தோழர்களே அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவருவது வெட்கக்கேடு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்தது சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருத முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் கோரி புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியின் பிரிவினருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பதிவு செய்வதற்குத் தேவையான அளவுகோல்களின்படி, கட்சியின் முறையான தேர்தலை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

…………..

தோழர்களே அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவருவது வெட்கக்கேடு! 

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவருவது வெட்கக்கேடான விடயமாகும். ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பி. பிரமுகர்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக போராடினார்கள். ஆனால் இதைவிட பயங்கரமான சட்டங்களை இந்த அரசாங்கம் கொண்டுவர முற்படுகின்றது.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பவற்றுக்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்

அத்துடன், அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முற்பட்டால் மக்கள் போராடுவார்கள் எனவும் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

……………..

அடை மழையால் ஸ்தம்பித்தது கொழும்பு

 

கொழும்பில் இன்று மாலை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திடீரெனப் பெய்த கனமழை காரணமாக தலைநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுடன், பல வீதிகளும் நீரில் மூழ்கின. இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, மாலை நேர போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் வேளையில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன சாரதிகள் நீண்ட நேரம் பயணத் தாமதங்களை எதிர்கொண்டனர்.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதான வீதிகளிலும் கனமழையின் தாக்கம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

……………

ஜனாதிபதி தலைமையில் நாளை தேசிய தொழிற்சங்க மாநாடு

“எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள் வலுவான பயணம்; அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தொழிற்சங்க மாநாடு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (07) நடைபெறவுள்ளது.

கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், தொழிற்சங்கத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

……………….

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் அதிரடி மாற்றம்! 100 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

 

 

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

திறன் அபிவிருத்தி முறைமையை மாற்றியமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள பொது திறைசேரியில் இன்று (06) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷனன் கோவ்லினும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், இடைநிலைக் கல்வி மட்டத்திலேயே மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பாதைகளை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட தரமான தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்துதல், தொழில்துறை மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம், வாகனத் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையமாகத் தரமுயர்த்தப்படவுள்ளது. மேலும், ஒன்பது தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் பிராந்திய பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளதுடன், மேலும் 40 பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப 200 தேசிய திறன் தரநிலைகள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் புதுப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னுரிமை வழங்கப்படும் தொழில்துறைகள் மற்றும் தொழில்களுக்குப் புதிய பயிற்சிப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பணியிடப் பயிற்சிக்கான தரநிலைகள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர்களுக்கான தொழில்சார் மேம்பாட்டுத் திட்டங்களும் வலுப்படுத்தப்படவுள்ளன.

தனியார் பயிற்சி வழங்குநர்கள் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஊக்கமளிக்கும் நிதி வசதிகள் உள்ளிட்ட கொள்கை, நிதி மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்களும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, இணையவழிக் கற்றல் தளம் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தக் கட்டமைப்பு தொழிலாளர் சந்தை மற்றும் பாடசாலை முகாமைத்துவத் தகவல் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும்.

மேலும், இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பாதைகள் வலுப்படுத்தப்படுவதுடன், தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் தொழில் வழிகாட்டல் சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

………………

 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடிக்கு அறிவிக்க இந்திய நிதியமைச்சர் உறுதியளிப்பு

இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் சைவ மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்காகப் புதுடில்லி சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரைச் சந்தித்தபோதே இந்திய நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

‘இனச் சுத்திகரிப்பின் பின்னணியில் நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள்: காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் கதையாடல்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்திய நிதியமைச்சரைச் சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சைவ ஆலயங்களின் செயற்பாடுகளை முடக்கி, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் இந்திய நிதியமைச்சருக்கு அறிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தொல்லியல் திணைக்களத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பல கோவில்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாம் தெளிவுபடுத்தினோம். குறிப்பாக, திருகோணமலையில் உள்ள சிவன் கோவிலின் அபிவிருத்தி அல்லது புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? அந்தக் கோவிலைச் சூழவுள்ள பெரும்பான்மைச் சமூகத்தினருக்குச் சொந்தமான கடைகள், கோவிலின் ஆன்மீகத் தன்மைக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? இவ்வாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோவில்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகச் சட்டத்தை நுட்பமாகப் பயன்படுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் இந்திய நிதியமைச்சருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் எடுத்துரைத்துள்ளனர்.

“அதுமட்டுமன்றி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு முயற்சியும் அல்லது முன்னோக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அழுத்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தொடர்புடைய மாகாண சபைத் தேர்தலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையையும் தெளிவாக எடுத்துரைத்தோம்.”

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் முன்வைத்த விடயங்களை மிகவும் கவனமாகச் செவிமடுத்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்ததாகவும் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும் ‘ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’ என டில்லி சர்வதேச மாநாட்டில் குறிப்பிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த விடயங்கள் தொடர்பாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் அதிக கவனத்தைப் பெற்றுக்கொள்வது சவாலானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இது சவாலானதாக இருப்பதற்குக் காரணம், இலங்கையின் மோதல் என்பது அரசை ஆளும் சிங்கள பௌத்தப் பெரும்பான்மைச் சமூகத்திற்கும், பெரும்பான்மையாக சைவர்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் இடையிலானதாக இருப்பதுதான்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

“எனது நம்பிக்கையின்படி, இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், இந்த இரு சமூகங்களும் ஒன்றுதான் என்ற எண்ணம் காணப்படுகிறது. இரு சமூகங்களும் கலாசார மற்றும் பாரம்பரிய ரீதியாக ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன. இந்தியக் கண்ணோட்டத்தில் அவ்வாறு தோன்றினாலும், கள யதார்த்தம் வேறுபட்டது. எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையாக உள்ள தமிழ் சைவ மக்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் சிங்கள பௌத்தப் பெரும்பான்மைச் சமூகம், தமிழ் மக்களை இலக்குவைத்து அவர்களைத் துரத்திச் செல்வதே கள யதார்த்தமாக உள்ளது.”

சைவம் தமிழ் மக்களின் அடையாளத்துடன் தனித்துவமான தொடர்பைக் கொண்டிருப்பதால், சைவ மத வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் மாநாட்டில் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், ‘இந்தியக் கண்ணோட்டத்தில் மாத்திரம் பிரச்சினையை அணுகினால்’ அதன் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ளத் தவறி, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழ்ச் செயற்பாட்டுக் குழு, அகில இந்திய சட்ட ஆசிரியர் பேரவை மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான இந்தியச் சங்கம் ஆகியன இணைந்து டில்லி சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

………………

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

திறன் அபிவிருத்தி முறைமையை மாற்றியமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள பொது திறைசேரியில் இன்று (06) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷனன் கோவ்லினும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2027ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், இடைநிலைக் கல்வி மட்டத்திலேயே மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பாதைகளை வலுப்படுத்துதல், வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட தரமான தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்துதல், தொழில்துறை மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம், வாகனத் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையமாகத் தரமுயர்த்தப்படவுள்ளது. மேலும், ஒன்பது தொழிற்கல்வி பயிற்சி நிலையங்கள் பிராந்திய பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளதுடன், மேலும் 40 பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப 200 தேசிய திறன் தரநிலைகள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் புதுப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னுரிமை வழங்கப்படும் தொழில்துறைகள் மற்றும் தொழில்களுக்குப் புதிய பயிற்சிப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பணியிடப் பயிற்சிக்கான தரநிலைகள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளர்களுக்கான தொழில்சார் மேம்பாட்டுத் திட்டங்களும் வலுப்படுத்தப்படவுள்ளன.

தனியார் பயிற்சி வழங்குநர்கள் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஊக்கமளிக்கும் நிதி வசதிகள் உள்ளிட்ட கொள்கை, நிதி மற்றும் டிஜிட்டல் சீர்திருத்தங்களும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, இணையவழிக் கற்றல் தளம் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமைத்துவத் தகவல் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தக் கட்டமைப்பு தொழிலாளர் சந்தை மற்றும் பாடசாலை முகாமைத்துவத் தகவல் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும்.

மேலும், இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பாதைகள் வலுப்படுத்தப்படுவதுடன், தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் தொழில் வழிகாட்டல் சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles