இறுதி வாய்ப்பு: மெஸ்ஸியின் சாதனையை முறியடிப்பாரா எம்பாப்பே?

FIFA உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் அடைந்த அதிர்ச்சிகரமான தோல்விகளிலிருந்து மீண்டு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பிரான்ஸ் அணியின் கனவு, கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் அடைந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

மறுபுறம், இங்கிலாந்து அணி அதற்கு அடுத்த நாள் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றத்தைத் தழுவியது.

48 அணிகள் பங்கேற்ற இந்த விரிவுபடுத்தப்பட்ட தொடரில் நீண்ட தூரம் பயணித்ததன் காரணமாக இரு அணிகளின் வீரர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்துள்ளனர்.

இதனால், வட அமெரிக்காவில் உலகக் கோப்பையை ஏந்துவோம் என்ற கனவோடு வந்த வீரர்களுக்கு, இந்த பாரம்பரிய வெண்கலப் பதக்கத்திற்கான (மூன்றாவது இடத்திற்கான) போட்டி ஒரு தேவையற்ற கடமையாகவே தோன்றக்கூடும்.

“இந்த வீரர்களில் எவரும், பிரான்ஸ் வீரர்களாக இருந்தாலும் சரி, இந்தப் போட்டியில் விளையாட விரும்பவில்லை. அவர்கள் இறுதிப் போட்டியிலேயே விளையாட விரும்பினர்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக நாங்கள் எங்களது முழு பங்களிப்பையும் வழங்கினோம்,” என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தோமஸ் டுசெல் (Thomas Tuchel) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மற்றவர்கள் கூடுதல் உந்துதலுடன் களமிறங்கலாம். ஏனெனில், டிடியர் டெஷாம்ப்ஸ் (Didier Deschamps) இறுதி முறையாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

அத்துடன் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனிநபர் சாதனை ஒன்றை எதிர்நோக்கியுள்ளார்.

மியாமி நகரில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியுடன் டெஷாம்ப்ஸின் 14 ஆண்டுகால பயிற்சியாளர் பயணம் முடிவுக்கு வருகிறது.

அவரது பயிற்சியின் கீழ் பிரான்ஸ் அணி 2018 இல் உலகக் கோப்பையை வென்றது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மற்றும் தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பை அரையிறுதிகளுக்குத் தகுதி பெற்றது.

57 வயதான டெஷாம்ப்ஸ் தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் இரண்டாவது உலகக் கோப்பையுடன் விடைபெற விரும்பிய போதிலும், கடந்த தசாப்தத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில் பிரான்ஸ் அணியை ஒரு நிலையான சக்தியாக மாற்றிய அவருக்கு ஒரு சிறந்த விடைபெறுதலை வழங்க சனிக்கிழமை போட்டி வீரர்களுக்குக் கிடைத்துள்ள இறுதி வாய்ப்பாகும்.

‘தங்கக் காலணி’ (Golden Boot)க்கான போட்டி

பிரான்ஸ் அணி இப்போட்டியில் தங்களது ஆரம்ப லெவன் அணியில் பெரும் மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் தொடரில் குறைந்த வாய்ப்புகளைப் பெற்ற வீரர்களுக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும்.

இங்கிலாந்து பயிற்சியாளர் டுசெலும் தங்களது கடினமான தொடருக்குப் பிறகு இதே போன்றதொரு அணுகுமுறையைக் கையாளக்கூடும்.

இருப்பினும், பிரான்ஸ் அணியின் தலைவர் எம்பாப்பே ஆரம்ப வீரராகக் களமிறங்குவதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது.

27 வயதான அவர் இந்த உலகக் கோப்பையில் 8 கோல்களையும், ஒட்டுமொத்த உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்களையும் அடித்துள்ளார். இதனால் அவர் தங்கக் காலணிக்கான பந்தயத்தில் நீடிப்பதுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையை நெருங்கியுள்ளார்.

தற்போது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் (கோல்கள் சமமாக இருக்கும்போது வெற்றியாளரைத் தீர்மானிக்க அசிஸ்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன) முதலிடத்தில் உள்ளார். அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக 21 கோல்களை அடித்த சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.

மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குழு ரீதியான அழுத்தம் குறைவாக இருப்பதால், பிரான்ஸ் அணியின் ஏமாற்றமளிக்கும் பயணத்தை எம்பாப்பேயின் உலகக் கோப்பை வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லாக மாற்றுவதற்கு இப்போட்டி இறுதி வாய்ப்பாக அமையலாம்.

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஹாரி கேன் (Harry Kane) மற்றும் ஜூட் பெலிங்ஹாம் (Jude Bellingham) ஆகிய இருவரும் தலா 6 கோல்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் விளையாடும் பட்சத்தில் தங்கக் காலணியை வெல்வதற்கான சிறிய வாய்ப்பு உள்ளது.

கூடுதல் பரிசுத்தொகை

நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணியை விட மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் கூடுதல் பரிசுத்தொகை கிடைக்கும். அதன்படி, மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 29 மில்லியன் டாலர்களும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் டாலர்களும் பரிசாக வழங்கப்படும்.

Related Articles

Latest Articles