பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் இல்லை என்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால் பாதீட்டை எதிர்த்து தமது எதிர்ப்பை மொட்டு கட்சி வெளிப்படுத்தும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கட்சி இன்னும் ஆராயவில்லை. பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணமும் எம்மிடம் இல்லை. கட்சிக்குள் எமது யோசனைகள் முன்வைக்கப்படும், அதன் அடிப்படையில் கட்சி எடுக்கும் முடிவில் அடிப்படையில் நாம் செயற்படுவோம். கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் வெளியேற வேண்டும்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மொட்டு கட்சியில் இருந்து வெளியேறிய அணிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை. அடுத்த தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட அந்த தரப்புகளுக்கு பெற முடியாத நிலை காணப்படுகின்றது. பிரதான கட்சிகளில்தான் தேர்தலுக்கு வர மேற்படி கட்சிகள் முற்படும்.
தேசிய மக்கள் சக்தி பக்கம் முழுமையாக மக்கள் அலை இல்லை. தேசிய மக்கள் சக்தியின் வாக்குவீதம் அதிகரித்துள்ளது உண்மைதான். அதாவது 2 வீதமாக இருந்தது 12 வீதமாகலாம். அதேபோல மொட்டு கட்சிக்கான மக்கள் ஆதரவும் அப்படியே தொடர்கின்றது.” – என்றார்.










