“ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“அரசியலில் பல குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டாலும், மக்கள் விரோத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டுவதற்காக அனைத்துச் சக்திகளும் ஒன்றுபடும். தமிழ் பேசும் கட்சிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயற்படுவது எமக்கு எந்தவொரு பிரச்சினையும் அல்ல. மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் மற்றும் மலையகத்தின் ஏனைய தலைவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்புகள் சிலவற்றைக் காண்பிக்கின்றனர். ஆனால், இந்த அரசாங்கத்திற்கு முகநூலில்தான் (Facebook) செல்வாக்கு அதிகரித்துள்ளது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும்; அப்போதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்ன என்பது தெரியவரும்” என்றார்.
