ஜனநாயகக் குடியரசு காங்கோவின் (DRC) காடுகளில் வாழும், கறுப்பு நிற முகமும் ஆச்சரியமளிக்கும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு, அறிவியலின் புதிய இனமாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு உரோமங்களைக் கொண்ட இந்த முதனி (primate) வகை விலங்கு, அந்நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள லோமாமி தேசிய பூங்காவின் (Lomami National Park) அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளில், மிக உயரமான மரங்களின் உச்சியில் மறைந்திருந்த போது கண்டுபிடிக்கப்பட்டு புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரிந்து வரும் வனவிலங்கு பாதுகாவலர்கள், 2008 ஆம் ஆண்டிலேயே இந்த அசாதாரண தோற்றமுடைய விலங்கை முதன்முதலில் பார்த்ததாகப் பதிவு செய்திருந்தனர். ஆனால், அப்போது அவர்களால் தெளிவற்ற ஒரு புகைப்படத்தை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்த விலங்கு மீண்டும் தென்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்தக் குரங்கைக் கண்டறிந்து ஆய்வு செய்யப் புறப்பட்டது. அந்த ஆய்வின் முடிவிலேயே, இது இதுவரை அறியப்படாத ஒரு புதிய இனம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஐந்தாவது குரங்கு இனம் இதுவாகும்.
புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தின் (Florida Atlantic University) முனைவர் பட்ட (PhD) மாணவரான ஜூனியர் அம்போகோ (Junior Amboko), ஒலிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் விரிவான மரபணு ஆய்வுகள் உள்ளடங்கிய இந்தத் தேடல் வேட்டையில் முக்கியப் பங்கு வகித்தார். இந்த ஆய்வு முடிவுகள் ‘PLoS One’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
மிகக் சில மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விலங்கின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தது ஒரு “அற்புதமான உணர்வு” என்று அம்போகோ தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ஒரு புதிய இனத்தைக் “கண்டறிவது” என்பது, அது மரபணு ரீதியாகத் தனித்துவமாக உருவாகியுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து உறுதிப்படுத்துவதைக் குறிக்கிறது.
அந்தப் பகுதி மக்கள் சிலருக்கு இந்தக் குரங்கின் இருப்பு ஏற்கனவே தெரிந்திருந்ததுடன், அவர்கள் இதை ‘லிக்வேலி’ (Likweli) என்ற பொதுவான பெயரால் அழைக்கின்றனர்.
இருப்பினும், இந்தக் குரங்குகள் “ஒருவித வெட்கம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவை” என்றும், மரங்களின் உச்சியில் மறைந்து வாழும் தன்மையுடையவை என்றும் அம்போகோ கூறினார்.
“எங்களது தேடலின் ஒரு பகுதியாக, இந்த விலங்குகள் வாழும் பகுதிக்கு அருகில் உள்ள 52 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் நாங்கள் நேர்காணல் நடத்தினோம். அதில் வெறும் எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இவற்றை இதற்கு முன்பு பார்த்திருந்தனர்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
காங்கோ (DRC), அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, அந்நாட்டின் இயற்கை பல்லுயிர் பெருக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த விலங்கிற்கு ‘கொலோபஸ் காங்கோயென்சிஸ்’ (Colobus congoensis) என்ற லத்தீன் பெயரைச் சூட்டியுள்ளது.
