Home Blog Page 171

மெக்சிக்கோவில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்- 7 பேர் பலி

உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் சாலை விபத்துகள் மறுபுறம், ரெயில் விபத்துக்கள் மற்றும் விமான விபத்துகளும் நடக்கின்றன.

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.அந்த வகையில், தற்போது மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார்.

ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரத்திற்கு திரும்பியது நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு

இலங்கையில் ஒப்பரேசன் சாகர் பந்துவை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படையின் நைட்ஸ் உலங்குவானூர்திப் பிரிவு திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளது.

நைட்ஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு விமானக் கட்டளையகத்தின் 109 உலங்குவானூர்திப் பிரிவு, அண்மையில் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது.

எம்ஐ-17 வி5 ( Mi-17 V5) உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி, வெள்ளம் பாதித்த மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பொதுமக்களை மீட்கும் பணிகளுக்கு மேலதிகமாக, உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்தப் பிரிவு கொண்டு சென்றது.

இந்த உலங்குவானூர்திகள் பத்து நாட்களில் கிட்டத்தட்ட 100 பணிகளை மேற்கொண்டதாக திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் – கனடா தூதுவர் சந்திப்பு!

இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது.

பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில் ஹைத​ரா​பாத்தில் உள்ள ரவீந்​திர​பாரதி வளாகத்​தில் எஸ்​பிபி-​யின் சிலையை முன்​னாள் குடியரசு துணைத்​தலை​வர் வெங்கையா நாயுடு , ஹரி​யானா முன்​னாள் ஆளுநர் பண்​டாரு தத்​தாத்​ரே​யா ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆந்​தி​ரா​வின் கிழக்கு கோதாவரி மாவட்​டத்​தில் எஸ்​பிபி​யின் 7.2 அடி உயர வெண்கல சிலை உரு​வாக்​கப்​பட்​டது. நின்ற நிலை​யில் உள்ள எஸ்​பிபியின் சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்​டிருந்​தது.

இவ்விழா​வில் அமைச்​சர் ஸ்ரீதர் பாபு, தெலங்​கானா பாஜக தலை​வர் ராமசந்​தர் ராவ், எஸ்​பிபி​யின் மனை​வி, பாடகரும் அவரது மகனு​மான எஸ்​பிபி சரண், தங்கை எஸ்பி சைலஜா, அவரது குடும்​பத்​தார்​பங்​கேற்​றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (16.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிடுகிறது உக்ரைன்!

நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தைகைவிட தயாரா இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரஷ்யா -உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்காக ரஷ்ய ஜனாதிபதி புதின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. எனினும், எந்த உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலின்போது ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.

அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார்.

ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் முடிவால் ரஷியா – உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப ஏற்பாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்பும் வகையில் அக்கட்சியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

புதிய நியமனங்கள் சில வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

சுதந்திரக்கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சிரேஸ்ட உப தலைவராக விஜயதாச ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன.

கட்சி தலைவருக்குள்ள அதிகாரங்களை அமுல்படுத்தும்போது அதற்கு அரசியல் உயர்பீடத்தின் அனுமதி அவசியம் என்ற யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சிக்குள் ஜனநாயகக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிட்னி தாக்குதல்: இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்தது ஆஸ்திரேலியா!

பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக அமைந்தது என்ற இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

மேற்படி அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள் ” என்று கூறினார்.

“ இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை ” என்றும் பிரதமர் கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமர் யூத எதிர்ப்புவாதத்தைத் தூண்டுகிறார் என இஸ்ரேல் பிரதமர் நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் கைதாகியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவிப்பதாக ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனீஸ{க்கு எழுதிய ஒரு கடிதத்தில் தெரிவித்தேன்.

அந்தக் கடிதத்தில், ‘பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் உங்கள் முடிவு யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. இது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெகுமதி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை அச்சுறுத்துபவர்களுக்கு இது தைரியத்தை அளிக்கிறது,

மேலும் இப்போது உங்கள் தெருக்களில் பரவுகிறது.
உங்கள் அரசும் ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. நீங்கள் நோய் பரவ அனுமதித்தீர்கள், அதன் விளைவு இன்று நாம் கண்ட யூதர்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள்” என்று ம் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே மேற்படி கருத்தை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.

பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, வடிகாலமைப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, தாக்கம் ஏற்படக் கூடிய மத்திய பிரதேசத்தை (Central Fragile Area) முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை நியமித்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டத்தைத் தயாரித்தல், அனைத்து நிறுவனங்களும் அந்தத் தரவை அணுக அனுமதிக்கும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தைத் தயாரித்தல் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, கிடைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிவாரண உதவிகளையும் (விநியோகங்களை) ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்பிற்கென குழுவொன்ற நிறுவுவது குறித்தும் அதற்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 07 ஆம் திகதி கூடியது. திடீர் அனர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இரவு மீண்டும் சபை கூடியது. டித்வா சூறாவளிக்குப் பிறகு இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேவையான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் நிறுவன வழிகாட்டுதலை வழங்குவதற்கும் ஜனாதிபதியின் தலைமையில் இந்த சபை இன்று கூடியது.

டித்வா சூறாவளியால் நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.112,110 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. அதன்படி, 796 பராமரிப்பு நிலையங்களில் 72,911 பேர் தங்கியுள்ளனர் (14.12.2025), என்று அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் இங்கு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் என்பன குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், தாக்கம் ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்த வாரத்திற்குள் அதற்கான நிதியை பூரணமாக செலுத்தி முடிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தரவுகளைச் சேகரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அதற்கான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு முறையான செயல்முறையின் அவசியம் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கவனம் செலுத்தினர்.

நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த 03 ஆண்டுகளுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக மக்களுக்கு 7.51 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட போதிலும், 1.42 பில்லியன் ரூபாவுக்கான மீளமைப்பு செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அடையாளங் கண்டுள்ளது எனவும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இந்த காப்புறுதி முறைமையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக இருந்தால், அது அரசாங்கத்திற்கு நன்மை பயப்பதோடு, பயனாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் காப்புறுதி முறைமையாக இருக்க வேண்டும் என்றும், அதனை மீண்டும் ஆரம்பிப்பதென்றால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன், சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் சந்திரசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர ஆகியோருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், பி. ஆரியவன்ச, பத்மநாதன் சத்தியலிங்கம், அனுராத ஜயரத்ன, உதுமாலெப்பே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட பாதுகாப்புப் படைப் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசிய அமைப்பாளர் பதவியை தயாசிறிக்கு வழங்க தயார்: சாமர எம்.பி.

மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால்கூட குறைந்தபட்சம் 25 எம்.பிக்களாவது கட்சி சார்பில் தெரிவாக வேண்டும்.

மக்கள் என்னுடன் செல்பி எடுக்கின்றனர். என்னை அதிகம் வரவேற்கின்றனர். அதனால் ஜனாதிபதி பதவி என்ற கனவு எனக்கு ஏற்படவில்லை.

ஏனெனில் அரசியலில் நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. தயாசிறி ஜயசேகர நாளை கட்சிக்கு வந்தால்கூட எனது பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

கட்சியால் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன். வெட்டு குத்துகள் இருப்பின் முன்னோக்கி செல்ல முடியாது. எனவே, கட்சியை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.” என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...