உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அரசு மறைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில ஆவணங்கள் மட்டுமே ஜனாதிபதி வசம் உள்ளது.” – என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறவில்ல, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல்போய்விட்டது, சாட்சியங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்று முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னாள் பாதுகாப்புச்செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எதிராக ஓய்வுபெற்ற சட்டமா அதிபரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடத்துமாறு மட்டுமே அரசால் கோரமுடியும். மாறாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல், சாட்சிகளை முன்னைத்தல் போன்றன சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளாகும்.
பிரதான வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. அது வந்த பின்னர் என்ன நடந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றேன். அரச தரப்பில் செய்ய வேண்டிய அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் எதுவும் மறைக்கப்படவில்லை. அவ்வாறு மறைக்கப்படுகின்றது எனக்கூறப்படுவது அடிப்படையற்றக் குற்றச்சாட்டாகும். எல்லா ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக் கருதப்படும் சில ஆவணங்கள் ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபரிடம் உள்ளன. அவற்றை வெளிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் 26 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூவரடங்கிய மேல் நீதிமன்றமொன்று நிறுவப்பட்டுள்ளது. விரைவில் வழக்கு விசாரணை ஆரம்பமாகும்.” – என்றார்.
