உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு அடிப்படை காரணியாக அமைந்ததே அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமாகும். எனவே, அத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும் – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் லக்ஷ்மன் கிரியல்ல கருத்து வெளியிட்டார். பேராயர் முன்வைத்துள்ள விடயமொன்றையும் சுட்டிக்காட்டினார். உடன் பதில் வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு அடிப்படை காரணம் என்ன? அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமாகும். ரணில் விக்கிரமசிங்கவை ஜேஆர் ஜயவர்தன போன்று ஆக்கிவிட்டு, மைத்திரிபால சிறிசேனவை அதிகாரமற்ற அதாவது பெயரளவிலான ஜனாதிபதியாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் உண்மையான நோக்கம் இதுவே.
எனினும், உயர்நீதிமன்றத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் சர்ச்சைகள் மூண்டன. அதனால் பொலிஸார், புலனாய்வுப்பிரிவினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் இரண்டாக பிளவுபட்டனர். தேசிய பாதுகாப்புசபைக்கூட்டம் முறையாக நடைபெறவில்லை.
நியூசிலாந்தில் முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், காஷ்மீர் எல்லை அல்லது ஆப்கானிஸ்தானில் காபூலில் உள்ள அமெரிக்க படையினர்மீது தாக்குதல் நடத்தவே ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம் தீட்டினர். எனினும், இலங்கையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவியதால், அதனை சாதகமாக்கிக்கொண்டு, இங்கு தாக்குதல் நடத்தப்பட்டு, நாடு சுடுகாடாக்கப்பட்டது. இதற்கு நல்லாட்சிதான் பொறுப்பு. ரணிலை அதிகாரம் மிக்கவராக மாற்றபோய்தான் இவ்வாறான நிலை ஏற்பட்டது. எனவே, அவர்தான் முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.
