முட்டை விலையும் எகிறியது

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சந்தையில் ஒரு முட்டை தற்போது 42 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி உயர்ந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கான பிரதான காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழையினால் காலநிலை பாதிக்கப்பட்டு, முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது. இதனால் கோழிப் பண்ணைகளின் உற்பத்தித் திறன் 80 சதவீதத்திலிருந்து 50 முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடைத் தீவன மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் உற்பத்திச் செலவுகளை உயர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரிகள் தமது உற்பத்தியை அதிகரிக்கத் தயாராகி வருவதால் முட்டைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதல்ல என்றும், சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்துக்கு இடையிலான மாற்றத்தினாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டையின் விலை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை உயர்ந்த நிலையிலேயே தொடரக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles