மலையக தமிழர்களின் நில உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!

“இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் தற்காலிக குடிசை வீடு தாக்கி அழிக்கப்பட்டமை திட்டமிடப்பட்ட காட்டுமிராண்டி தனமாகும். இது நிர்வாகத்தின் அநாகரீக அடக்குமுறை மட்டுமல்ல, தொழிலாளர் சமூகம் தொடர்ந்தும் அடிமை தனத்துக்குள் வைத்திருப்பதன் அடையாளமுமாகும்.”

இவ்வாறு மலையக சிவில், சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ இது நன்கு கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் தொடர்வதை அனுமதிக்க முடியாது. நில உரிமைக்கான போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு , தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

மலையக தொழிலாளர்களின் தற்காலிக வீடுகள் உடைத்து அழிக்கப்படுவதும், மரக்கறி தோட்டங்கள் நாசமாக்கப்படுவதும் தொடர்கதையாக ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

மலையக அரசியல்வாதிகள் தலைமைகள் தலையிடுவதையும், சண்டித்தனம் காட்டுவதையும், பொலிஸார் விரைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்படுவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போதும் காவத்தை சம்பவத்திலும் அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர். தற்போதைய பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் தலையிட்டு 9 பேர் செய்யப்பட்டுள்ளனர் என முகநூலில் பதிவாகியுள்ளது.

இது அரசியல்வாதிகளில் அரசியல் அதிகாரத்தை காட்டுவதற்கும், மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதற்கும் துணை செய்யலாமே தவிர மலையக உழைக்கும் மக்களுக்கு நிரந்தர வாழ்வுரிமை நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

பெரும் தோட்ட நிர்வாக கட்டமைப்பு என்பது அடக்கு முறை மற்றும் அடிமைத்தனத்தின் கட்டமைப்பு மட்டுமல்ல அதன் பின்புலத்தில் பேரினவாதத்தின் கையும் ஓங்கி இருக்கின்றது எனலாம்.

தொழில் மற்றும் வாழ்வுரிமை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் தோட்ட நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே பெருந்தோட்ட கம்பெனிகள் விரும்புகின்றன. அவர்களிடம் நிர்வாகம் இருப்பதையே பேரினவாத அரசியல் அதிகாரமும் விரும்புகின்றது. இதுவும் மலையகத்திற்கு எதிரான இன அழிப்பின் மாற்று வடிவமே.

மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு எதிராக ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களுக்கான நீதி செயற்பாடு தற்காலிக அமைதியை தோற்றுவிக்கலாம். இதன் மூலம் அரசியல் பிரபல்யங்கள் மக்கள் மத்தியில் ஹீரோவாகலாமே தவிர மலையக மக்களுக்கு நிரந்தர அமைதி கிட்டப் போவதில்லை.

தற்போதைய ஆட்சியாளர்களும் மலையக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து பேரினவாத அடிமைத்தன நிர்வாக கட்டமைப்பையே தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல விரும்புகின்றனர். இதுவே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மலையக மக்கள் தொடர்பான அரசியல் மனநிலையாகும்.

இது தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் மலையக அரசியல் தலைமைகள் ஓரணியில் நிற்பதாக தெரியவில்லை. மக்கள் அரசியலை மக்கள் மயமாக்குவதாகவும் தெரியவில்லை.

மலையக சமூகம் இரு நூற்றாண்டுகளை கடந்துள்ள நிலையில் அடுத்த நூற்றாண்டிலும் சலுகை அரசியலை நோக்கிய வழிநடத்துவது என்பது அடையாளத்தையே அழிவுக்கு உட்படுத்தும் செயலாகும்.” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles