“நாட்டில் எதிர்க்கட்சியினர் என்பது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூட அவர்கள் ஒரு நகைச்சுவை விஷயமாக மாற்றிவிட்டார்கள்” என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். மேலும், அச்சம்பவம் தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டு, விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைக் கண்டறியுமாறே எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனைச் செய்யவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று அவர்கள் கூறினாலும், அதனைச் சமர்ப்பிப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், இதற்கு முன்னர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என்றார்கள், ஆனால் கடைசி வரை அது வரவில்லை.
இன்று நகைச்சுவை வழங்கும் ஒரு தரப்பாக எதிர்க்கட்சி மாறிவிட்டது. எதிர்க்கட்சி மீது எதிர்க்கட்சியினருக்கே நம்பிக்கை இல்லாத ஒரு சூழ்நிலையே தற்போது உருவாகியுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.










