Home Blog Page 130

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ட்ரம்ப்!

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

“ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில், அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது”எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் அங்குள்ள நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று நாடு கடந்து வசிக்கும் அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது: கல்வி அமைச்சும் ஹரிணி வசமே இருக்கும்!

“பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை. அப்பதவியில் அவர் தொடர்வார். அத்துடன், அவரிடமிருந்து கல்வி அமைச்சும் பறிக்கப்படமாட்டாது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜித ஹேரத்,

“ கல்வி மறுசீரமைப்பென்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் வழு இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.

எனினும், குறுகிய நோக்கில் இது விடயம் சம்பந்தமாக அரசியல் நடத்தப்படுகின்றது.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டு பொறுப்புடன் செயல்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார்.
கல்வி மறுசீரமைப்பென்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செயவோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது.”எனவும் குறிப்பிட்டார்

கல்வி அமைச்சு முன் காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கிறார் விமல் வீரவன்ச

புதிய கல்வி சீர்திருத்தங்களை கைவிடக் கோரியும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை பதவி விலகக் கோரியும், காலவரையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளுக்காக பெரியவர்கள் நிற்கிறார்கள்” என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை காலை 9 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்பாக, தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட விமல் வீரவன்ச,

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள பெற்றோர் தொடர்ச்சியான இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குழந்தைகளுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் அறிமுகப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சீர்திருத்தங்கள், போதுமான ஆலோசனை இல்லாமல் அவசரமாக செயற்படுத்தப்படுவதாகவும், கல்வியை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சிக்கு பதிலாக ஒரு வணிக முயற்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி பாடத்தொகுதிகளில் இணையத்தள இணைப்புகள் மற்றும் வலையொளித் தளங்களைச் சேர்ப்பதன் மூலம், இதுபோன்ற தளங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்புவது குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் யார் நிதி ரீதியாக பயனடைகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (11.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

வெற்றி யாருக்கு? 3 ஆவது டி- 20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் பாகிஸ்தான்  அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகின்றது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு, தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெறும்.

பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல பாகிஸ்தான் அணியும், போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இலங்கை அணியும் தீவிரம் காட்டிவருகின்றன.

 

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவில்லை: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் பட்சத்தில், அதற்கு எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதா என்பது குறித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

கல்வித் துறை தொடர்பான சில நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான விடயங்களை முன்னிறுத்தியே, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எனினும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தப் பிரேரணை ஒரு கொள்கைச் சண்டையாக விட, அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக வடக்கு -கிழக்கு மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள கட்சிகள், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன. அந்தவகையில், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு, ஆட்சி – எதிர்க்கட்சி அரசியல் மோதல்களிலிருந்து விலகி, தமது மக்களின் அரசியல் மற்றும் நிர்வாக கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையாகவே கருதப்படுகின்றது.

இதற்கிடையில், கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து, கல்வி, மாகாண நிர்வாகம், வடக்கு – கிழக்கு தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள் என்று சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார். இந்தச் சந்திப்பு, இரு தரப்புகளுக்கிடையிலான அரசியல் உரையாடலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழரசுக் கட்சி நேரடி ஆதரவு வழங்காத நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், வாக்கெடுப்பு நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

File photo

மலையக தியாகிகள் தினம் இன்று (10) மிகவும் உணர்வுப்பூர்வமாக மலையகத்தில் நினைவுகூரப்பட்டது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வானது பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் லேக் வளாகத்தில், பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வளர்கள், ஆன்மீக தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலையக தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தியாகிகளை நினைகூர்ந்து பொதுநினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1940               ஜனவரி               10             ஆம் திகதியே மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார் முல்லோயா கோவிந்தன்.

அதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்திலும் மலையக தியாகிகள் தினம் இன்று மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று மலையக தியாகிகள் தினம்!

மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெறுகின்றது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வு காலை 9 மணிக்கு பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் வளாகத்தில் நடைபெறும்.

1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.

1940 ஜனவரி 10 ஆம் திகதியே மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார் முல்லோயா கோவிந்தன்.

மலையக தியாகிகள் தினம் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் இன்று நடைபெறவுள்ளன.

கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும்: ஜனாதிபதி திட்டவட்டம்!

 

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொய்ப் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (09) ராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அனர்த்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக இந்த ‘PROJECT 5M’ வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் ஆணை வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு இருந்த நிலையை விடவும் ஒரு சிறந்த நாட்டையும், மக்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை அடையாளப்படுத்தும் வகையில் வீடொன்றிற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அரச அனுசரணையில் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கடும் ஆண்டாக 2026 அமையும்!

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 – 25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு, வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31,000 வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 50,000 – 55,000 வீடுகள் வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ், அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டத்தை இன்று காலை(09) கல்நேவ பிரதேச செயலக பிரிவில் மல்பொலிகல பிரிவு, அலுபத்த கிராமத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, அனர்த்தத்தினால் முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளை புனரமைப்புக்கான இழப்பீடு வழங்கப்பட்டது.அத்தோடு புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு பாரிய நஷ்டஈடு வழங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்த அரசாங்கம் என்றும், அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த மக்களுக்கு அவர்கள் முன்பு இருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப உறுதியாக செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் உறுதியளித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

“சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மோசமான பொருளாதார அனுபவங்களுக்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எரிபொருள், எரிவாயு இன்றி முழு நாடும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்தப் பொருளாதார வீழ்ச்சி இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது நாட்டை நீண்டகாலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பொதுமக்களின் செல்வத்தை ஒரு சிறிய குழுவினருக்குள் மையப்படுத்தியமை என்பனவே இதற்குக் காரணமாகும்.

திறைசேரியில் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டாலும், மிகச் சிலருக்கு மத்தியில்தான் அந்தப் பணம் குவிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு இவையே காரணங்களாகும். இதன் விளைவாகவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்கள் வீதியில் இறங்கி, அதிகாரத்தில் இருந்த தலைவர்களை விரட்டியடித்தனர்.

நாம் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் , வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது முதல் சவாலாக அமைந்தது. அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை நாம் ஈட்டியுள்ளோம். எமது பெற்றோர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை எமது பிள்ளைகள் எதிர்கொள்ளாத ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் அனுபவித்த துன்பங்களை எமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது. எனவே, எமது பிள்ளைகள் சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பொறுப்பாகும்.

நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதிலேயே நாட்டின் பல விடயங்கள் தங்கியுள்ளன. நாடு பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்தால் பல விடயங்கள் சீராகும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் குற்றங்கள், ஊழல்கள் அதிகரித்து, சட்டத்தின் ஆட்சி சீர்குலையும். எனவே, பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதே மிக முக்கியமான விடயமாகும். அதற்காகவே நாம் படிப்படியாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வந்தோம்.

2025 ஆம் ஆண்டு, இலங்கையின் அனைத்துப் பொருளாதாரக் காரணிகளிலும் அதிக மதிப்பைச் சேர்த்த ஆண்டாக அமையும். அதிக அரச வருமானம், 1977-க்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, அதிக ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து அதிகளவான பணம் வந்தடைந்தமை மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக இது மாறியுள்ளது.

இவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் நிலையிலே இந்த இயற்கை அனர்த்தத்திற்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இயற்கை அனர்த்தங்களை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. உலக வங்கியின் ஆய்வின்படி, உட்கட்டமைப்பு சார்ந்த இழப்பு மட்டும் 4.1 பில்லியன் டொலர்கள் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மீண்டெழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்திற்கு இது ஒரு பெரும் தாக்கமாகும். ஆனாலும், அதற்காக அனர்த்தத்தைச் சந்தித்த மக்களைக் கைவிட அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களைக் காத்திருக்குமாறு கூறு முடியாது. எனவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒரு பாரிய திட்டத்தை அரசாங்கமென்ற வகையில் நாங்கள் முன்வைத்துள்ளோம்.

2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்த அனர்த்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திற்காக 7,200 கோடி ரூபா ஒதுக்கியுள்ளோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.அதேவேளை பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நாம் நஷ்டஈடு வழங்கி வருகிறோம்.

விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு நஷ்டஈட்டுத் தொகையை நாம் வழங்க இருக்கிறோம். கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நாம் அந்த நிவாரணங்களை வழங்க உள்ளோம். மேலும் அடையாளம் காணப்பட்ட துறைகளின் தரவுகளை நாம் சேகரித்து வருகிறோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்த அரசாங்கம். இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த ஆட்சியாளரும் இது போன்ற பாரிய இழப்பீடுகளை வழங்கி மக்களைப் பாதுகாக்கத் தலையீடு செய்யவில்லை.ஆனால் நாம் அதனைச் செய்து வருகிறோம்.”

வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். சுமார் 6,000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த சேதமும் இல்லாவிட்டாலும், சுமார் 17,000-18,000 வீடுகள் வசிக்கத் தகுதியற்றவை என அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சுமார் 20,000-25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியிருக்கும்.

அது மட்டுமல்லாமல், 2026 வரவு செலவுத்திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கியுள்ளோம். வீடுகளை நிர்மாணிக்க முடியாத மக்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், 10,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 2009 இல் யுத்தம் முடிவடைந்த போதிலும், இன்னும் மக்கள் அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.

அந்த மக்கள் 16 ஆண்டுகளாக வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் அந்த மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கியுள்ளோம். மேலும், மலையக மக்களுக்கு வீடுகளைக் நிர்மாணிப்பதற்கு இந்திய உதவியின் கீழ் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு, 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டடிிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த அனர்த்தத்தினால் மேலும் 20,000-25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது.

அந்த மக்கள் முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கையைப் பெறும் வகையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவே நாம் செயற்பட்டு வருகிறோம். அதற்காகவே இந்தப் பணத்தை வழங்குகிறோம். எனவே, விரைவில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. நமக்கு சிறந்த வருமானம் தேவை. நமது பிள்ளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, நல்ல வீடு, உள நலம் ஆகியவை முக்கியமானவை. குறைந்தபட்சம் இந்த ஐந்து விடயங்களையாவது நிறைவேற்றாமல் வாழ்வது கடினமானது. எனவே, நமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதாகும்.

நீண்ட காலமாக, நம் நாட்டின் கல்வி முறையில் சிக்கல்கள் காணப்பட்டன. பெற்றோருக்கு சுமையாகவும், பிள்ளைகளுக்கு வேதனையாகவும் உள்ள ஒரு கல்வி முறையாக இது இருந்தது . கல்வி முறை சிறந்ததாக இருந்திருந்தால், நமக்கு சிறந்த பலன்கள் கிடைத்திருக்கும். கல்வியலாளர்கள் நீண்ட காலமாக இந்த கல்வி முறையில் புதிய மாற்றம் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். நாம் அந்தப் புதிய மாற்றத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் பல்வேறு அவதூறுகளையும் பொய்களையும் பரப்பி, ஆதாரமற்ற விடயங்களை கூறத் தொடங்கியுள்ளனர். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எமது நோக்கம். வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழி பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதாகும். எனவே, நமது பிள்ளைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வியை வழங்க வேண்டும். யார் எவ்வாறு அந்த வேறுபாடுகளை தடுக்க முயற்சித்தாலும், நாம் அந்த வேறுபாடுகளை உருவாக்குவோம்.

நாம் இந்த வீட்டுத் திட்டத்தை இன்று செயல்படுத்துகிறோம். 31,000 வீடுகளை நிர்மாணிக்க நாம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம், அந்த எண்ணிக்கை 50,000 – 55,000 ஆக அதிகரிக்கும். அதன்படி, இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் ஒரு வருடத்தில் நிர்மாணிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளாக இது அமையும். நமது நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு வீட்டை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இந்திய துணை ஜனாதிபதி சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

0
டி.சந்ரு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு வந்த இந்திய துணை ஜனாதிபதியை, நுவரெலியா...

ராகலையில் மக்களை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!

0
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே Liddlesdale தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன், அதன்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு...