மலையக மக்கள் தேயிலை கொழுந்தையும், விவசாயிகள் புட்களை உண்ண வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து இன்று (24) பதுளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்க்கு பதிலடி வழங்கும் நோக்குடனும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதுளை நகரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் பங்கேற்று எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பதுளை நகரில் ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஸ்.,

“மலையக மக்களின் இருப்பையும் உரிமையையும் மீட்டெடுக்க நேற்றையதினம் ஹப்புத்தளை நகரில் போராட்டம் நடத்தினோம். ஆதன் இரண்டாவது அங்கமாக பதுளையில் போராட்டம் நடத்துகின்றோம்.
இது முடிவல்ல ஆரம்பம் நாட்டில் அரிசி தட்டுப்பாடு உரத் தட்டுப்பாடு பால்மா தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு தட்டுப்பாடுகள் மட்டுமே தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன.
இலங்கை வறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. பொறுமை இழந்து இன்று நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி இருக்கின்றார்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கை வருமானத்திற்கும் அல்லோல பட்டுக்கொண்டிருக்கும் மலையக மக்கள் தேயிலை கொழுந்தையும், விவசாயிகள் புட்களை உண்ண வேண்டிய அவல நிலை உள்ளது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதனைப் போன்று மக்கள் பொறுமையைக் கடந்து இன்று வீதியில் இறங்கி இருக்கின்றார்கள். எமக்கான உரிமைகளை மீட்டெடுக்க புரட்சி வடிவில் இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கின்றோம்” என்றார்.










