சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி (Almarjani) பாடசாலைக்கு அருகிலுள்ள உப வீதிகளில் தலைக்கவசம் (Helmet) இன்றியும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களை ஜூலை 31 ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்று மாலை மேலதிக வகுப்புகளுக்கு (டியூஷன்) வந்திருந்த மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
அதனடிப்படையில், காணொளியைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை அடையாளம் கண்ட பொலிஸார் குறித்த இளைஞர்களைக் கைது செய்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 8 மோட்டார் சைக்கிள்கள் கடந்த மூன்று நாட்களில் அடையாளம் காணப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19 முதல் 21 வயதுக்குட்பட்ட இந்த இளைஞர்கள் அனைவருமே அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று (3) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் காணப்பட்ட ஏனைய சாரதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
கடந்த ஜூலை 30 ஆம் திகதி நீர்கொழும்பில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்று சில நாட்களிலேயே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இதுபோன்ற சோகமான சம்பவங்களும் விபத்துக்களும் தொடர்ந்து இடம்பெற்று வரும்போதிலும், பல வாலிபர்கள் அவற்றிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை என்பதே வேதனையான உண்மையாகும்.










