உறுதிமொழிகள் காற்றில்: விவசாயிகள் நடுத்தெருவில் – சஜித் சீற்றம்

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார். இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை விவசாயிகளே தொடங்கிவிட்டனர் என்றும், கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி இவர்களுக்கும் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் விவசாயிகளை ‘ராஜாவாக்குவோம்’ என்று முழங்கியவர்கள், இன்று அதே விவசாயிகளை ‘கசிப்புக்காரர்கள்’ மற்றும் ‘கொள்ளையர்கள்’ என முத்திரை குத்தி அவமதிக்கின்றனர் என்றும் அவர் சாடினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120 ரூபாவையே உத்தரவாத விலையாக வழங்குகின்றது. இதனால் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுகின்றது. தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படவில்லை.

தரமற்ற உரம் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதி, உர மானியம் சரியான நேரத்தில் கிடைக்கப்பெறாமை மற்றும் உர உபகரணங்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். நாட்டின் 30% முதல் 40% மக்கள் வறுமையில் வாடுவதற்கு அரசின் தவறான கொள்கைகளே காரணம்.

விவசாயப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. விவசாய அமைச்சர் ஊடகவியலாளர்களைப் பார்த்து விரல் நீட்டும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்.

மாலுமி (திசைகாட்டி) அரசியல் செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பிரபுத்துவ அரசியலுக்கு மாறி விவசாயிகளை மறந்துவிட்டனர். முறையான விவசாயக் கொள்கை எதுவுமின்றி, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை உள்ளடக்கிய சந்தைப்படுத்தல் வலையமைப்பை உருவாக்கத் தவறிய இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை விவசாயிகளே தொடங்கிவிட்டனர். கடந்த காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களுக்கு எதிராகச் செயற்பட்ட ஜனாதிபதிகளை விரட்டியடித்தார்களோ, அதே கதி இவர்களுக்கும் ஏற்படும்.

எத்தகைய தடைகள் வந்தாலும், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இந்த அரசின் போலியான வாக்குறுதிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம் என விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles