இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம் (16.07.2026) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் சப்ரகமுவ மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர், உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான விசேட சந்திப்பு இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இதன் போது சட்டவிரோத மது ஒழிப்பில் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் இதுவரை செய்துள்ள சுற்றி வலைப்புகள் மற்றும் திட்டமிடல்கள் பற்றியும்… சுற்றிவலைப்புக்களின் போது அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தேவையான சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், போலீஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதி போலீஸ் மா அதிபரும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் தெளிவுபடுத்தினர்.
மக்களை இதில் இருந்து விடுவிக்க பொலிஸாரால், சட்டத்தால் மட்டும் முடியாது என்பதனையும் அதற்கு ஏனைய அரச ஊழியர்கள்,பொது மக்கள் மற்றும் அரசியல் தலைமைத்துவங்களின் பங்களிப்பும் மிக முக்கியம் என்பதனை மாகாண பிரதி பொலீஸ் மா அதிபர் தெளிவுபடுத்தினார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைகளின் படி இதுவரை சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக இருந்த சட்டத்தில் மாற்றம், இவ் சுற்றிவளைப்புக்களை அதிகரிக்க மற்றும் இலகு படுத்த இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான வசதிகள் சார்ந்த பரிந்துரை, மேலதிக பொலிஸ் அதிகாரிகளை இரத்தினபுரி மாவட்டத்துக்கு பெற்றுக் கொடுத்தல் என்பவை பற்றி கெளரவ ஜனாதிபதி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேரடியாக கலந்துரையாடுவதாகவும் உறுதியளித்தார்.
