இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஒன்றிணைய வேண்டும் – நேபாளம் அவசர அழைப்பு

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ள நிலையில், இமயமலைப் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் (Shisir Khanal) வலியுறுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 27ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய கனால், தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவை ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்றும், இமயமலையின் சூழலியல் மாற்றங்கள் முழுப் பிராந்தியத்தையும் பாதிக்கக்கூடியவை என்றும் எச்சரித்தார்.

“இமயமலையில் உருகுவது இறுதியில் கடலின் நீர்மட்ட உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் ஆபத்தை இப்போது நமது கண்முன்னே பார்க்கிறோம்,” என்ற கருத்தை முன்வைத்த அவர், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அரசியல் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தாலும், இயற்கை மற்றும் நீர்வள அமைப்புகளால் ஒன்றோடொன்று ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இமயமலையில் உருவாகும் பனிப்பாறைகள், ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் எந்த ஒரு நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவை அல்ல. ஒரு நாட்டில் ஏற்படும் பனிப்பாறைச் சரிவு அல்லது திடீர் வெள்ளம் சில மணி நேரங்களுக்குள் எல்லைகளைத் தாண்டி மற்ற நாடுகளையும் பாதிக்கக்கூடியது என்பதையே தற்போதைய பேரழிவு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய உலகப் பகுதிகளில் இமயமலையும் ஒன்று எனக் குறிப்பிட்ட கனால், தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள் எதிர்காலத்தில் பேரழிவு வெள்ளங்கள், நிலச்சரிவுகள் மற்றும் நீர்வளப் பற்றாக்குறையை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைக்கு அறிவியல் ஆய்வுகளும் வலுவான பின்னணியை வழங்குகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சர்வதேச மலைப்பகுதி ஒருங்கிணைந்த அபிவிருத்தி மையமான ICIMOD-ன் ஆய்வின்படி, Hindu Kush–Himalaya பிராந்தியத்தில் பனிப்பாறைகள் இழக்கும் வேகம் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரட்டிப்பாகியுள்ளது. இந்த மலைப்பகுதிகளில் இருந்து உருவாகும் நீர்வளத்தை கீழ்நாடுகளில் வாழும் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள் சார்ந்துள்ளனர்.

இதனால், இமயமலைப் பனிப்பாறைகளின் உருகலை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் குடிநீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மின்சார உற்பத்தி மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றையும் அது நேரடியாகப் பாதிக்கக்கூடும்.

இதற்கிடையில், ஆகஸ்ட் 26ஆம் திகதி நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தற்போதைய பேரழிவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நிபுணர்களின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, இமயமலையில் உள்ள ஒரு பனிப்பாறையின் கீழ்ப்பகுதி உடைந்து விழுந்து, பனி, பாறைகள் மற்றும் மண் மிகப்பெரிய அளவில் ஆற்றுப்பள்ளத்தாக்கிற்குள் சரிந்ததே இந்த திடீர் வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 28ஆம் திகதி சமீபத்திய நிலவரப்படி, நேபாளத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. நேபாளம் மற்றும் அண்டைய திபெத் பகுதிகளில் சேர்த்து கிட்டத்தட்ட 1,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரிகர்களும் உள்ளனர்.

அதேநேரத்தில் பேரழிவால் உருவான இயற்கை தடுப்பு ஏரிகள் உடைந்து மீண்டும் பெருவெள்ளம் ஏற்படக்கூடிய அபாயமும் நீடிக்கிறது. சீன அதிகாரிகள் அத்தகைய ஏரிகளைக் கண்காணித்து வரும் நிலையில், புதிய நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு அபாயம் காரணமாக திபெத்தின் சில ஆபத்தான பகுதிகளில் மீட்புக் குழுக்களே பாதுகாப்பான இடங்களுக்கு பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே கனால் முன்வைத்துள்ள பிராந்திய ஒத்துழைப்பு கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. “இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாம் அனைவரும் சூழலியலால் இணைக்கப்பட்டுள்ளோம். நமது எதிர்காலமும் இந்த இமயமலைச் சூழலியலை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது,” என்பதே அவரது செய்தியாகும்.

தற்போதைய பேரழிவு ஒரு நாட்டிற்கான எச்சரிக்கை மட்டுமல்ல; இமயமலைப் பிராந்தியத்தில் உருவாகும் காலநிலை மாற்ற அச்சுறுத்தலுக்கு அரசியல் எல்லைகள் இல்லை என்பதற்கான மற்றொரு கடுமையான நினைவூட்டலாகவும் மாறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles