பதுளை மாவட்டம், மடுல்சீமை குருவிக்கலையூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பல்வேறு விசேட கிரியைகள், யாக பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
26ஆம் திகதி காலை 9.05 மணிக்கு புண்ணியாகவாசனம் உள்ளிட்ட ஆரம்ப கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், மாலை வேளையில் விசேட பூஜைகளும் நடைபெறவுள்ளன.
27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு புண்ணியாகவாசனம், நவகலச ஹோமம் உள்ளிட்ட விசேட கிரியைகளும், மாலை 5.00 மணிக்கு விசேட பூஜைகளும் நடைபெறவுள்ளன.
28ஆம் திகதி காலை 9.00 மணிக்கு புண்ணியாகவாசனம் மற்றும் பல்வேறு யாக பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மாலை வேளையிலும் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
29ஆம் திகதி காலை 8.30 மணிக்கு புண்ணியாகவாசனம் உள்ளிட்ட கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க்காப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபமலான 30ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட கிரியைகள் ஆரம்பமாகி, தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து முற்பகல் 10.09 மணி முதல் 11.19 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் ஆலய விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், மண்டலாபிஷேக நிறைவு நாளில் 1008 சங்காபிஷேகம் உள்ளிட்ட விசேட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விசேட ஆன்மிக நிகழ்வுகளில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ கதிரேசநாதரின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
( நடராஜா மலர்வேந்தன் )
