நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
மனசாட்சி குறித்து என்பிபி கதைப்பது நகைப்புக்குரியது!
தேசிய மக்கள் சக்தியினர் மனசாட்சி பற்றி கதைப்பது நகைப்புக்குரிய விடயமாகும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையில் உள்ள உறுப்பினர்கள் மனசாட்சியின் பிரகாரம் செயல்பட வேண்டும் என மாநகர மேயர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கொழும்பு மாநகரசபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னரே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறியவை வருமாறு,
“ புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தப்போவதாக கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று வேறு விடயங்களே நடந்தேறிவருகின்றன.
எந்த ஆட்சியிலும் இடம்பெறாத வகையில் நபர்களை இலக்குவைத்து தாக்கும் – சேறுபூசும் அரசியலையே ஆளுங்கட்சியினர் முன்னெடுத்துவருகின்றனர். இதுதான் தேசிய மக்கள் சக்தியினர் கூறிய மாற்றமா?
மனசாட்சி குறித்தும் ஆளுங்கட்சியினர் கதைக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்காக எதிரணியில் உள்ள கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டுள்ளது.
மனசாட்சி இருந்திருந்தால் பிள்ளையானிடம் உதவி கோரப்பட்டிருக்குமா, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதின் ஆகியோரிடம் ஆட்சியமைக்க உதவி கோரப்பட்டிருக்குமா?
மொட்டு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் உறுப்பினர்களிடம் ஆதரவு பெற்றப்பட்டிருக்குமா? ஆளுங்கட்சியினரிடம் மனசாட்சி இல்லை. அவர்கள் மனசாட்சி பற்றி பேசுவது நகைச்சுவைத்தனமாகும்.” – என்றார் முஜிபூர் ரஹ்மான்.
மீண்டும் கொழும்பில் குடியேறினார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேறியுள்ளார் என தெரியவருகின்றது.
நுகேகொடை மிரியான பகுதியிலேயே அவர் குடியேறியுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் நடவடிக்கை, இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை என்பவற்றைக் கருதியே மஹிந்த மீண்டும் கொழும்பு வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொழும்பு, 7 விஜேராம மாவத்தையிலுள்ள அரசாங்க உத்தியோகப்பூர்வ வதிவிடத்திலேயே மஹிந்த ராஜபக்ச தங்கி வந்தார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மஹிந்த வெளியேறினார்.
தங்காலையில் உள்ள தமது பூர்வீக இல்லமான கால்டன் இல்லத்துக்கு மஹிந்த ராஜபக்ச சென்றிருந்தார்.
மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நாளாந்தம் அவரை சந்திக்க வருவது தொடர்பான செய்திகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்டு வந்தது.
இந்நிலையிலேயே அவர் கொழும்பு வந்துள்ளார். நுகேகொடை மரியான பகுதியிலேயே கோட்டாபய ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோரின் வீடுகளும் அமைந்துள்ளன.
தேசிய பாதுகாப்பு தினம் 2025 தொடர்பான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டின் “தேசிய பாதுகாப்பு தின” நிகழ்வு சுனாமி பேரழிவினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதுடன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலினால் உயிரிழந்தவர்களையும் நினைவு கூறும் வகையில் நாட்டில் அனைத்து, மாவட்டங்களிலும் மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2025 டிசம்பர் 26 அன்று “தேசிய பாதுகாப்பு தினத்தின்” பிரதான நினைவேந்தல் நிகழ்வு, காலி, பேரலிய சுனாமி நினைவுச் தூபிக்கு முன்பதாக காலை 8.30 முதல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.
அத்துடன், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் மற்றும் குறிப்பாக தித்வா இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்கள் நினைவாக, 2025 டிசம்பர் 26 காலை 9.25 முதல் 9.27 வரை, நாடு முழுவதும் இரு நிமிட நிசப்தத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர்.
இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், தான்தான் கட்சியின் சட்டப்பூர்வமான செயலாளர் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுவருகின்றார்.
விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும் சவாலுக்குட்படுத்தியுள்ளார். இந்நிலையிலேயே தலைமைப்பதவியில் மாற்றத்தை வலியுறுத்தியுள்ளார் தயாசிறி ஜயசேகர.
“ கிராமிய மட்டத்தில் சுதந்திரக்கட்சி விழுந்துள்ளது. தலைமைத்துவ மாற்றம் இன்றி அதனை கட்டியெழுப்ப முடியாது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை தனக்கு வழங்குமாறும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
தவிசாளர் பதவியை நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கர்நாடகாவில் பேருந்து மீது லொறி மோதி விபத்து: தீயில் கருகி 12 பேர் உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 12 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது.
32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக் கட்டையை உடைத்துக்கொண்டு பேருந்து மீது வேகமாக வந்து மோதியது. இதையடுத்து தீ பரவியது.
இதில் உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநர், லாரியின் கிளீனர் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காவல் துறை அதிகாரி ரவிகாந்த் கவுடா உறுதி செய்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
“தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு லாரி எங்கள் பேருந்துக்கு எதிரே வந்தது. அப்போது நான் பேருந்தை 60 – 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினேன். மோதலை தடுக்க முயற்சித்தேன். ஆனால், லாரி வேகமாக வந்த காரணத்தால் அது முடியாமல் போனது” என பேருந்து ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் யூத எதிர்ப்பு தாக்குதல்: விசாரணை தீவிரம்!
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் காரொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹனுக்கா பண்டிகை தொடர்பான வசனத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனமொன்றே கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலை குறிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர்.
ஹனுக்கா என்ற வசனமானது யூத பண்டிகையொன்றை குறிக்கின்றது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், பாதுகாப்பு கருதி அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இது மத ரீதியில் நடத்தப்பட்ட தாக்குதலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், யூத சமூகத் தாக்குதலை கண்டித்துள்ளது.
சிட்னி, போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் யூத சமூகத்தின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்பேர்னில் நடந்துள்ள மேற்படி தாக்குதல் சம்பவத்தை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது யூத எதிர்ப்பு தாக்குதலென சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணைக்கு மத்திய அரசு உதவும் எனவும் அறிவித்துள்ளார்.
இப்படியான வெறுப்பு சம்பவங்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.
காலி கோட்டையை ஆய்வு செய்த சீன தூதுக்குழு!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வாங் ஜூன்ஷெங் தலைமையிலான சீனக் குழுவினர், நேற்றுக்காலை காலி கோட்டைக்குச் சென்று கோட்டைச் சுவர்களை ஆய்வு செய்தனர்.
பிரதி அமைச்சர் நளின் ஹேவகே மற்றும் பலர் இந்த பயணத்தின் போது உடன் இருந்தனர்.
இதன்போது, சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர், கடற்படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் – எகிப்து தூதுவர் சந்திப்பு!
இலங்கை எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான எகிப்து தூதுவருக்கும் , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் (23) நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இலங்கைக்கு எகிப்து அரசும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையை மீள்கட்டியெழுப்பும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அனைத்து துறைகளிலும் இயல்புநிலையை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.
நிபுணத்துவ பரிமாற்றம், திறன் மேம்பாடு, உயர் மட்ட தூதுக்குழு வருகைகள் மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால பயிற்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான
உறுதியான விருப்பத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.
இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட தேசிய நெருக்கடியை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முன்மாதிரியாக கையாண்ட இலங்கையின் அணுகுமுறையை எகிப்த்திய தூதுவர் பாராட்டினார்.
மரக்கறி விலைப்பட்டியல் (25.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…














