வடகொரிய ஜனாதிபதி நல்லவர்: வருட இறுதியில் அவரை சந்திப்பேன் – ட்ரம்ப்

தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.

தமது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கிம் ஜாங் உன்னை ட்ரம்ப் சந்திக்கவுள்ள முதலாவது சந்திப்பு இதுவாகும்.

“கிம் ஜாங் உன்னை எனக்கு மிகச் நன்றாகத் தெரியும். ஒரு புத்திசாலியான ஜனாதிபதியாக இருக்கும் வரை அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவருடன் நான் நல்லுறவைப் பேணுவது நல்ல விஷயமே தவிர கெட்டது அல்ல” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சிகளின் காலஅளவு 11 நாட்களிலிருந்து 5 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், களப் பயிற்சிகளும் சுருக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டுப் பயிற்சிகள் அதிக செலவீனத்தைக் கொண்டுள்ளதாகவும், வட கொரியாவிற்கு தேவையற்ற விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung), கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதியை ட்ரம்ப் வெளியிடவில்லை. எனினும், எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் கலந்துகொள்ள அவர் ஆசியாவுக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles