சீனாவின் அபிவிருத்தி சாதனையை பாராட்டுகிறார் சஜித்!
“New Blueprint New Horizon” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடத்தின் விழாவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டினார்.
சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்ட வரைபடமான New Blueprint New Horizon வெளியீட்டி நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள ஷாங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. சீனத் தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.
சந்தை அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை சமூக ஜனநாயகக் கொள்கைகளுடன் சீனா எவ்வாறு வெற்றிகரமாக இணைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டி, நீதி மற்றும் நியாயத்துடன் செல்வத்தை உருவாக்குவதை எவ்வாறு உறுதி செய்வது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் எடுத்துக்காட்டினார்.
அவ்வாறே, வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மாறிவரும் உலகளாவிய சவால்களுக்கு ஏற்ப அதன் ஈடுகொடுக்கும் இயைந்து போகும் ஆற்றல் ஆகியவற்றில் சீனா காட்டி வரும் வலுவான கவனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு பாராட்டு தெரிவித்தார்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பு உலகளாவிய தெற்கின் கூட்டான குரலை மேம்படுத்துவதாக அமைவதோடு, இது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை மேலும் உள்ளடக்கியதாகவும் நியாயமானதாக்கவும் சீர்திருத்தவும் உதவுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் இந்த வெற்றிக்கும் இலங்கையுடனான அதன் நீண்டகால உறவுக்கும் வாழ்த்துத் தெரிவித்து,
“New Blueprint, New Horizon” திட்டம் சீன மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய சௌஜன்யம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது பங்களிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
லிபியாவின் ராணுவத் தலைவர் உட்பட 7 பேர் விமான விபத்தில் பலி!
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் டிரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இதை எதிர்க்கும் போட்டி அரசு, நாட்டின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, எகிப்து மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் உள்ளன.
இந்த சூழலில், துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, லிபியாவின் ராணுவ தலைவர், நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என லிபியா அதிகாரிகள் தெரிவித்தார். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய ஆதரவ தொடர வேண்டும்: சஜித் கோரிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (23) கொழும்பிலுள்ள ‘இந்திய இல்லத்தில்’ நடைபெற்றது.
இதன்போது, இலங்கையில் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய அரசாங்கம் முன்னெடுத்த ‘சாகர் பந்து’ (Sagar Bandhu) திட்டத்திற்காகச் சஜித் பிரேமதாச தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், 100 மில்லியன் டொலர் நன்கொடை மற்றும் 350 மில்லியன் டொலர் சலுகைக் கடன் என மொத்தம் 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியமைக்காக, இந்நாட்டின் 220 இலட்சம் மக்கள் சார்பாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய அரசாங்கம் உட்பட முழு இந்திய மக்களுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
2004 ஆம் ஆண்டு சுனாமியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சரியான அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்கத் தவறியதாலேயே, இந்தச் சூறாவளியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டிற்கு முறையான அனர்த்த முகாமைத்துவ திட்டமும் துறைசார் அமைச்சொன்றை ஸ்தாபிப்பது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, 1999 ஆம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட சூப்பர் சைக்ளோன் சூறாவளிப் பாதிப்பினால், 10,000 பேர் உயிரிழந்து 180 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இந்தியா தனது அனர்த்த முகாமை முறையை மாற்றியமைத்ததன் மூலம், 2013 ஆம் ஆண்டு சூறாவளியிலிருந்து 10 இலட்சம் மில்லியன் மக்களையும், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியிலிருந்து கிட்டத்தட்ட 12 இலட்சம் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டினார். அவ்வாறே அந்த மாதிரியை இலங்கையும் பின்பற்றுவது சிறந்தது எனவும் அவர் பரிந்துரைத்தார்.
இதனிடையே, இந்திய அரசு வழங்கும் உதவிகள் மிகவும் வெளிப்படையான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் பெற்றுத் தர முடியுமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என சஜித் பிரேமதாச உறுதியளித்ததோடு, இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குமாறும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆஸ்திரேலியா செல்கிறார் இஸ்ரேல் ஜனாதிபதி!
இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா வருகின்றார்.
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலிய அரசாங்கம்மீது இஸ்ரேல் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
ஆஸ்திரேலிய பிரதமரை பலவீனமான அரசியல் தலைவரென இஸ்ரேல் பிரதமர் விமர்சித்தார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஆஸ்திரேலியாவின் தீர்மானத்துடன், போண்டி பயங்கரவாதத் தாக்குதலை தொடர்புபடுத்தி அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இஸ்ரேல் ஜனாதிபதியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே ஆஸ்திரேலியா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகத்தால் தனக்கு இந்த அழைப்பு விடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார் என்று இஸ்ரேல் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த அழைப்பு ஏற்கப்படும் எனவும், விரைவில் ஆஸ்திரேலியா செல்வார் எனவும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுங்கள்: தமிழ்த் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கரைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல்களை இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் விரைந்து நடத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்தும்படி ஒரே குரலில் அவரிடம் வலியுறுத்தினர் எனத் தெரியவந்தது.
கொழும்பு இந்திய ஹவுஸில் நேற்றுபிற்பகல் சுமார் 45 நிமிட நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழ் தேசியக் கட்சிகளின் சார்பில் பங்கு பற்றிய எட்டுத் தலைவர்களும் இந்த விடயங்களை ஒருமித்த குரலில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன் மற்றும் ரெலோவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எண்மரே இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தனர்.
சந்திப்பில் பங்குபற்றிய எல்லோருமே கருத்துக்களை வெளியிட்டனர். பெரும்பாலும் அனைவரும் மாகாண சபைத் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் விரைந்து நடத்தும்படி வலியுறுத்தினர்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசின் நிலைப்பாடு, கருத்து வெளிப்பாடுகள், நாட்டில் உள்ள நிலைமை ஆகியவை குறித்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாகச் செவிமடுத்தார்.
ஒற்றையாட்சியின் கீழ் இறுதித் தீர்வு சரிவராது என்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
அதுவே தங்களின் நிலைப்பாடு என்று தெரிவித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கட்டாயம், ஆனால் அந்த சமஷ்டி கட்டமைப்பு அதில் இருக்க வேண்டுமே தவிர, பெயரை நாங்கள் வற்புறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மாகாண சபை முறைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் இன்றைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும் என்பதைத் தமது கட்சியின் வலியுறுத்துவதாக இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டார்.
பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தலைவர்களிடம் வினாவினார்.
நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி சபைகளும் இருக்கின்ற அதே சமயம், அவற்றை புறமொதுக்கி, ‘பிரஜாசக்தி’ போன்ற வேறு கட்டமைப்புகள் மூலம் இந்த நிவாரணப் பணிகளை அரசியல்மயமாக்கி, அரசுத் தரப்பு அதில் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் தெரிவித்த விடயங்களை மிக உன்னிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்வாங்கிக் கொண்டார், விவரங்களைக் கேட்டு அறிந்தார் என்று அறியவந்தது.
மரக்கறி விலைப்பட்டியல் (24.12.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
கொழும்பு மாநகர சபையையும் என்பிபியே ஆளும்: அடுத்த முறை பட்ஜட் நிறைவேறும்!
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் அடுத்த முறை நிறைவேறும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பு மாநகரசபை முடிவானது முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்தப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அது மீள முன்வைக்கப்படும். நிலைமை இவ்வாறு இருக்கையில் கொழும்பு மாநகரசபை இனி எங்கள் வசம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எம்.பி. கூறுகின்றார். உள்ளாட்சிசபைத் தேர்தல் சட்டத்தில் அவ்வாறு எவ்வித ஏற்பாடும் இல்லை.
விரைவில் மீண்டும் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும். அதனை நிறைவேற்றுவதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”- என்றார்.
2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும் நிலையில், இந்திய அளவில் மட்டும் ரூ.700 கோடியை கடந்துள்ளது. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாராட்டினால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போது 2025-ஆம் ஆண்டில், உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையை ‘துரந்தர்’ நிகழ்த்தியிருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது. இதுவரை உலகளவில் மொத்த வசூலில் ரூ.900 கோடியை கடந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
’துரந்தர்’ ஸ்பை த்ரில்லர் வகை படமாகும். உளவு அதிகாரியை பற்றிய கதயைக் கொண்டது. 1999-ம் ஆண்டு கந்தகரில் இந்திய விமானம் கடத்தப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, ஹம்சா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களைக் கண்டுபிடித்து எப்படி முறியடிக்கிறார் என்பது இதன் கதை.
விரைவில் ‘துரந்தர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலை கடக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
என்.பி.பி. அரசின் ஜனநாயக விரோத செயலுக்கு கொழும்பு மாநகரசபையில் முடிவு கட்டியுள்ளோம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு கொழும்பு மாநகரசபையில் முடிவு கட்டப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கூட்டு எதிரணியாகவே இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, 3 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் எம்.பி.,
“கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவின்போது பகிரங்க வாக்கெடுப்பை கோரி இருந்தோம். ஆனால் இரகசிய வாக்கெடுப்பே நடத்தப்பட்டு, மோசடியான முறையில் ஆட்சியை பிடித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் இந்த ஜனநாயக விரோத செயலை கூட்டு எதிரணியாக இன்று நாம் தோற்கடித்துள்ளோம்.
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆறு மாத காலப்பகுதிக்குள் நீதியை பெற்றுள்ளோம் என்பதை ஜனாதிபதியிடம் கூறிக்கொள்கின்றோம்.
தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பு மாநகரசபையில் இனி ஆட்சி அதிகாரம் இல்லை. கூட்டு எதிரணி வசமே அதிகாரம் உள்ளது என்பதையும் குறிப்பிடுகின்றோம்.” – என்றார்.
முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு கூறினாலும், உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி மீண்டும் வ ரவு- செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியும்.
14 நாட்களுக்குள் இதனை செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால், வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு உள்ளது எனக் கூறப்படுகினறது.
எனவே, சபை நிறுவப்பட்டு ஈராண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் தொடர்பில் சர்ச்சை எழாது எனத் தெரியவருகின்றது.















