ஓமானில் சிக்கிய பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை தீவிரம்

“சமித்புர சது” என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை ஒப்படைத்துள்ளனர்.

இண்டர்போல் (Interpol) சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் ஓமான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், அங்கிருந்து இலங்கைக்குப் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மோதரை, (சமித்புர) பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு உள்ளிட்ட இலங்கையில் நடைபெற்ற பல்வேறு தீவிர குற்றவியல் சம்பவங்களுடன் இவருக்குத் நேரடித் தொடர்பு இருப்பதாகப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

மஸ்கட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சதுரங்கவை, இலங்கைச் சட்ட அமுலாக்க அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம், பாதாள உலகக் குற்றச் செயல்கள் மற்றும் முக்கிய குற்றங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles