Home Blog Page 155

தெற்கில் இந்துக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கும் இருக்க வேண்டும்!

தெற்கில் இந்து மக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக விகாரை மற்றும் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என சுட்டிக்காட்டி இருந்தோம். அது தற்போது நடந்துகொண்டிருக்கின்றது.

டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே இந்த அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இனவாதம் மற்றும் மதவாதம் என்பவற்றை நாம் நிராகரிக்கின்றோம். ஆனால் தெற்கில் இந்துக்களுக்குள்ள சுதந்திரம் வடக்கில் பௌத்தர்களுக்கு இருக்க வேண்டும்.

வடக்கு மக்கள் கொழும்புக்கு சுதந்திரமாக வந்து செல்லக்கூடிய நிலை காணப்படுகின்றது. தெற்கில் இருந்து வடக்குக்கு செல்லும் பௌத்த மக்களுக்கும் அந்த உரித்து கிடைக்கப்பெறவேண்டும்.” – என்றார்.

ரணில், சஜித் சங்கமம்: விரைவில் நேரடி பேச்சு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விரைவில் நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு கட்சிகளிலும் உள்ள மூத்த உறுப்பினர்களின் தலையீட்டையடுத்தே நேரடி சந்திப்புக்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அக்குழுக்கள் சந்தித்து பலதடவைகள் பேச்சு நடத்தின. இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டாலும் தனிக்கட்சியாக இணைவதா அல்லது கூட்டணியாக செல்வதா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச பெற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொது கூட்டணியாக ரணிலும், சஜித்தும் இணைத்தலைமை பதவி வகிக்க வேண்டும் என்ற மற்றுமொரு யோசனையும் உள்ளது.

” சஜித் தலைவர், ரணில் உயர்மட்ட ஆலோசனை தலைவர்” என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவ்விவகாரம் தொடர்பில் இறுதியான – உறுதியான முடிவை எடுப்பதற்காக இரு கட்சிகளினதும் தலைவர்களை நேரடியாக சந்திக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமஷ்டி ஆட்சி முறைமையே தமிழ் மக்களின் அபிலாஷை!

“மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இந்திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் கோரின. வெறும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தீர்வல்ல என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைமைதான் தமிழ் மக்களின் அபிலாஷை.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி. தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசின.

இதில், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தமிழ்நாடு பயணம் தொடர்பிலும் விளக்கமளிக்கும் விதமாக அவர் கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். இதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் வெறுமனே வந்து ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை வலியுறுத்தியும்,13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பல தடவைகள் வலியுறுத்தியது 13ஆம் திருத்தம். ஆனால், இந்தியாவின் பிள்ளைதான் அந்த 13ஆவது திருத்தச் சட்டம். அதனைக் கைவிடுவதை இந்தியா விரும்பாது.

2009 மே மாதத்தில் போர் முடிவுக்கு வந்தபோது அப்போதிருந்த அரசு வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே இருந்தது. அதனை இராணுவத் தீர்வின் மூலம் தீர்த்து விட்டோம். இலங்கையில் பிரச்சினை இல்லை எனக் கூறினார்கள். ஆனால், சர்வதேச சமூகம் அந்தக் கருத்தை நிராகரித்தது.

அத்துடன், விடுதலைப்புலிகளின் போர் 1970இல்தான் ஆரம்பமானது. ஆனால், 1948 ஆம் ஆண்டிலிருந்தே இனங்களுக்கிடையே முரண்பாடு உள்ளது. அன்றைய அரசமைப்பைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் சுட்டிக்காட்டினார்கள்.

பிரித்தானியாவில்கூட ஐரிஸ் மக்களுக்குப் பிரச்சினை அன்றிருந்தது. அவர்களுக்கு உரிய அரசமைப்பை ஏற்படுத்தி தீர்வு பெற்றுக்கொடுத்தனர். இந்தியா மூன்றாவது வல்லரசு. அவர்கள் பொருளாதாரத்திலும் எதிர்காலத்தில் இரண்டாவது வல்லரசு நாடாக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இந்தியாவின் கருத்துக்களை மீறி மற்ற நாடுகள் எந்த முடிவையும் இலேசாக எடுக்க முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினையில் இந்தியா அக்கறை செலுத்தி 1987இல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

ஆகவே, இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவுக்குக் கடமை இருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவுக்குக் கடமை இருக்கின்றது. இந்தியாவின் நலன் – பாதுகாப்பில்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆகவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறைமை மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையைப் பூர்த்தி செய்யக்கூடியது. – எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மலையக மக்களினால் நிதி நன்கொடை!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு மலையக மக்களினால் ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

மலையகம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவர் எஸ். தயாளன், இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலையை கையளித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், உதவும் கரங்கள் அமைப்பின் செயலாளர் ஆர். மனோகரன், மகளிர் அமைப்பாளர் ஜி. மனோரஞ்சிதம் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ். சிவனேஷன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொழும்பில் போட்டியிட தயாராகிறாரா அர்ச்சுனா?

கொழும்பில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. வடக்கு மக்களை என்னைவிடமாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் அர்ச்சுனா எம்.பி. கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது கொழும்பில் களமிறங்குவீர்களா என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி. கூறியவை வருமாறு,

“ கொழும்பு போட்டியிடுமாறுதான் எதிர்க்கட்சி தலைவரும் என்னிடம் கோரினார்.

எனினும், வடக்கு மக்களை என்னைவிட மாட்டார்கள். என்னை கொழும்புக்கு வரமாட்டார்கள்.

அவ்வாறு வந்தாலும் வடக்கில் கௌசல்யாவை களமிறக்கிவிட்டுதான் இங்கு வருவேன்.” என்றார்.

பண்டிகைக்கால பாதுகாப்பு- சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கை பணியகம் நிறுவப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, முக்கிய நகரங்கள், வழிபாட்டு இடங்கள், முன்னணி விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக போக்குவரத்து மற்றும் வணிகம் இடம்பெறும் நகர்ப்புறங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளும் காவல்யினரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 2,500 கூடுதல் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களைக் கண்காணித்துத் தடுக்க, பரபரப்பான வணிக மையங்களுக்கு அருகில் புலனாய்வு அதிகாரிகளும், சாதாரண உடையணிந்த காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நத்தார் வழிபாடுகள் நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேவைப்படும் போது காவல்துறைக்கு உதவ இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை பணியகம், பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்படும் என்றும் இது முப்படைகள் மற்றும் காவல்துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும் என்றும், பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.எம்.எவ்புடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வாருங்கள்: எதிரணியும் ஒத்துழைப்பு வழங்க தயார்!

“தற்போதுள்ள இந்த IMF கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சமயம், ​​வெளிநாட்டுக் கடனை 2033 முதல் செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை 2028 முதல் செலுத்துவதற்கு இணக்கப்பாடு கண்டது.

தற்போதைய அரசாங்கமும் அதை இருந்தவாறே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் கீழ், ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலர்களை நாம் செலுத்த வேண்டும்.

இந்த இணக்கப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆரம்பம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகின்றது. இதன் மிகப்பெரிய சுமையைக் குறைக்க வேண்டும்.

தற்போது இந்த டித்வா சூறாவளி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளோம். பேச்சை ஆரம்பித்து இந்தக் கடன் இணக்கப்பாடுகளின் விதிமுறைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல, வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் எடுத்துக் கொண்டு, புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.

இந்தக் கருத்து சரியானது என்பதால், அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டு புதிய இணக்கப்பாடு ஊடாக செல்ல வேண்டும். அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சி இதனைச் செய்வதற்குத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கூட நமது நாடு பொருளாதாரக் கடன் நிவாரணத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கடன் வெட்டு தொடர்பிலும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த இணக்கப்பாடுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளோடு நமது நாட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.

23% விவசாய காணிகளும் 35% தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ரூபா.48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்துபோயுள்ளன. அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு உதவிகளின் மேலாண்மை, விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்த திட்டம்

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் மேலாண்மை, ஒருங்கிணைப்பு மற்றும் பயனுள்ள விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தபட்டது.

கூட்டத்தின் போது, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் (NDRSC) மேலதிக செயலாளர் மற்றும் அதிகாரிகள், வெளிநாட்டு நிவாரண உதவிகளுக்கான களஞ்சிய மேலாண்மை பொறுப்புகளை ஒதுக்குதல், மேலும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் கண்காணிப்பிற்காக உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சரக்கு முகாமைத்துவ அமைப்பை முறையாக கையளித்து பயன்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, பிரதி பாதுகாப்பு அமைச்சர், தொடர்புடைய செயல்பாட்டு மற்றும் நிர்வாக சவால்களை ஆராய்ந்து, அவற்றை உடனடியாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

மேலும், மாவட்ட செயலாளர்களின் மூலம் தேவைகள் மதிப்பீடு செய்து, பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நிவாரண உதவிகளை ஒழுங்குமுறைப்படுத்தி விநியோகிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. வேயங்கொடை களஞ்சியத்திற்கு மருத்துவ மற்றும் முதலுதவி பொருட்களை அனுப்புவது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், ஏனைய நிவாரணப் பொருட்கள் குறிப்பிடப்பட்ட களஞ்சிய நிலையங்களுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல், களஞ்சியங்களில் போதுமான பணியாளர்களை நியமித்தல் மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வெளிநாட்டு நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காலதாமதமின்றி, திறம்பட மற்றும் வெளிப்படையான முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான முன்னேற்ற அறிக்கைகள் வழங்கும் நடைமுறைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்!

 

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2025 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 24.12.2015 அன்று அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

24.12.2025 அன்று நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன

குடு ரொசான் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரரான மட்டக்குளிய “குடு ரொசான்” என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...