள் அவற்றை அழிப்பதற்குத் தேவையான சட்டங்களை இயற்றினோம்.
அடுத்ததாக, போதைப்பொருட்கள் மூலம் முறையற்ற விதத்தில் உழைக்கப்பட்ட செல்வம் மற்றும் சொத்துக்களைடக் கைப்பற்றுவதற்கு சட்டம் எதுவும் இருக்கவில்லை. அதனால் நாம் முறையற்ற விதத்தில் உழைக்கப்பட்ட சொத்துக்களைக் கைப்பற்றும் சட்டத்தை 2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றினோம். அந்த சட்டத்திற்குட்பட்டே 4500 கோடி பெறுமதியான சொத்துக்கள் தற்போது குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் இருக்காவிட்டால் எமக்கு சொத்துக்களை முடக்க முடியாது.
குறிப்பாக தற்போது பரவலாகப் பேசப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தை நாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் நடைமுறைப்படுத்துகிறோம். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தப்பியோட முயற்சித்தால் அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் நடவடிக்கை எடுக்கப்டுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பாரியளவில் பலவீனப்படுத்தும் உத்தேசம் எமக்குள்ளது. ஏனெனில் எமக்கு இப்போது அன்றாடம் முகங்கொடுப்பதற்குத் பயங்கரவாதச் செயற்பாடு எதுவும் கிடையாது. அந்தச் சட்டம் மிக பலவீனமான சட்டமாக மாற்றப்படும். இது தொடர்பில் கருத்தாடல் நடைபெறுகிறது. எனினும், எங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு வலுவான சட்டம் அவசியமாகவுள்ளது. இதுதான் இந்த யுகத்தில் நாட்டைப் பேரழிவிலிருந்து மீட்பதற்குத் தேவையான சட்டமாகும்.
சட்டம் அடிக்கடி மாறுகிறது. புதிய சவால்களுக்கு ஏற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் சுற்றுச்சூழல் சட்டங்கள் இருக்கவில்லை. எனினும், சுற்றுச்சூழலுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் பணமோசடியைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இருக்கவில்லை.
எனினும், கருப்புப் பணம் உழைக்கப்படுவது பெரும் அச்சுறுத்தலாக மாறும்போது பணமோசடித் சட்டம் உருவாகிறது. ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களை அழிக்கும்போது பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகப் பொதுச் சொத்துச் சட்டம் தயாரிக்கப்படுகிறது. இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அதனால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் இந்த யுகத்திற்கு அவசியமாகியுள்ளது.
சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதல்ல. இன்று உருவாக்கப்படும் சட்டம் நெடுங்காலம் நிலைத்திருக்காது. சமூகத்தில் புதிய சவால்கள் வருகின்றன. சமூகத்தில் புதிய சவால்கள் வரும்போது அந்தச் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு வலுவான சட்டங்கள் அவசியமாகும்.
இவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குரிய சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்கள் தயாரிக்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தோம். அதற்காகத்தான் அரசாங்கமொன்று உள்ளது. அந்தச் சட்டங்களைக் குடிமக்களால் உருவாக்க முடியாது. அந்தச் சட்டங்களை சாதாரண நபரால் உருவாக்க முடியாது, எங்களுடைய கிராம உத்தியோகத்தரினால் அந்தச் சட்டத்தை உருவாக்க முடியாது. அந்தச் சட்டத்தை பாராளுமன்றத்திற்குத் தவிர வேறு எவருக்கும் உருவாக்க அதிகாரம் இல்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கு வலுவான சட்டம் அவசியமாகவுள்ளது. அதற்கான சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு இரண்டு குழுக்கள் உள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து சலுகைகளையும் பாதுகாப்பையும் பெறும் குழு அதில் ஒன்று. அவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை, எனினும் எமது நாட்டின் மக்களின் ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்துப் பேசும் மற்றைய குழுவுடன் கலந்துரையாட நாம் தயாராகவுள்ளோம்.
எக்காரணம் கொண்டும் நாங்கள் மக்களை அடக்குவதற்கு, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தேவை எமக்குக் கிடையாது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் ஒடுக்குவதற்காகச் சட்டம் அவசியமானது, சட்டங்களை உருவாக்குவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். உயர்நீதிமன்றத்தில் இந்தச் சட்டம் தொடர்பில் ஆராயப்பட உள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றவர்கள் மூன்று அடிப்படை விடயங்களை முன்வைத்துள்ளனர்.
இந்தச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கும் காலம் 72 மணித்தியாலங்களாகும். அது அதிகம் என்ற தெரிவிக்கப்படுகிறது.நாம் அதனைத் திருத்துவதற்குத் தயாராகவுள்ளோம் – 72 மணித்தியாலக் காலத்தைப் 48 மணித்தியாலங்களாகக் குறைப்போம். நாங்கள் செவிமடுக்கத் தயாராகவுள்ளோம். அடுத்து சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட பச்சை குத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பில் சட்டம் தேவையில்லை என்றால் நாங்கள் அதனை வாபஸ் பெறத் தயாராகவுள்ளோம்.
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்படலாம் என்பதற்காக கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்க மாட்டோம். எனவே அதனையும் விலக்கிக் கொள்கிறோம். தற்போது உயர்நீதிமன்றத்தில் பிரதானமாக இந்த மூன்று விடயங்கள் தொடர்பிலே ஆராயப்படுகிறது.
எனக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அல்லது எமது பொலிஸாருக்கு, எமது திணைக்களங்களுக்கோ முறையற்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தத் திருத்தங்கள் முன்னேடுக்கப்படவில்லை. எமக்கு எதற்கு இந்த அதிகாரங்கள் ? யாரும் நெடுங்காலம் அதிகாரத்தில் இருப்பதில்லை. நாங்கள் எப்போதும் அதிகாரத்தைக் கையாளும்போது அதிகாரத்தைக் கைவிடக்கூடிய மனோநிலையில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கையாளும்போது எப்போதும் நாங்கள் தயாரிக்கும் சட்டங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும். மக்கள் தான் எங்களுக்கு அதிகாரத்தைத் தந்துள்ளனர், அந்த அதிகாரத்தை எந்தவொரு தருணத்திலும் மக்கள் மீளப் பெற்றுக் கொள்ளலாம். தேர்தல் மூலம் மாற்றலாம். அதனால் நாங்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துகையில் நான், எனது பிள்ளைகள், எனது உறவினர்கள் என்று பார்ப்பது கிடையாது.
அதனால் நாங்கள் சட்டங்களைத் திருத்துவதற்குத் தயாராகவுள்ளோம். எனினும் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் வேண்டுமா இல்லையா? ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பையோ அல்லது சலுகைகளையோ பெறும் கூட்டத்தினரைத் தவிர மற்ற அனைவரும் ‘ஆம்’ என்று தான் கூறுவார்கள். ஆம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் வேண்டும்! அந்தச் சட்ட மூலத்திலுள்ள விடயங்கள் குறித்து நாம் ஆராயத் தயாராக உள்ளோம். அதுதான் நாங்கள் ஏற்கனவே மூன்று திருத்தங்கள் குறித்த உடன்பாட்டை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு வலுவான சட்டம் ஒன்று எமக்குத் தேவை. இறுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்ட பின்னர் சட்டத்தின் முன் கொண்டு செல்லப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும். நாங்கள் அரசாங்கமென்ற வகையில் சட்டத்திற்குப் புறம்பான தண்டனை வழங்கும் கொள்கையைப் பின்பற்வில்லை. வரலாற்றில் அவ்வாறு நடந்துள்ளது. நாங்கள் எக்காரணம் கொண்டும் சட்டத்திற்குப் புறம்பாக எவருக்கும் தண்டனை வழங்குவதில்லை. சட்டத்தின்படி வழக்கு விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
எனினும் வழக்கு விசாரிக்க நீண்ட காலம் செல்வதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும். பரிசோதனை செய்யும் நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும், வழக்குத் தாக்கல் செய்யும் சட்டமா அதிபர் திணைக்களத்தை வலுப்படுத்த வேண்டும், அந்த வழக்குகளுக்குத் தேவையான தடயங்களை பரீட்சிக்கும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தை வலுப்படுத்த வேண்டும், அந்த வழக்குகள் இறுதியாக நீதிமன்றத்தில் விசாரனைக்குட்படுத்தப்படுவதற்கு நீதிமன்றத் துறையை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் இவை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் 36,000 அறிக்கைகள் குவிந்து கிடக்கின்றன.
பொதுவாக மாதத்திற்கு ஏறக்குறைய 3,000 பகுப்பாய்வுகள் முடிக்கப்பட்டன. நாங்கள் புதிதாக பணியாளர்களை ஈடுபடுத்தினோம், புதிதாக கொடுப்பனவுகளை வழங்கினோம், சில உட்கட்டமைப்பு வசதிகளுக்காக எமது கடற்படை உதவி புரிந்தது. உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவி செய்து என்ன செய்தோம்?
எமக்கு ஒரு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு பொறியியலாளர்கள், திட்ட வரைஞர்கள், தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் இருந்தால் மாத்திரம் போதுமானது. அது ஒரு சிறிய குழுவின் வேலை. அதாவது ஒரு பெரிய நீர்தேக்கத்தை உருவாக்க தேவைப்படும் ஒரு குழுவை ஒத்த வேலை அது. ஆனால், இந்த போதைப்பொருள் எனும் பேரழிவை தோற்கடிப்பதற்கு மக்களின் உதவி அவசியம். தமது ஒரு பிள்ளை போதை பொருளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறதா, தமது கணவன் பலியாகிக் கொண்டிருக்கிறாரா, தமது கணவனில் அல்லது பிள்ளையில் வேறுபட்ட நடத்தை குணாதிசயங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனவா, தமது பிள்ளை பாதாள உலக உறுப்பினர் ஒருவராக உருவெடுத்து வருகிறாரா, தமது பிள்ளை இந்தப் பேரழிவின் ஓர் அங்கமாக மாறி வருகிறாரா என தனது பிள்ளை பற்றியோ அல்லது கணவனைப் பற்றியோ நல்லதொரு அவதானிப்பு அந்த தாய்க்கு அல்லது மனைவிக்கு இருக்கும். பொலிஸாரால் கைது செய்வதற்கு முன்னரே தமது கணவன் அல்லது பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதை அவர்கள் அறிந்தே இருப்பார்கள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் இவ்வாறான குற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. எனவே, இந்தப் பேரழிவில் மிகப்பெரிய பங்கு நமது பெற்றோருக்கும் உள்ளது. குறிப்பாக நாம் கல்வி அமைச்சின் மூலமாக ஒரு திட்டத்தை உருவாக்கி வருகின்றோம். அது பிள்ளைகளுக்கானது அல்ல, பெற்றோர்களுக்காகவே இத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
பெற்றோர்களுக்குத் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் நாசமடைவது பற்றி நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் போது என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். மனம் குழப்பமடைகிறது. உடல் மெலிகிறது, சுயமரியாதை இழக்கப்படுகிறது, ஆளுமை சீரழிகிறது, சமூகத்தால் ஓரங்கட்டப்படும் நிலை ஏற்படுகின்றது, இறுதியில் சட்டத்தின் முன் மரண தண்டனை கிடைக்கிறது. நாம் இந்தச் சட்டத்தை வலுப்படுத்தினால் இறுதியில் மரண தண்டனைதான் கிடைத்தாகும், இதுதான் சட்டம். இப்போது தனது பிள்ளைகள் மீது அன்பு செலுத்தும் பெற்றோர்கள். தமது பிள்ளை ஆரம்பத்தில் இந்தப் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிறான், ஆனால் முடிவு என்ன? சட்டத்தின் முன் மரண தண்டனை! எனவே, இத்தகைய நிலையில் பெற்றோருக்கு உள்ள கடமை என்னவென்றால், தமது அன்பான பிள்ளைப் பேரழிவிற்கு உள்ளாவதைத் தடுத்து நிறுத்துவதாகும். ஒவ்வொரு தாயையையும் தந்தையையும் பற்றி நான் நன்றாக அறிவேன், தங்களது பிள்ளைக்கு ஒரு பேரழிவு ஏற்படும் போது நமது விகாரைக்கு வந்து ‘தேரரே, எனது பிள்ளை இப்படி ஆகிறான் என்று, எங்கள் பெரிய பிள்ளை இப்படி ஆகிறான் என்று, எனது கணவருக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைத்திருக்கவில்லை என ஒவ்வொருவரும் கூறுவார்கள். அவ்வாறே இன்னும் சிலர் தேவாலயங்களில் மதகுருவிடமும், கோவில்களில் குருக்களிடமும் இவ்வாறே கூறுகிறார்கள். அதாவது பெற்றோர் ஆரம்ப கட்ட்த்திலேயே நேராக பொலிஸ் நிலையத்திற்கு வருவதில்லை, அதை நாம் அறிவோம்.
“அம்மா, அப்பா கூடுதலாக வெளிப்படையாகப் பேசுவது ஒன்றில் மதத் தலைவர்களாகிய உங்களிடம், அல்லது வைத்தியரிடம். அதிலும் வைத்தியர்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆனால், அதனையும் விட கூடுதலாக நமது பிக்குமாரிடமும், நமது மதகுருமார்களிடமும் வெளிப்படையாகப் பேசுவார்கள். எனவே, கிராமத்தில் நடக்கின்ற பேரழிவை முதலாவதாக கவலைத் தொனியுடன் கேட்டறிவது, கண்டறிவது நமது கிராமங்களின் விகாரையிலுள்ள பிக்குமார் மற்றும் நமது மதகுருமார்களுமே ஆகும்.
எனவே, இத்தகைய பேரழிவை தோற்கடிப்பதில், நாம் சமூக நீரோடையாக தேர்ந்தெடுப்பது பொலிஸ், இராணுவம், அரசாங்க இயந்திர முறைமை ஆகியவற்றைத் தான், எனினும் இந்த வழமையான முறைமையில் இருந்து அப்பால் சென்று சமூகத்திற்காக மிகப்பெரிய கருத்தியல் வழிகாட்டலைச் செய்ய வேண்டியதன் பொறுப்புணர்வு நமது பிக்குமார்களுக்கும் மத குருமாருக்குமே உள்ளது என நான் நினைக்கிறேன்.
இன்று ஒரு இடம் விடாமல் இந்தப் போதைப்பொருள் என்னும் அரக்கன் நாடு முழுவதும் பரவியுள்ளது. அதற்கு தசாப்தக் கணக்கில் அனுசரணை வழங்குவது, அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது கைவிட்டுவிடுவது போன்ற காரணங்களினால்தான் இதுவரை இந்த பேரழிவு வளர்ச்சி அடைந்தது. இன்று எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது வளர்ச்சி அடைந்த பேரழிவொன்றை தோற்கடிக்கும் பொறுப்பாகும். இது ஆரம்ப நிலையென்றால் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எமக்குத் தெரியும், எனினும் இது ஆரம்ப நிலையல்ல. இப்போது இருப்பது மிகப்பெரிய அளவில் பேரழிவாக வியாபித்துள்ள நிலையாகும்.
இது இப்போது ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலோ முடிக்கப்பட வேண்டியதொன்று அல்ல. எனினும் எமக்குச் சில வருடங்களுக்குத் தொடர்ச்சியாகக் கைவிடாமல் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டால் நமது தேசத்தைப் இந்தப் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். அப்போது தான் நமது எதிர்கால இளைய தலைமுறைக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும், நமது சமூகத்திற்கு முரண்பாடற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவும் முடியும். நமது பிள்ளைகள் தங்களது நாட்டில் சுயமரியாதையுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் உருவாக்க முடியும். அந்தச் செயற்பாட்டில் நமது விகாரை தேரர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பங்கு மிகப்பெரியது. ஆகவே, அந்தச் செயற்பாட்டின் பங்காளிகளாக இணையுங்கள் என உங்களிடம் நான் அழைப்பு விடுக்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சியம் மஹா நிக்காயவின் மல்வத்து மகா விஹாரை பிரிவின் அநுநாயக்க வண. நியங்கொட விஜிதசிறி தேரர், சியம் மஹா நிக்காயவின் அஸ்கிரி பிரிவின் அநுநாயக்க வண நாரம்பனாவே ஆனந்த தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மஹா சங்க சபையின் தலைமைச் செயலாளர் வண பலபிட்டியே சிறி சீவலி தேரர், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மஹா நிக்காயவின் அநுநாயக்க வண வலேபொட குணசிறி தேரர் உள்ளிட்ட முப்பீட மஹா சங்கத்தினரும், வண. ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதகுருமார்களும், முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் உறுப்பினர் ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கல் உள்ளிட்ட இந்து குருக்கல்மாரும், அஷ்- ஷேக் முஹம்மத் அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட மௌலவிமாரும், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படை தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.










