கென்யாவின் நடப்பு உலக மரதன் சாம்பியனும், முன்னாள் ஒலிம்பிக் மரதன் சாம்பியனுமான பெரஸ் ஜெப்சிர்சிர் (Peres Jepchirchir), தடைசெய்யப்பட்ட EPO ஊக்கமருந்தைப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருள் அல்லது அதன் வளர்சிதை மாற்றப் பொருட்கள் உடலில் இருப்பது தொடர்பான ஊக்கமருந்து விதிமீறலையும், தடைசெய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியமை அல்லது பயன்படுத்த முயற்சித்தமை தொடர்பான விதிமீறலையும் ஜெப்சிர்சிர் ஒப்புக்கொண்டுள்ளதாக AIU தெரிவித்துள்ளது.
குறிப்பாக, EPO என்பது எரித்ரோபொய்டின் (Erythropoietin) என்ற இயற்கையான ஹார்மோனின் செயற்கை வடிவமாகும். இந்த ஹார்மோன் முக்கியமாக சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படுவதுடன், எலும்பு மஜ்ஜையில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
விளையாட்டு வீரர்கள் சிலர் செயற்கை EPO-வை ஊக்கமருந்தாக தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரித்து, நீண்ட நேரம் சோர்வின்றி விளையாடும் திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஜெப்சிர்சிர் கடந்த மாதம் தற்காலிகமாக போட்டிகளில் பங்கேற்கத் தடை செய்யப்பட்டார். தடகள விளையாட்டுகளில் ஊக்கமருந்து பயன்பாட்டை விசாரிக்கும் AIU, ஆகஸ்ட் மாத இறுதியில் சிட்னி மரதன் போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கு முன்னதாக, கென்யாவில் போட்டிக்கு வெளியே எடுக்கப்பட்ட மாதிரியில் EPO இருப்பதை கண்டறிந்தது.
ஜூலை 17ஆம் திகதி முதல் அவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளின் முடிவுகளையும் தகுதி நீக்கம் செய்வதற்கு ஜெப்சிர்சிர் ஒப்புக்கொண்டுள்ளார்.
33 வயதான அவர், 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மரதன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதுடன், கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றினார். அரை மரதன் ஓட்டத்தில் உலக சாதனையைப் படைத்த முன்னாள் வீராங்கனையும் ஆவார்.
சிட்னி மரதன் நிர்வாகம், ஜெப்சிர்சிரின் போட்டியின்போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனை எதிர்மறையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அவரது தகுதி நீக்கம் காரணமாக 2026ஆம் ஆண்டுக்கான பெண்கள் சாம்பியன் பட்டம் இரின் செப்டாய் (Irine Cheptai) வசம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.
2026 உலக வீதி ஓட்டப் போட்டியில் அரை மரதன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வெரோனிகா லோலியோ (Veronica Loleo), போட்டிக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் EPO ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மூன்று ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2023ஆம் ஆண்டு பெர்லின் மரதன் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்ற ரொனால்ட் கோரிர் (Ronald Korir), தனது தடகள வீரர் உயிரியல் கடவுச்சீட்டில் (Athlete Biological Passport) கண்டறியப்பட்ட அசாதாரண மாற்றங்களுக்கு விளக்கம் அளிக்கத் தவறியதால், ஆறு ஆண்டுகள் போட்டித் தடையைப் பெற்றுள்ளார்.
2023ஆம் ஆண்டு மே 6ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை கோரிரிடம் இருந்து பெறப்பட்ட 20 இரத்த மாதிரிகளை AIU ஆய்வு செய்ததில், அசாதாரண மாற்றங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIU தலைமை நிர்வாக அதிகாரி பிரெட் கிளோதியர் (Brett Clothier) இதுகுறித்து தெரிவிக்கையில்,
“கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிரான போராட்டத்தில் கென்ய அதிகாரிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
தற்போதைய நிலைமையை கென்ய அரசாங்கம் அறிந்துள்ளது. கென்ய ஊக்கமருந்து தடுப்பு முகமையை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டில் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு துணைபுரியும் குற்ற வலையமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கென்ய நீண்ட தூர ஓட்ட வீரர்கள் தொடர்பான ஊக்கமருந்து விவகாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவங்களும் அதனுடன் தொடர்புடைய சமீபத்திய வழக்குகளாக அமைந்துள்ளன.
பெண்கள் மரதன் உலக சாதனையை வைத்திருக்கும் கென்ய வீராங்கனை ரூத் செப்ங்கெடிச் (Ruth Chepng’etich), தடைசெய்யப்பட்ட சிறுநீர் பெருக்கி மருந்து (Diuretic) பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்.
முன்னாள் நியூயோர்க் மரதன் சாம்பியனான அல்பர்ட் கோரிர் (Albert Korir), மார்ச் மாதம் ஐந்து ஆண்டுகள் போட்டித் தடையைப் பெற்றார்.
