சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்ய முடியாதிருப்பதை கருத்திற்கொண்டு இந்த முடிவை அவர் எடுக்க வேண்டும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

” 288 நாடாளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்கள்தான் இரா.சம்பந்தன் சபைக்கு சென்றுள்ளார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு நாடாளுமன்ற படிகளாக 4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4 இலட்சத்து 19ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா?” என்று வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சுமந்திரன் மேலும் கூறியவை வருமாறு ,

” சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில், நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார்.

2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம்.” – எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles