வீதி விபத்துகளில் 11 மாதங்களுக்குள் 2,381 பேர் பலி

பேராதனை – சரசவி உயன இடையே புதிய ரயில் பாலம்: அமைச்சரவை அங்கீகாரம்

பேராதனை – சரசவி உயன இடையே மகாவலி ஆற்றின் குறுக்கே புதிய ரயில் பாலம்: இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

மகாவலி ஆற்றின் குறுக்கே, சரசவி உயன மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளுக்கு இடையில் புதிய ரயில் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் பாலம், மாத்தளை ரயில் பாதையில் அமைக்கப்படவுள்ளது.

கண்டி பெருநகரப் பிராந்தியத்தை உள்ளடக்கிய விரிவான புறநகர் ரயில் வலையமைப்பை உருவாக்குவதுடன், ரயில் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தித்வா புயலால் சேதமடைந்த ரயில்வே உட்கட்டமைப்புகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினால் வழங்கப்படவுள்ள கடன் உதவித் திட்டத்தின் கீழ், இந்தப் பாலத்துக்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் புதிய பாலத்தின் நிர்மாணத்தின் மூலம் மாத்தளை ரயில் பாதையை தேசிய ரயில்வே வலையமைப்புடன் மேலும் சிறப்பாக இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கண்டி பெருநகரப் பிராந்தியத்தில் விரிவான புறநகர் ரயில் வலையமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூற்று ஆய்வும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய, பிரதான ரயில் பாதையில் கடுகண்ணாவையிலிருந்து பேராதனை ஊடாக கம்பளை வரையிலான பகுதியை இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை ரயில் பாதையில் பேராதனையிலிருந்து கட்டுகஸ்தோட்டை வரையிலான பகுதியையும் இரட்டை ரயில் பாதையாக மாற்றுவதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள ஒற்றை ரயில் பாதைக் கட்டமைப்பினால் ஏற்படும் போக்குவரத்துத் திறன் கட்டுப்பாடுகளைக் குறைத்து, ரயில் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் இணைப்புத் திறனை மேம்படுத்துவதே இத்திட்டங்களின் நோக்கமாகும்.

புதிய ரயில் பாலத்தை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

…………….

யாழ்ப்பாணத்திற்கும் மெட்ரோ பேருந்துச் சேவை

நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் இன்று (10.11.2026) முன்னெடுக்கப்பட்டன.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில், மெட்ரோ பேருந்துச் சேவையை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கான மெட்ரோ பேருந்துச் சேவையை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்டு, தேவையான முன் ஆயத்தப் பணிகளைத் துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது தெரிவித்தார்.

…………….

கடுன்னாவை – கனேதென்ன வீதி நாளை காலை 6 மணி வரை மூடல்!

கொழும்பு – கண்டி (A1) பிரதான வீதியில் கடுன்னாவை பாறைச் சுரங்கத்திற்கு அருகில் ஏற்பட்ட பாறைச் சரிவு காரணமாக, கடுன்னாவைக்கும் கனேதென்னைக்கும் இடையிலான வீதி நாளை (11) காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, பாரிய பாறைகளும் மண் மேடுகளும் வீதியில் சரிந்து விழுந்துள்ளன. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த வீதிப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்தப் பாறைச் சரிவினால் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வீதியை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறப்பதற்கு முன்னர், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் தடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

………….

கொழும்பில் வெள்ள அனர்த்தங்களைத் தடுக்க நீண்டகாலத் திட்டங்கள் அவசியம் – பிரதமர்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் திடீர் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் 6ஆம் திகதி பெய்த கடும் மழையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில், நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல், பல்வேறு அரச நிறுவனங்களும் துறைகளும் இணைந்து செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கொழும்பில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கழிவகற்றல் முகாமைத்துவம், நீர்வழிகளைத் துப்புரவு செய்தல், தாழ்நிலப் பகுதிகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, கொலன்னாவையில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் முன்னெடுக்கப்படும் திட்டம், கடுவெலயில் 450 மில்லியன் ரூபா செலவில் நீர்வழிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேலும், வாய்க்கால்கள் மற்றும் நீர்வழிகளைத் துப்புரவு செய்வது அனர்த்தங்கள் ஏற்படும்போது மாத்திரம் மேற்கொள்ளப்படும் பணியாக இல்லாமல், தொடர்ச்சியாகப் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

…………….

வீதி விபத்துகளில் 11 மாதங்களுக்குள் 2,381 பேர் பலி

இலங்கையில் 2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 2,257 வீதி விபத்துகளில் 2,381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், அதிக வேகம் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டமே உயிரிழப்புகளுடன் கூடிய விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைவதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 785 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், 227 பேர் பாதசாரிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 60 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இளம் வயதினர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் எச்சரித்தார். பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய கோர விபத்துக்குப் போட்டி மனப்பான்மையுடன் வாகனம் செலுத்தியமையும், ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றமையும் காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், 76 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 609 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சுமார் 10,000 போக்குவரத்துப் பொலிஸார் வீதிப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், வாகன சாரதிகள் வீதி விதிமுறைகளை மதித்து, பயணிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து வீதிப் பயனாளர்களினதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வாகன சாரதிகள் தங்களது இலக்குகளைப் பாதுகாப்பாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே போக்குவரத்துப் பொலிஸாரின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

……………..

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்க வலுவான சட்டங்கள் அவசியம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் அவசியமாகும். எந்தவொரு சட்டமூலமும் உடனடியாக நிறைவேற்றப்படுவதில்லை. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும், பாராளுமன்றக் குழு நிலை விவாதங்களின் போது உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு சட்டமூலமும் உடனடியாக நிறைவேற்றப்படுவதில்லை. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும், பாராளுமன்றக்குழு நிலை விவாதங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

இச்சட்டம் சாதாரண தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைப் பாதிக்காது. அவை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சர்வதேசத் தொடர்புகளுடன் கூடிய குற்றக் வலைப்பின்னல்கள் தீவிரமடைந்துள்ளதால், அவற்றை ஒடுக்க கடுமையான சட்டங்கள் அவசியமாகும். தேவையற்ற அம்சங்களை நீக்கிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.அரசு சேவைகள்

புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இருப்பினும், ஊடக நிறுவனங்கள் தங்களது அடையாள அட்டைகளைத் துஷ்பிரயோகம் செய்து குற்றவாளிகளைச் செய்தி மாநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

…………….

 

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles