கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதியில் ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பேரிடரால் வீடுகளை இழந்த குடும்பங்கள், தற்காலிகமாகத் தோட்டப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில், டேசன் தோட்டப் பகுதியில் ஒதுக்கப்பட்ட அரச காணியில், வேறு பகுதியைப் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று (29) நடைபெற்றுள்ளது.
இந்த நடவடிக்கைக்குத் தோட்ட மக்களும், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை இழந்த தமக்கு அந்த வீட்டுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
