நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றச் செயலுக்கு உதவி புரிந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆண் ஒருவரையும் 23 வயதுடைய பெண் ஒருவரையும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆகஸ்ட் 17 அன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 25 கிராம் 840 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தனிப்பட்ட சோதனையின் போது, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மட்டக்குளி, தொம்பே மற்றும் முல்லேரியாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மேலும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

இந்த மூன்று சந்தேக நபர்களிடமிருந்து 12 கிராம் 380 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles