‘மலையக கட்சிகளுடனும் பேச்சு’ – மீண்டும் உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி!

75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு பலம் வாய்ந்த உண்மையான இலங்கையர்களாக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

எந்தவொரு சமயமும் நவீன உலகுடன் இணைந்து செல்ல வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எந்த சமயமும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சமயம் அல்ல எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில் இன்று (19) நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் றிஸ்வியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முத்திரையொன்று வெளியிடப்பட்டதுடன் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார அதனை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

” நாம் தமிழர்களுடன் பேச்சுகளை நடத்த ஆரம்பித்துள்ளோம். அதாவது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு நல்லிணக்கத்துக்குப் பங்களிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி நாம் ஆராய்ந்தோம். முதற்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் மீண்டும் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்தக் கலந்துரையாடல் மூலமாக நாம் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

மனோ கணேசன் என்னை ஏன் உற்றுப் பார்க்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை. மலையகத் தமிழர்களை சமூகத்துடன் ஒன்றிணைப்பது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம். அவர்கள் தாமதித்து வந்தாலும் அவர்களையும் சமூகத்துடன் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

எமது சமூகத்தில் காலம் தாமதித்து பல இனங்களும் சமயங்களும் ஒன்றிணைக்கப்பட்டாலும் அவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்கவில்லை. எனவே அவர்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக முஸ்லிம் இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எனக்கு கலந்துரையாட வேண்டும். 2018 ஆம் ஆண்டின் திகன கலவரம் , 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பன தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படுவதுடன் அதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் நாம் பேச வேண்டும்.

கொழும்பு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினையிலும் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளையே இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம்களும் மன்னார் முஸ்லிம்களும் எதிர்நோக்குகின்றனர்.

இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் , சிங்களவர்கள் போன்று இவர்களிடமும் பேச்சு  நடத்தி அவர்கள் எதிர்கொண்டுள்ள துன்பங்கள், சமூக பின்னடைவுகள் உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொணர வேண்டும். இது நல்லிணக்கம் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கையாக அமையும். எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேபோன்று சிங்களவர்களுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அதிலும் பல குழுக்கள் உள்ளன. சிலர் சாதி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதுபோன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே எனக்கு சமூக நீதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, ஏனைய முஸ்லிம் குழுக்களுடனும் கலந்துரையாடி அவர்களுக்குள்ள பிரச்சினைகளை எமது மூன்றாம் கட்ட சந்திப்பின்போது எமக்கு அறியத்தருமாறு நான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையைக் கேட்டுக் கொள்கின்றேன்.

சமய தலைவர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன, பாகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles