பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்கவும்!

” அரசமைப்பு மறுசீரமைப்பு ஊடாக , நாடாளுமன்றம் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்றம் அடைய வைக்கும்.”

இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

” அரசியலமைப்பின் 21 வது திருத்தம் தொடர்பில் தற்போது பேசப்படுகின்றது. இந்த 21ஆவது திருத்தம் என்பது 19ஆம் திருத்தத்தின் ஒத்த ஒன்றே. ஆனால் அதனை முழுமையாக 19ஆம் திருத்தத்தின் வடிவம் எனக் கூறமுடியாது. 19வது திருத்தத்தில் உள்ள பல விடயங்கள் 21வது திருத்தத்தில் இல்லை.

19ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதன் ஊடாக மீளவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொடுக்க முடியும் என்பது மாத்திரமல்ல பல விடயங்களை நடைமுறைப்படுத்தலாம். நாடு பொருளாதார ரீதியாக பலமடைய வேண்டுமாக இருந்தால் மாகாணங்கள் விருத்தி அடைய வேண்டும்.

மாகாணசபை ஒழுங்காக இயங்கவில்லை, மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மாகாணசபை சரியாகச் செலவு செய்யவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதைப் பற்றி பேச மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு என்ன அருகதை இருக்கிறது? நாட்டை மிக மோசமான பாதையில் கொண்டு செல்ல அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு ஏனையவர்களுக்கு ஆட்சியதிகாரம் தெரியாது எனகூற எந்த அருகதையும் கிடையாது.

உலகிலே அதிகளவு எண்ணிக்கையில் இராணுவத்தினரை வைத்திருக்ககூடிய நாடுகளில் 14 ஆவது இடத்தில் இலங்கை இருக்கிறது. இந்த பெரும்படை தேவைதானா?

21ஆவது திருத்தம் மூலம் ,நாடாளுமன்றில் இருந்து பறித்த அதிகாரத்தையும் மாகாணங்களிடம் இருந்து பறித்த அதிகாரங்களையும் உள்ளூராட்சி சபையில் இருந்து பறித்த அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும். இது எங்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. சிங்கள உள்ளூராட்சி சபைகளும் சிங்கள மாகாணசபைகளும் இதன்மூலம் பயன்பெறும். இன்றைய மோசமான பொருளாதார சூழலில் இது நிச்சயம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நடத்துவதற்கு காரியத்தை கொடுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles