Home Blog Page 174

மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு – கிழக்கு துணை நிற்கும்

“அண்மைய இயற்கை அனர்த்தம் மலையகப் தமிழ் உறவுகளைப் புலம்பெயரச் செய்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்க அரசு தவறினால் அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் வடக்கு – கிழக்கு முன்னிற்கும். எப்பொழுதும் போலவே வடக்கு – கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும்.”

– இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

“அண்மையில் முழு நாட்டையும் புறட்டிப் போட்ட டித்வா சூறாவளி, மலையகத்தை வழக்கம் போலவே சூறையாடிச் சென்றுள்ளது. நாளைய விடியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கனவுகளுடனும் இருந்த ஏராளமானோரை நொடிப்பொழுதில் காவுகொண்டு மண்ணுக்கடியில் புதைத்தது. உறவுகள் இருக்கின்றார்களா?

அவர்கள் நலமுடன் இருப்பார்களா என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் நிலைக்கும் இயற்கை அந்த மக்களை வஞ்சித்துள்ளது. இலங்கையில் தமிழனாக இருப்பவர்கள் அனைவரும் துன்பப்படத்தான் வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு இம்முறை மலையகத் தமிழர்களையும் வடக்கு – கிழக்கு தமிழர்களையும் டித்வா புரட்டிப் போட்டுள்ளது.

இந்த டித்வா சூறாவளியால் மலையகத்தில் எழுநூறுக்கும் மேலான மக்கள் நிலச்சரிவுகளில் அகப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டு இறந்துள்ளனர்.

முன்னரும்கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் இப்பொழுது இது மிகவும் பாரதூரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்குப் பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட உறவுகள் 250 வருடங்களாக சொந்த நிலமின்றி, சொந்த வீடின்றி, அல்லலுறும் நிலையையே இதுவரை நாங்கள் பார்த்து வருகின்றோம்.

இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் இனப்படுகொலைகளின்பொழுது மலையகத் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு புகலிடம் தேடி வடக்கு – கிழக்கில் குடியேறியுள்ளனர். 1977, 1981 மற்றும் 1983 காலப்பகுதிகளில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு – கிழக்கில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறியுள்ளனர். அவர்கள் இன்று தங்களுக்கான காணிகளுடனும் வீடுகளுடனும் இருப்பதுடன் கல்வியிலும் மேம்பட்டு தம்மைத் தாமே கவனித்துக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்த உடன் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினூடாக, ஒருபகுதி மக்கள் இந்தியா சென்றுவிட மறுபகுதியினர் இலங்கையில் தங்கினர். அவ்வாறு இலங்கையில் இருந்தவர்களுக்குக்கூட முழுமையான வாக்குரிமை மற்றும் குடியுரிமையைக் கொடுக்க இலங்கை அரசுகள் மறுதலித்தே வந்தன.

1985ஆம் ஆண்டு, இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெற்ற திம்பு பேச்சின்போது, தமிழர் தரப்பினர் நான்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தனர். அதில் ஒன்று இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் வாக்குரிமை, குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதன் பின்னர், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் பேசி, அம்மக்களுக்கான வாக்குரிமை, குடியுரிமை என்பன வழங்கப்பட்டன. ஆனால், இன்றும் அவர்களில் பெரும்பாலானோர் காணி உரிமை அற்றவர்களாகவும் எவ்வித முன்னேற்றமும் அற்றவர்களாகவும் தேயிலைத் தோட்டத்தின் லயன்களில் வசிப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் இயற்கை அனர்த்தங்களால் அந்த மக்கள் தொடர்ச்சியாக தமது உயிரை அர்ப்பணித்து வருவதானது, ஏற்புடைய விடயமல்ல. ஆகவே, எமது பெருந்தோட்ட உறவுகளுக்கு இலங்கை அரசாங்கம், மலையகத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களை வழங்கி, இயற்கை அனர்த்தத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வடக்கு – கிழக்கில் அந்த மக்கள் குடியேறி வாழ விரும்புகின்ற சூழ்நிலையில், அதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கத் தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.

முன்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களின்பொழுதும் வடக்கு – கிழக்குக்குத் துறத்தப்பட்ட எமது உறவுகளை வரவேற்று உபசரித்து அவர்கள் அச்சமின்றி வாழக்கூடிய அடிப்படையில் காணிகளை வழங்கி, தேவையான உதவிகள் செய்யப்பட்டு, அவர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஏற்படுத்திக்கொடுத்தார்கள். அரசு எவ்வித உதவியையும் செய்யாமலேயே தமிழ்த் தொண்டு நிறுவனங்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

மலையக உறவுகள் வடக்கு – கிழக்கில் குடியேற விரும்பும் பட்சத்தில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் காணிகளை மட்டுமன்றி, அவர்களின் தேவையின் அடிப்படையில் காணிகளை வழங்கி, அவர்கள் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் மகத்துவமானது. மலையக மக்கள் வடக்கு – கிழக்கில் குடியேறுவது புதியதுமல்ல. அவர்களுக்கு இந்தப் பிரதேசம் அந்நியமானதுமல்ல.

இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளின் காரணமாகவே மலையக மக்கள் புலம்பெயர்ந்து வடக்கு – கிழக்குக்கு வந்தார்கள். போர் காரணமாக வடக்கு – கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

ஆகவே, புலம்பெயர்தல் என்பது வடக்கு – கிழக்கிலும் மலையகத்திலும் நடைபெற்றுக்கொண்டே வந்துள்ளது. இப்பொழுது இயற்கை அனர்த்தம் அவர்களைப் புலம்பெயரச் செய்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்க அரசு தவறினால் அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் வடக்கு – கிழக்கு முன்னிற்கும்.” – என்றுள்ளது.

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 638 வீடுகள் பகுதியளவு சேதம்!

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (13) மாலைவெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

194 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 794 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 638 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.

” பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முன்னுரிமை”

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவும்

அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே மக்களுக்கு அதிகமான இழப்பீடுகளை வழங்க முடிந்தது

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுங்கள்

இறால் பண்ணையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு மற்றும் சலுகை கடன் திட்டம்

நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, பிரதேசமாக மாத்திரமன்றி, நாடாகவும் கிடைக்கும் பொருளாதார நன்மைகளில் கவனம் செலுத்துங்கள்

– ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, முழு நாடும் ஒன்றாக முகங்கொடுத்த மிகப் பாரிய பேரழிவு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் செய்த பெரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, அந்த அர்ப்பணிப்பின் காரணமாகவே, மின்சாரம், நீர் மற்றும் வீதிகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் கணிசமான அளவு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வளவு அதிக அளவிலான இழப்பீட்டை வழங்க முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதுவரை கொடுப்பனவுகள் மற்றும் உதவிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு, உரியவர்களுக்கு மட்டும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிசெய்யவும், எந்த சூழ்நிலையிலும் அந்தக் கொள்கையை மீறுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக முழுமையாகத் தலையிடுமாறும் ஜனாதிபதி, பிரதேச செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது குறித்து இங்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றதுடன், அந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து, அந்த சந்தர்ப்பத்திலேயே தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

கலா ​​ஓயா, கீழ் பாலத்தின் நிர்மாணம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுலாத் துறைக்கு அவசியமான வகையில் தற்காலிக பாலம் ஒன்றை அந்த இடத்தில் அமைக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நிர்மாணங்களை மேற்கொள்ளும் போது அதன் அவசியத்தை தெளிவாகப் புரிந்துகொண்டும், முறையான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டும் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், பாரிய நிர்மாணத் திட்டங்கள், எந்தவொரு பயனும் இல்லாமல், தேவையான நன்மைகளை அடைய முடியாமல் கைவிடப்பட்டுள்ள விதம் குறித்து இங்கு நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நிர்மாணங்களை மேற்கொள்ளும்போது, ​​பிரதேசமாக மாத்திரமன்றி ஒரு நாடு என்ற வகையில் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை சீர் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், அதனை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார். மாவட்டத்தில் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகள் திருப்திகரமானதாக இல்லாததால், அதற்காக உள்ளூராட்சி நிறுவனங்கள் அவசரமாக தலையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளை தயார்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற சூழலை விவசாயிகளுக்கு விரைவில் உருவாக்கிக் கொடுக்குமாறும், மாற்று முறைகளில் கவனம் செலுத்தி, கைவிடப்படும் விவசாய நிலங்களை இயன்ற அளவில் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகளை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி நிறைவு செய்யுமாறும், அந்த இழப்பீடுகளை வழங்கும்போது, வனப்பகுதியா? அல்லது சட்டபூர்வமானதா? என்பதை கருத்திற்கொள்ளாமல் இழப்பீடுகளை வழங்குமாறும்,
வனப்பகுதிகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

கல்பிட்டி போன்ற பகுதிகளில் மண்வளத்தைப் பாதுகாப்பதற்கான விரிவான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

கால்நடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அதற்காக கீழ் மட்டத்தில் துல்லியமான தகவல்கள் தேவை என்றும், அனைத்து கால்நடைப் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அனர்த்த நிலைமை காரணமாக மாவட்டத்தில் 627 வீடுகள் முழுமையாகவும், 20,813 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அந்த மக்களுக்கு அவசியமான இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மீள்குடியமர்த்தலின் போது அவர்களை அரச காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறும், அரச காணியை வழங்க முடியாத நிலைமையில், காணி வாங்குவதற்காக வழங்கப்படும் 05 மில்லியன் ரூபாயை அவர்களுக்கு வழங்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்போது 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டின் உரிமையைப் பெறும் வகையில், முறையாக இந்த வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மீன்பிடித் தொழில் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், சேதமடைந்த மீன்பிடி படகுகளை பழுதுபார்ப்பதற்கு உதவி வழங்குவது, இறால் பண்ணைகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது மற்றும் வங்கிகள் மூலம் சலுகைக் கடன் வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

சிலாபம் வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், அடுத்த வாரத்திற்குள் நோயாளிகளை அனுமதிக்கும் பணிகளையும், பல பிரிவுகளின் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சந்தன அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, புத்தளம் மாவட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண செயலாளர் மற்றும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, புத்தளம் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-12-13

 

தொழில்நுட்ப, விஞ்ஞான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’ தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீட்டை ஈர்ப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’யின் கீழ், உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் (digitalization) போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயல்முறையை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சந்தைக்கு பிரவேசிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தாய்லாந்து, கம்போடியா போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!

தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.
இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது.

ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு வீரர்கள் காயமடைந்தனர்.

பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் விமானப்படை மூலம் கம்போடியா மீது தாக்குதல் நடத்தியது. இன்னும் மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரீயா விஹார் கோவில் சேதம் அடைந்தது.

இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது என டிரம்ப் அறிவித்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் நான் பேச்சு நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன். இதன் பயனாக தாய்லாந்து- கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. மேலும் அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும். இந்த மிக முக்கியமான விஷயத்தில் உதவியதற்காக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் பாதுகாப்பான காணி பெற அரசாங்க மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார்.

நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது;

“இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.

மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர் கொள்ளும் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை. இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் அவசரமாக கோருவோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி தோழர் அனுரா குமார திசாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடி உள்ளேன்.

பாதீட்டின் இறுதி நாளன்று, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையை செவி மடுத்தேன். இனிமேல் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்த-படுவார்கள் என அவர் சபையில் தன உரையில் கூறியதை நேரடியாக பாராட்டி, அதே அவகாசம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் பின், நமது எம்பீக்களும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து கூறி ஜனாதிபதியின் கவனத்துக்கு, காணி பிரச்சினையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே, இன்று இது தேசிய பிரச்சினையாக மாறு உள்ளதை இனிமேல் எவரும் மறுக்க முடியாது.

பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சி குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன். நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க-இஹல-கோரள-அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும், ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கிறது. அங்கே அனாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தை பெற்று கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்கு கூறினார்கள். நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்கு கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன். மீண்டும் ஒரு மழையோ, மண் சரிவோ வருமானால், கீழே உருண்டு வர தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும், கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்?

பாதுகாப்பான மாற்று காணிகள் இவர்களுக்கு வழங்க பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும். ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்று பட்டு செயற்பட்டு, நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம்.

ரணில் சொத்து குவிக்கும் தலைவர் கிடையாது: அறிவு, அனுபவத்தை அவரிடம் பெறலாம்!

ரணில் விக்கிரமசிங்க பௌத்த தரிசனங்களின் அடிப்படைகள் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார்.

இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை குவிப்பது கிடையாது.

தனது பெயரில் நிதியம் ஆரம்பிக்கமாட்டார். தனது பெயரில் வீதியை திறக்கமாட்டார். மக்களுக்கு அறிவை அனுபவத்தை மக்களுக்கு வழங்குவார். வழங்குவார்.பணத்தைவிட இதுவே மிக முக்கியம்.

ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தில் இருந்து இந்த அரசாங்கம் பயன் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு அனுபவமும் இல்லை.” என்றார்.

ரஷ்யா,உக்ரைன் மோதல் மூன்றாம் உலகக் போராக மாறும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்​கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.

இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறார்.

இதுதொடர்​பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் , உக்​ரைன் ஜனாதிபதி ஜெலன்​ஸ்​கி​யுடன் அவர் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளார்.

உக்​ரைன் போரை நிறுத்த 28 அம்ச திட்​டத்தை அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்​பர் மாதம் முன்​மொழிந்​தார்.

உக்​ரைனின் கிரிமியா பகுதி கடந்த 2014-ம் ஆண்​டில் ரஷ்​யா​வுடன் இணைக்​கப்​பட்​டது. இதை, ரஷ்ய பகு​தி​யாக உக்​ரைன் அரசு அங்​கீகரிக்க வேண்​டும்.

ரஷ்ய மொழி பேசும் மக்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கும் டொனெட்​ஸ்க், லுஹான்​ஸ்க் பகு​தி​களை ரஷ்​யா​விடம் முழு​மை​யாக ஒப்​படைக்க வேண்​டும்.

நேட்டோ அமைப்​பில் உக்​ரைன் இணைக்​கப்​ப​டாது. ஆனால் உக்​ரைனின் பாது​காப்​புக்கு அமெரிக்கா முழு உத்​தர​வாதம் வழங்​கும். அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தான 100 நாட்​களில் உக்​ரைனில் பொதுத்​தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும் என்பன உள்​ளிட்ட 28 அம்ச திட்​டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் முன்​வைத்​துள்​ளார்.

ஆனால் உக்​ரைன் ஜனாதிபதி ஜெலன்​ஸ்கி அமெரிக்​கா​வின் 28 அம்ச திட்​டத்தை ஏற்க மறுத்து வரு​கிறார்.

கிரிமி​யா, டொனெட்​ஸ்க், லுஹான்​ஸ்க் பகு​தி​களை ரஷ்யா ஆக்​கிரமித்​திருக்​கிறது. அந்த பகு​தி​களை மீட்​போம் என்று அவர் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார். அவருக்கு ஐரோப்​பிய நாடு​களின் தலை​வர்​கள் ஆதரவு தெரி​வித்து உள்​ளனர்.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கருத்து வெளியிடுகையில்,

ர ஷ்​யா, உக்​ரைன் போரில் கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் 25,000 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இதில் பெரும்​பாலானோர் ராணுவ வீரர்​கள் ஆவர். போரை தடுத்து நிறுத்த வேண்​டும். உயி​ரிழப்​பு​களை தடுக்க வேண்​டும் என்று அதிதீ​விர​மாக முயற்சி செய்து வரு​கிறேன்.

ரஷ்​யா, உக்​ரைன் மோதல் தொடர்ந்து நீடித்​தால் 3-ம் உலகப் போர் ஏற்​படக்​கூடும். இதை தடுக்க தீவிர முயற்சி செய்​கிறேன்.” என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரி​வித்​தார்.

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Almas Holdings (Pvt) Ltd இனால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

குறித்த காசோலையை Almas Holdings (Pvt) Ltd இன் தலைவர் இம்தியாஸ் புஹார்தீன்(Imtiaz Buhardeen) நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

கண்டி மாவட்டத்தில் வெள்ள நிவாரண வேலைத்திட்டங்கள் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு தொடர்ந்தம் ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாக தலைவர் இம்தியாஸ் புஹார்தீன் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தார்.

Almas Equities Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷமீர் புஹார்தீன், பணிப்பாளர்களான ரிஸ்வி அப்துல் மஜீத் (Risvi Abdul Majeed)‍, ருஸ்லி ஷம்சுதீன்(Ruzly Shamsudeen), Almas Equities Pvt Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி இபாத் மரிக்கார் (Ifadh Marikar) மற்றும் Almas Holdings Pvt Ltd ஆலோசகர் (மூலோபாய அபிவிருத்தி) தக்சில ஹுலங்கமுவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சியில் இணைந்த விஜயதாசவுக்கு 4 முக்கிய பதவிகள்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவராக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணியுடன் சமரசரம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஆறு வழக்குகளை விஜயதாச ராஜபக்ச மீளப்பெற்றுள்ளார்.

கொழும்பு மாவட்ட தலைவர் பதவிக்கு அப்பால் மஹரகம தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.கட்சியின் அரசியல் உயர்பீடத்துக்கும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அடுத்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, சுதந்திரக் கட்சிக்கு செல்வது பற்றி விஜயதான ராஜபக்ச தனக்கு தெரியப்படுத்தினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனது தலைமைப் பதவிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட பின்னர், பதவி விலகி அப்பதவியை விஜயதாச ராஜபக்சவுக்கு மைத்திரி வழங்கி இருந்தார்.

இதற்கு நிமல் சிறிபாலடி சில்வா தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இரு கப்பல்களை சிறைபிடித்தது ஈரான்!

0
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. முறையான அனுமதியின்றி இயங்கியது மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, இந்த அதிரடி நடவடிக்கையை ஈரான் கடற்படை...

காவத்தை சம்பவம் மிலேச்சத்தனம்: திகா கண்டனம்!

0
காவத்தை சம்பவம் மிலேச்சத்தனமானது என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

டித்வா சூறாவளி: இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...