கொத்துரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் அடித்துப் படுகொலை

கொத்துரொட்டி வாங்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்படுத்திக்கொண்ட முறுகலையடுத்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், காலியில் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பத்தேகம பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

26 வயது இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

பத்தேகம, நாகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கொத்துரொட்டி வாங்குவதற்காக நேற்றிரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.


இதன்போது குறித்த இளைஞருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்திரத்தில் ஹோட்டலிலிருந்து வெளியேறிய இளைஞர், தனது வீட்டுக்குச் சென்று கூரிய ஆயுதமொன்றை எடுத்துவந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.

அதேவேளை, இந்த மோதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து ஹோட்டல் உரிமையாளரின் மகனைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles