பண்டாரவளையில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

பண்டாரவளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகமும் இணைந்து, நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (Rabies) தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.

பகல் நேரங்களில் நகரில் காணப்படும் அதிக நெரிசல் மற்றும் பரபரப்பு காரணமாக தெருநாய்களைப் பிடிப்பது கடினமாக உள்ளது. இதனால், இந்த வேலைத்திட்டம் இரவு நேரங்களில் மாற்றப்பட்டு, மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பண்டாரவளை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களான ரோய் விஜேசூரிய, டபிள்யூ. ஹேரத், எஸ். சுரேஷ்குமார் ஆகியோருடன், சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து இத்தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நகரில் சுற்றித் திரியும் அனைத்து தெருநாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் இந்த விசேட வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜேசூரிய தெரிவித்தார்.

(த. டிமேஷன்)

Related Articles

Latest Articles