நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
பேரிடர் நிவாரணப் பணியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை!
பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.
“ அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் விளைவிக்கப்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு சுதந்திரமும், அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச தொடர்பு இல்லை என விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பான முறையில் உறவு பேணப்பட்டுவருகின்றது.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி முறையாக பயன்படுத்தப்படாததால் சர்வதேசம் நம்பிக்கை இழந்து இருந்தது. ஆனால் எமது நிர்வாக பொறிமுறைமீது சர்வதேசத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டித்வா புயல்: உயிரிழப்பு, வீடுகள் சேதம், இடம்பெயர்வு விபரங்கள்…!
டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
203 பேர் காணாமல்போயுள்ளனர்.
5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 245 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.
மத்திய மலை நாட்டில் பிரதான வீதிகளில் சரிந்துள்ள மண்மேடுகளை அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.
மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமளிக்கப்படாது: பிரதமர் திட்டவட்டம்!
“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
“ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவது குறித்து நாம் கலந்துரையாடி வருகிறோம்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசராக கிஹான் ஹிமான்ஷு குலதுங்க நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையம்!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டோர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் முகமாக கொழும்பு 7, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்து காணப்படும் எதிர்க்கட்சி அலுவலகத்தில் அனர்த்த தகவல் மையமொன்று இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இதுவரை தீர்க்கப்படாது காணப்படும் பிரச்சினைகளை கிராம அலுவலர் மட்டத்தில் ஒன்று திரட்டுவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்து காணப்படுகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை இந்த தகவல் மையத்திற்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் நேரடியாகத் தெரிவிக்கலாம் அல்லது WhatsApp மூலம் அனுப்பி வைப்பதற்கான வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் நிமித்தம் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
0759 570 570
0761 660 570
0705 699 110
தகவல் மையத்துக்கு கிடைக்கபெறும் தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு இந்த மையம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்த தகவல் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இயங்கும்.
மலையக தமிழ் தேசியத்துக்கு, “தாயகம்” மலையக பூமிதான்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
மலையக தமிழ் தேசியத்துக்கு, “தாயகம்” மலையக பூமிதான்.
ஆனால், இதை நாமதான் சொல்லி திரியறோம். சிங்கள தேசம் அதை ஏற்கலை.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, அவிசாவளை, குருநாகலை, ஆகிய பிரதேச தோட்டங்களில் இருந்து, உழைச்சு, மண்ணுக்குள்ள போங்க. ஆனால், காணி எல்லாம் தர மாட்டோம்!
நுவரெலியா தவிர, ஏனைய கீழ் நாட்டு பெருந்தோட்ட காணிகளை, அயல் சிங்கள கிராமத்தவருக்கு பிரிச்சு கொடுப்போம். ஆனால், உங்களுக்கு தர மாட்டோம்!
இவைதானே இங்க நிலைபாடு?
இதான் மலையக காணியுரிமை பிரச்சினை..!
இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், தற்குறிகள் அல்லது வறட்டுவாதிகள் ஆவர்.
மாண்புமிகு மலையக தமிழர், மலையக மண்ணில் வாழணும்னு-தான் நானும் விரும்பறேன்.
ஆனால், பாதுகாப்பான காணி தர மறுத்தால் என்ன செய்வது?
ஆகவேதான், மாற்று யோசனையா, “வட-கிழக்கில் குடியேறி வாழ விருப்பமா?” என நான் சந்தித்த மலையுச்சியில் வாழும் மக்களை கேட்டேன். எனக்கே ஆச்சரியம், அவர்கள் உடனே உடன்-பட்டு கோஷம் போட்டார்கள்!
புலம்-பெயர்வால், வட-கிழக்கில் இன்று காலியாகி, காடாகி வரும் காணிகளை, உரிமையாளர், மனமுவந்து தந்தால் இது சாத்திய படலாம். அவ்வளவுதான்!
என்னில் குற்றம் காண்பவர்கள், தோழரின் பக்கத்தில், இருக்கும் மாண்புமிகு மலையக நண்பர்கள், தங்கள் “தோழரிடம்” சொல்லி, “பாதுகாப்பான காணிகளை”, மலையக மக்களுக்கு வாங்கி தாங்களே!
“இடம், கொஹேத தியன்னே, மனோ?” (காணி, எங்கே இருக்கிறது, மனோ?) என தோழர், என்னிடமே திருப்பி கேட்டார். ஆகவே, அவருக்கு இந்த காணி விஷயத்தில் புரிதல் இல்லை.
ஆகவே, உண்மை #NPP நண்பர்கள் (தற்குறிகள் இல்லை!) அவருக்கு விளக்கி கூறனும்.
வட-கிழக்கில், மலையக தமிழர் குடியேறுவதை, சிங்கள தேசம், அரசியல் நோக்கில் விரும்பாட்டி, நமக்கு பாதுகாப்பான காணிய இங்கே தரட்டுமே! நானும், அதானே கேட்கறேன்.
நீங்க காணியும் தர மாட்டீங்க! போகவும் விட மாட்டிங்க! இன்னொரு 200 வருஷங்கள், இப்படி மண்-சரிவு மலைகளில் இருந்து, உழைத்து, ஓடாகி, மண்ணுக்கு உள்ளே மடியனும் என்பதா, உங்கள் வறட்டுவாத தீர்வு? தற்குறி தீர்வு?
Re building Sri lanka திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re building Sri lanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைமையில் அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த அனர்த்த சூழ்நிலையில் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின்படி,சொத்துக்களுக்கு ஏற்பட்ட சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்த பின்னர் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அதுவரை இழப்பீட்டின் ஒரு பகுதி உடனடியாக வழங்கப்படும் என்றும் காப்புறுதி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது
இலங்கையில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது.
“நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” என குறித்த நூலுக்கு பெயரடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இதற்கான வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பிரதம விருந்தினராகவும், பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மூத்த இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக பணியாற்றிய சரத் பொன்சேகாவின் பதவிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை மையப்படுத்தி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்களையும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா உரையாற்றினார்.
கண்டி மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக்கூடாது: உரிய பகுப்பாய்வு அவசியம்!
கண்டி மாவட்டத்தில் ஆபத்தான பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தக்கூடாது: உரிய பகுப்பாய்வு அவசியம்!
கண்டி மாவட்டத்தில் ஆபத்தான இடங்களெனக் கருதப்படும் பகுதிகளுக்கு இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அனுப்பக்கூடாது. மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே ஏற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில் நாவலப்பிட்டிய பகுதிகளில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள சிலரை, அவர்கள் முன்னர் வசித்த பகுதிக்கே செல்லுமாறு வற்புறுத்தப்படுகின்றனர் என எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இப்படியான அணுகுமுறையை ஏற்கமுடியாது. ஆபத்தான பகுதியென அடையாளம் காணப்பட்டிருந்தால் அங்கு மக்கள் குடியேற்றத்தை மீள செய்யக்கூடாது. அதேபோல மீள்குடியேற்றத்தின்போது மக்களின் அபிப்ராயமும் கேட்டறியப்பட வேண்டும்.
அத்துடன், மக்கள் மீளக்குடியேறுவதற்கு பொறுத்தமான இடங்கள் எவை, ஆபத்தான பகுதிகள் எவை என்பன தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து அறிக்கை பெறப்பட்டே, உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக விசேட பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.” என்று வேலுகுமாரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.















