விளையாட்டுக்குள் அரசியலை புகுத்திய அர்ஜென்டினா? விசாரணை ஆரம்பம்

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றியை, அர்ஜென்டினா காற்பந்து வீரர்கள் பாக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான தங்களது நாட்டின் உரிமை கோரலை ஆதரிக்கும் பதாகை ஒன்றை ஏந்தி கொண்டாடியுள்ளனர். மைதானத்தின் விதிகளை மீறிய இந்த நடவடிக்கை காரணமாக அர்ஜென்டினாவிற்கு தண்டனை வழங்குவது குறித்து முடிவெடுப்பதற்கு முன், பிபா (FIFA) போட்டி அறிக்கைகளை மதிப்பீடு செய்து வருகிறது.

அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் வியத்தகு முறையில் மீண்டெழுந்து இரண்டு கோல்களை அடித்தது. இதன் மூலம் தாமஸ் துச்சலின் (Thomas Tuchel) இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதுவதை உறுதி செய்தது.

போட்டியின் இறுதி விசிலுக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் “Las Malvinas son Argentinas” (மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை – அதாவது ஃபாக்லாந்து தீவுகள் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை) என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தினர்.

தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரித்தானியாவின் கடல் கடந்த எல்லைப் பகுதியான பாக்லாந்து தீவுகள், ஐக்கிய இராச்சியத்திற்கும் (UK) அர்ஜென்டினாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் இறையாண்மை சர்ச்சைக்குரிய பகுதியாகும்.

இது குறித்து பிபா செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில், “நிலையான நடைமுறையின்படி, பிபாவின் சுதந்திரமான ஒழுங்குமுறைக் குழு தற்போது போட்டி அறிக்கைகளை மதிப்பீடு செய்து வருகிறது. பிபாவின் ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன், இது தொடர்பான சூழல்கள் ஆராயப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு சுலோவீனியாவுக்கு எதிரான நட்புரீதியான போட்டியின் போது இதே செய்தியைக் கொண்ட பதாகையை ஏந்தியதற்காக, அர்ஜென்டினா காற்பந்து சம்மேளனத்திற்கு பிபா £20,000 அபராதம் விதித்திருந்தது. அரசியல் செயல்பாடுகள் மற்றும் அணியின் தவறான நடத்தை தொடர்பான விதிகளை அந்த நடவடிக்கை மீறியதாக உலக காற்பந்து நிர்வாக அமைப்பு அப்போது குறிப்பிட்டிருந்தது.

பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் கருத்து

இந்த விவகாரத்தை பிபா விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street – பிரித்தானிய பிரதமர் அலுவலகம்) ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து பிரதமரின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “உலகக் கோப்பை எங்களுடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஃபாக்லாந்து தீவுகள் நிச்சயமாக எங்களுடையவை. ஃபாக்லாந்து மீதான எங்களது அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையாது” என்றார்.

Related Articles

Latest Articles