சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தி , 21 மாவட்டங்களில் 21 மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா மேற்படி தகவலை வெளியிட்டார்.
“மக்கள் ஆட்சிக்கு பலம்” எனும் தொனிப்பொருளின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கூறியவை வருமாறு,
“கொழும்பில் இம்முறை பிரதான மேதின கூட்டம், பேரணியை பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். எனினும், எரிபொருள் நெருக்கடி நிலை உள்ளிட்ட காரணங்களைக்கருதி மாவட்ட ரீதியாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்கேற்புடன் நுவரெலியாவில் மேதின கூட்டமொன்று நடத்தப்படும். நுவரெலியா கூட்டத்தில் பதுளையில் உள்ள மக்களும் பங்கேற்பார்கள்.
நுவரெலியாவில் நடைபெறும் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார். கொழும்பு கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
யாழ்ப்பாணத்திலும் மே தினக் கூட்டமொன்று நடத்தப்படும். கிளிநொச்சி மாவட்ட மக்கள் இதில் பங்கேற்பார்கள்.
வன்னியை மையப்படுத்தி வவுனியாவில் மே தினக் கூட்டம் நடைபெறும். முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மக்கள் இதில் இணைவார்கள்.
இலங்கையின் மே தின வரலாற்றில் கட்சியொன்று 21 மாவட்டங்களில் கூட்டம், பேரணி நடத்துவது இதுவே முதன்முறையாகும். இதில் பெருந்திரளான மக்கள் நிச்சயம் பங்கேற்பார்கள்.” – என்றார் ரில்வின் சில்வா.










