Home Blog Page 172

1000 பில்லியன் ரூபா நிதி கோரும் குறை நிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி முன்வைப்பு!

ஆயிரம் பில்லியன் ரூபா நிதி கோரும் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி கூடும் விசேட நாடாளுமன்ற அமர்வின்போது இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

எனினும், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் அவசர பழுதுபார்ப்பு பணி செலவுகள் குறித்த புதிய மதிப்பீடுகள் கணக்கிடப்பட்ட பின்னர், இந்தத் தொகை இரட்டிப்பாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைநிரப்பு பிரேரணை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிரணியும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
அதன் பின்னர் சபை ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும்.

சு.கவின் தேசிய அமைப்பாளராக சாமர நியமனம்: விஜயதாசவுக்கும் பதவி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன.

தீவிரவாத தாக்குதலை தடுத்த தனியொருவர்: யார் இந்த அகமது அல் அகமது?

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது எனும் நபர் தடுத்துள்ளார். அவரது வீர தீர செயலுக்காக இப்போது உலக அளவில் பேசப்படுகிறார்.

துப்பாக்கியுடன் இருந்த தீவிரவாதியை லாவகமாக பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவரை தரையில் தள்ளினார் அகமது அல் அகமது.

அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, கவனம் பெற்றுள்ளது.

இருப்பினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

43 வயதான அகமது அல் அகமது, சிட்னியில் பழக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே அவர் மறைந்து கொண்டார். தொடர்ந்து தீவிரவாதி ஒருவரை தடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார்.

இதன் பின்னர் மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அகமது அல் அகமது காயமடைந்தார். அவருக்கு கை பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

‘மிகவும் தைரியமான நபர்’ என அகமதுவை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பாராட்டி உள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி Takafumi Kadono ஐ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

“இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. அவ்வேளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 100 மில்லியன் டொலர் தொகையை நன்கொடையாக வழங்கியமைக்கு எதிர்க்கட்சி தலைவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய பேரிடர் நிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெளிவுபடுத்தினார்.

இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மீண்டும் எழுந்து நிற்பதற்குத் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

 

பாடசாலைகள் நாளை திறப்பு

பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அனர்த்த நிலையிலுள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ளனர். அவர்களை 02 அல்லது 03 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின்,1904 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களை குடியமர்த்துவது தொடர்காக அவர் தெரிவித்ததாவது;

இவர்களுக்கு வழங்க முடியுமான பொருத்தமான அரச காணிகளின் தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வீடுகளை முழுமையாக இழந்தவர்களைக் குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும். இதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

7 ஆயிரம் பேருக்கு சிகிச்சையளித்த இந்திய இராணுவ மருத்துவக் குழு புறப்பட்டது

டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

பேரிடரை அடுத்து, சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் படைப்பிரிவின் அதிரடிப்படைப்பிரிவைச் சேர்ந்த, 78 பேர் கொண்ட குழுவுடன், முழு அளவிலான கள மருத்துவமனை, கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இலங்கைக்குவிமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

இந்த கள மருத்துவமனை கண்டிக்கு அருகிலுள்ள மகியங்கனை பகுதியில் அமைக்கப்பட்டது.

இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண முயற்சிகளின் முக்கிய அங்கமான இந்த பணியின் போது, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கியமான உயிர்காக்கும் மருத்துவப் பராமரிப்பை வழங்கியுள்ளது.

தினமும் சுமார் 1,000 முதல் 1,200 நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மூலம் சேவை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிருந்த காலப்பகுதியில், 7,176 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், 513 சிறிய மற்றும் 14 பெரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த கள மருத்துவமனை மகியங்கனையில் தனது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு, மருத்துவக் குழு நேற்று கொழும்பிலிருந்து இந்திய விமானப்படை சி 17 குளோப்மாஸ்டர் விமானத்தில் இந்தியா திரும்பியது.

இந்த விமானத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி, 10 தொன் அத்தியாவசிய மருந்துகளும், 15 தொன் உலர் உணவுப் பொருட்களும் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்திய மருத்துவக் குழுவை வழியனுப்பும் நிகழ்வு பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த போது, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டதுடன் சரியான நேரத்தில் இந்தியாவின் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 3,748 வீடுகள் பகுதியளவு சேதம்: 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முகாம்களில்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (15) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

183 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

6 ஆயிரத்து 176 வீடுகள் முழமையாகவும், 95 ஆயிரத்து 213 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 767 வீடுகள் முழுமையாகவும், 3 ஆயிரத்து 748 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேரை காணவில்லை.

206 முகாம்களில் 6 ஆயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 759 பேர் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிட்னி துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவர தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்கா எப்.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவால் கோரப்பட்ட உதவிகளை வழங்குவோம். எங்களால் முடிந்தவரை கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை, ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு விளக்கியுள்ளார்.

மேலும் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணத்தையும் அவர் இரத்து செய்துள்ளார்.

அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் இன்று சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட காயமடைந்த 42 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

50 வயது தந்தையும், 24 வயது தந்தையுமே யூத சமூகத்தை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

50 வயது தந்தை உயிரிழந்துவிட்டார். காயமடைந்த நிலையில் 24 வயது மகன் பொலிஸ் காவலில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

அதேவேளை, யூத எதிர்ப்பு நடவடிக்கையை ஒழிக்க சகல வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி உறுதியளித்துள்ளார்.

சீனாவின் உயர்மட்ட தலைவர் இலங்கை விஜயம்!

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார்.

பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே தமது உதவி திட்டத்தை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் சீனாவும் இங்கியுள்ளது.

இலங்கை வரும் சீன உயர்மட்ட தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மற்றும் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...